By

புதிதாக தெய்வங்களை சிருஷ்டிப்பதாய் இல்லை

கல்வெட்டியலைக் கற்றுக்கொண்டதோடு, அதை நடைமுறையிலும் பயின்ற காலம் இது. சிதம்பரமும் மாயவரத்தையும் ஒட்டிய கோவில்களுக்குச் சென்ற என் பயணங்கள், என்னளவில் முக்கியமானவை. குறிப்பாக மேலக்கடம்பூரில், ஒவ்வொரு கோஷ்டச் சிற்பத்தையும் அடையாளம் காட்டும் கல்வெட்டுகளை வாசித்த அனுபவம் இன்னும் தெளிவாக நினைவில் நிற்கிறது. சப்தஜாலமின்றி தமிழ் நாட்டு கட்டிடக்கலையின் அற்புதங்களை நேரில் காண விரும்புபவர்களுக்கு, மேலக்கடம்பூர் ஒரு சிறந்த தொடக்கமாக அமையக்கூடும்.

கனடாவில் இத்தகைய கலைப் பார்வை பொருந்திய இந்து கோவில்கள் இல்லை. அது இயல்பான ஒன்று தான். அதனால் கனடாவில் உள்ள இந்திய அல்லது இந்துக் கோவில்களுக்குச் செல்வதிலும் எனக்கு பெரிதாக ஆர்வம் ஏற்பட்டதில்லை. அதுவும் இயல்பான ஒன்று தான்.

கனடாவில் இருக்கும் இந்து கோவில்களில், தெய்வங்கள் சிறிய சதுர அறைகளுக்குள் அடைக்கப்பட்டிருப்பதுபோல் தோன்றுகின்றன. அவற்றை மையமாகக் கொண்டு மிகுந்த ஆடம்பரத்துடன் சடங்குகள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறுகின்றன. இதற்கும் மேலாக, கட்டிடமும் சிற்பங்களும் கல்வெட்டுகளும் இணைந்து உருவாக்கும் ஒருங்கிணைந்த கலை அனுபவம் பெரும்பாலும் இல்லாததாகவே உணர்கிறேன்.

இந்துக் கோவில்களைக் காட்டிலும், இங்கு மரபாக உருவான கிறிஸ்தவ தேவாலயங்களே எனக்கு அதிக ஈடுபாட்டைத் தருகின்றன. அந்த தேவாலயங்களின் வழியே, 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளின் கனடிய வாழ்க்கையையும் சமூக வரலாற்றையும் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

மேலும், பௌத்தம் இங்கு ஒரு நடைமுறை மதமாக வேரூன்றி வருவதையும் காண முடிகிறது. வணிகமயமாக்கப்பட்ட பௌத்தத்தின் முகத்தைக் கடந்து, தீவிரமான ஆன்மிகத் தேடலையும் அறிவார்ந்த சிந்தனையையும் முன்வைக்கும் பௌத்த மரபுகளைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள்ளது.

சமீபத்தில் லலிதாராம் தனது பதிவில் தக்கோலம் துர்க்கையைக் குறித்து பகிர்ந்திருந்தார். தமிழ் நாட்டில் நான் பார்த்து வியந்த துர்க்கை சிற்பங்களில் அதுவும் ஒன்று. அவரது பதிவை பார்த்த போது, தக்கோல துர்க்கை சில கணங்கள் மனதில் தோன்றி மறைந்தாள். இப்படி, என் நினைவில் எஞ்சியிருக்கும் தெய்வங்களை மட்டுமே கொண்டாடி வருகிறேன். புதிதாக தெய்வங்களை சிருஷ்டிப்பதாய் இல்லை.

– ஆர். கே. ஜி.

தக்கோலம் துர்க்கை

Leave a Reply

About the blog

RAW is a WordPress blog theme design inspired by the Brutalist concepts from the homonymous Architectural movement.

Get updated

Subscribe to our newsletter and receive our very latest news.

← Back

Thank you for your response. ✨