2026-10-04 அன்று மெலிஞ்சி முத்தனின் ‘காந்தப்புலம்’ நாவலின் அறிமுகக் கூட்டத்தில் நான் ஆற்றிய உரையின் தொகுப்பு:
வேதாந்தத்தில் இரண்டு வகையான பார்வைகள் உண்டு. வேதாந்தத்தின் மகாவாக்கியங்களுள் ஒன்றான ‘தத் த்வம் அஸி’ பரிந்துரைப்பதைப் போல, தன் இருப்பை பிறிதொன்றின் வழியாக நிறுவிக் கொள்வது ஒரு வகை. தத்: அது; த்வம்: நீ; அஸி: ஆக இருக்கிறாய்
இரண்டாவது வகையான ‘நேதி நேதி’ என்பது, “நான் இதுவல்ல, இதுவல்ல” என்கிற போக்கு. ஒருவரின் அகத்தின் மேல் பூசப்படும் அனைத்து வர்ணங்களிலிருந்தும் விலகி நிற்பது. நீங்கள் சுட்டிக்காட்டும் ‘அது’ நான் அல்ல என்ற பார்வையோடு இயங்குவது.
இவ்வருடத் தொடக்கத்தில் மிச்சிகன் மாநிலத்திலுள்ள ‘சாகடக் மாநிலப் பூங்கா’ விற்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். மிச்சிகன் ஏரியின் பதற்றமற்ற அலைகள் என்னைப் பெரிதும் ஈர்க்க, பெரும் ஆர்வத்துடன் ஏரிக்குள் இறங்கினேன். இதமான நீரின் சுகத்தில் எவ்வளவு தூரம் நடக்கிறேன் என்ற பிரக்ஞையே இல்லாமல், சுமார் 500 அடி வரை நீரில் நடந்தேன். அலைகள் அதிக உயரம் இல்லையென்றாலும், அவற்றின் பாரம் காரணமாக ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் செல்ல முடியவில்லை. கரையைத் திரும்பிப் பார்த்தபோதுதான், நான் எவ்வளவு தூரம் கடந்து வந்திருந்தேன் என்பதை உணர முடிந்தது.
தூரத்தில், மிச்சிகன் ஏரிக் கரையில் விரிந்திருந்த பிரம்மாண்டமான மணல் மேடுகள், அந்த ஏரியின் விளிம்பாக அழகுடன் காட்சியளித்தன. ஏதோ ஒரு கணத்தில், கரையில் நிற்கும் அனைத்தும், என் நண்பர்கள், மனைவி, பெயரற்ற மனிதர்கள், கரையில் விளையாடும் குழந்தைகள், கணக்கற்ற மண்துகள்கள், மரங்கள் என அனைத்துமே எனக்கு வெகுதூரத்தில் நிற்பது போலவும், என் அகத்துடன் அவற்றிற்கு எந்தச் சிறு தொடர்பும் இல்லாதது போலவும் தோன்றியது. என் தூய அகத்தை நான் அடையாளம் கண்ட கணங்களில் அதுவும் ஒன்று. இந்தப் பேருணர்வைத்தான் வேதாந்தம் ‘நேதி நேதி’ என்ற வாக்கியத்தின் வழியாக எட்ட முயல்கிறது என யூகிக்கிறேன்.
ஒருவனின் அகத்தை அறுதியிட்டு அடையாளம் கொள்வது ஒரு துருவம் என்றால், “நான்” என்கிற என் தன்னிலை நீங்கள் பரிந்துரைக்கும் எதுவும் அதுவல்ல என்பது இன்னொரு துருவம். மெலிஞ்சி முத்தனின் உலகம் இரண்டாவது வகையைச் சார்ந்தது.
மெலிஞ்சி முத்தனின் ‘காந்தப்புலம்’ நாவல் தொடக்கத்தில் நேரடிக் காட்சிகளாக ஆரம்பித்து, பின்னர் கனவு மற்றும் அதீத அனுபவங்களின் தொகுப்பாக உருமாறுகிறது. இந்நாவலின் கணிசமான பகுதிகளுடன் ஈடுபட வாசகரின் உழைப்பு பெருமளவில் தேவைப்படுகிறது. நான் தனிப்பட்ட முறையில் எழுத்து வகைகளுக்குப் பெயரிடும் வழக்கைப் பெரிதாகக் கொண்டாடுவதில்லை என்றாலும், இலக்கியக் கோட்பாடுகளில் சுட்டிக்காட்டப்படும் ஒரு கருத்துரு குறித்து இங்கே பகிர விரும்புகிறேன்.

தன்னிலைச் சுட்டுத்தன்மை (Self-Reflexivity) கொண்ட பின்நவீனத்துவப் புனைகதைகளில், வாசகரின் கவனம் கதைக்கருவின் மீது அல்லாமல், கதை சொல்லப்படும் விதத்தின் மீது ஈர்க்கப்படுகிறது. இவ்வகைப் படைப்புகளில், எழுத்தாளருடன் சேர்ந்து வாசகரும் இயங்க வேண்டியுள்ளது. இந்த காரணத்தால், வாசகர் படைப்புடன் தொடர்ச்சியான உறவுநிலைகளை உருவாக்கத் தூண்டப்படுகிறார்.
மெலிஞ்சி முத்தன் காந்தப்புலத்தில் படைத்துள்ள உலகம், படிமங்களும் குறியீடுகளும் நிரம்பியது. பல்வேறு பிறழ்வு மற்றும் மயக்க நிலைகளுக்கு மனதை கடத்தி, கனவுகளைக் கலைத்துப் போடுவதன் வழியாக, நம் மனதைத் தொகுத்துக் கொள்ள ஒரு வாய்ப்பை அளிக்கிறார். இதுவரை நாம் அரசியல், தத்துவம், மதம் குறித்து என்னவெல்லாம் அவதானித்துள்ளோமோ, நாவலின் இரண்டாவது பகுதியில் இடம்பெறும் படிமங்கள் அவற்றைத் தொகுக்கவும், விலக்கவும் உதவுகின்றன.
நாவலில் நான் பெரிதும் விரும்பிய கதாபாத்திரம் ‘மரிசலின்’. மனிதன் முடிவான ஞானம் என்று வகுத்துக்கொண்ட மதத்தின் போதாமையிலிருந்தே மரிசலினின் பயணம் தொடங்குகிறது. தேவாலயத்தில் பாதிரியாராக இருந்து, யதார்த்தத்திற்கும் போதனைகளுக்கும் உள்ள இடைவெளிகளைக் கண்டடைந்து, மதம் என்கிற பெருநிறுவனத்திலிருந்து மரிசலின் வெளியேறுகிறார். வெள்ளாடையைத் துறந்து, திருமணம், பிள்ளைகள் என்று மனிதன் என்னும் கருத்துருவைத் தொகுக்கும் அனைத்திலும் ஆழ்கிறார்.
ஒரு முன்னாள் பாதிரியார் திருமணம் செய்து கொள்ளும் போது அவர் அடையும் நாணமும் கூச்சமும் காந்தப் புலத்தில் கவித்துவமாய் படைக்கப்பட்டுள்ளன. ஆசை, குழப்பம், இழப்பு என்று தேவாலயத்தின் சுவர்கள் தராத அனைத்தையும் வாழ்தலின் வழியாக மரிசலின் கண்டடைகிறார். இறுதியில், இன்னொரு துறவி, “நீ இழந்த அனைத்திற்கும் இந்த வெள்ளாடையைத் துறந்ததே காரணம்” என்று கூறும் போது, மரிசலின் மிகவும் நிதானமாக ‘மல்வானா ஒப்பந்தம்’ போன்ற அரசியல் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி, சுத்த அறிவுநிலையில் தனது பதிலை அவரிடம் பகிர்கிறார். இறுதியில் ஒரு புத்தனின் தோற்றம் கொண்ட ஒருவராக, மரிசலின் கதாபாத்திரம் முழுமை பெறுகிறது.
‘நேதி நேதி’ சுட்டும் விலகலை, காந்தப்புலத்தில் இடம்பெற்றுள்ள ‘கடையிற்சாமி’ என்ற கதாபாத்திரத்தில் எளிதாக அடையாளம் காணலாம். கடையிற்சாமி போர்த்துகீசிய கோவாவில் உயர்நீதிபதியாகப் பணியாற்றி, மனிசப் பயல்களுக்கெல்லாம் நீதி சொல்லி சொல்லித் தீர்த்த களைப்பில், இலங்கைக்குச் சென்று துறவியாக மாற்றம் கொள்கிறார். மனிதன் சொல்லும் நீதி சின்னது என்பதை உணர்ந்து, பெரிய நீதியை நோக்கிப் பயணிக்கிறார். இத்தேடல் யாராலும் விளங்கிக் கொள்ள முடியாத கடைத்தெரு சித்தராக அவரை மாற்றுகிறது.
உண்மையில், முத்தனை இன்னும் பரவலாக அடையாளப்படுத்தலாம், அல்லது வணிகச் சூழலில் அது அமையாமலும் போகலாம். என் அளவில், புகழப்படும் எழுத்தாளுமைகள் நாட்காட்டி அட்டவனைப் போல பரிந்துரைக்கும் “100 சிறந்த புத்தகங்கள்” பட்டியலோடு, தமிழ் எழுத்தும் வாசிப்பும் அடங்கப் போவதில்லை (போகக் கூடாது). எழுத்தாளனின் ஆயுள் ரேகை இவற்றையெல்லாம் விடப் பன்மடங்கு நீண்டது.
இவ்விழாவில் இந்தியா / சென்னையைச் சேர்ந்த ஒருவனாக நான் மட்டுமே இருந்தேன் (ஒரு பெண்மணியைத் தவிர). இலங்கைத் தமிழ் மக்கள் நிறைந்த கூட்டத்தில் பங்கேற்றது மிகுந்த உற்சாகத்தையும் பணிவையும் அளித்தது. போரின் வடுக்களிலிருந்து மெல்ல நகர்ந்து, அறிவுத் தளத்தில் இயங்குவதற்கான வாய்ப்புகளை காலம் இறுதியாக நம் மக்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது. அந்த அளவில் உளமார்ந்த மகிழ்ச்சி.
டொரோண்டோவில் இயங்கி வரும் முதன்மையான கலைஞர்களுள் மெலிஞ்சி முத்தனும் ஒருவர். எழுத்தாளராக மட்டுமல்லாது, கூத்துக் கலைஞராகவும் திகழும் மெலிஞ்சி முத்தனுக்கு என் வாழ்த்துக்கள். தொடர்ந்து அவருடன் நண்பராக பயணிக்க விரும்புகிறேன்.
– அர். கே. ஜி.

Leave a Reply