
“Speaking indifferently to him,
who had driven out the cold
and polished my good shoes as well.
What did I know, what did I know
of love’s austere and lonely offices?” – Robert Hayden
“குளிரை விரட்டிய அப்பாவிடம்,
என் காலணியை
மெருகேற்றிய அப்பாவிடம்
அலட்சியமாகப் பேசுவேன்.
எனக்கு என்ன தெரியும்?
ஆடம்பரமற்ற
தனிமையான
அன்பின் அலுவல்கள் குறித்து
உண்மையில் எனக்கு என்ன தெரியும்?”
ராபர்ட் ஹெய்டனின் கவிதையில் இடம்பெறும் தந்தை, வாரம் முழுவதும் கடுமையாக உழைத்தும், குளிர்கால ஞாயிற்றுக்கிழமை ஒன்றில், குடும்பத்திற்காக அதிகாலையில் எழுந்து தீயை மூட்டுகிறார். கறுப்பினக் குடும்பங்கள் எதிர்கொண்ட வறுமையின் சித்திரமாக இது அமைகிறது. ‘தந்தை’ என்ற பிம்பத்தை அகற்றிவிட்டு, நம்மால் எந்தவொரு கறுப்பினப் படைப்பையும் கடக்க முடியாது.
நாடுகடத்தப்பட்ட தந்தை,
போதையில் வீழ்ந்த தந்தை,
பல தூரம் நடந்து, உழைத்துக் கால்கள் வறண்ட தந்தை,
போலீஸின் தாக்குதலால் நசுக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட தந்தை,
நினைவுகளில் மட்டுமே வாழும் தந்தை.
இப்படி எத்தனையோ தந்தைகள்!
குழந்தைகள், குடும்பத்தைவிட்டு விலகிச்சென்ற தந்தைக்காக ஏங்குகிறார்கள். மனைவிகள், தங்கள் கணவர்கள் திரும்புவார்கள், மகிழ்ச்சியுடன் அனுபவித்த சுருக்கமான அக்காலத்தைத் தங்களுக்கு மீண்டும் அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள்.
உண்மையில், இவ்வளவு காலம் சென்றும், கறுப்பினம் கடந்துபோக முடியாத ஒரு தந்தையின் உருவம் எஞ்சி நிற்கிறது. கடலின் திரைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சூரியனாக, ஒரு காலத்தில் கண்கள் பார்த்து மறைந்துபோன பேருருவாக,
‘ஆப்பிரிக்கா’ என்னும் தந்தை.
– ஆர். கே. ஜி.
Leave a Reply