இன்று எனது சிறுவயது நாயகர்களுள் ஒருவரான திரு. டி. எம். கிருஷ்ணா அவர்களின் இசை நிகழ்விற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவரது இசையையும், அவரது எழுத்துக்களையும் தொடர்ந்து கவனித்து வரும் ஒருவனாக, நீண்ட காலத்திற்குப் பிறகு, ஒரு ரசிகனுக்கே உரிய உற்சாக மனநிலையுடன் சென்றிருந்தேன்.

தான் நம்பும் விழுமியங்களுக்காக உறுதியோடு குரல் கொடுத்து வரும் மிகச் சில நேர்மையான இசைக்கலைஞர்களில் டி. எம். கிருஷ்ணாவும் ஒருவர். உதாரணமாக, இன்றைய நிகழ்ச்சியில் அவர் பாடிய பாடல்களின் பட்டியலை எடுத்துக்கொள்வோம்:
அப்பன் அவதரித்த கதாம்ரிதம் – பாபநாச சிவன்
முருகா முருகா என்றால் உருகாதோ – பெரியசாமித் தூரன்
வெள்ளை நிற மல்லிகையோ – விபுலானந்த அடிகள்
கருணாகரக் கடவுள் – தாயுமானவர்
எக்காலத்திலும் மறவேனே இனி நான் – ராமசாமி சிவன்
நள்ளிரவே சூரியனே நடுப்பகல் குளிர் காற்றே – கவிஞர் சேரன்
காணக் கண் கோடி வேண்டும் – பாபநாச சிவன்
தாய் இல்லை தந்தை இல்லை – எழுத்தாளர் பெருமாள் முருகன்
இரக்கம் வராமல் போனதென்ன காரணம் – கோபாலகிருஷ்ண பாரதி
நீ மட்டுமே என் நெஞ்சில் நிற்கிறாய் – எழுத்தாளர் பெருமாள் முருகன்
கூடித் தொழில்கள் முயல்வோம் – கவிஞர் ருத்ரமூர்த்தி
வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொருளாக விளங்கிடுவாய் – மகாகவி பாரதி
தாயுமானவர், கோபாலகிருஷ்ண பாரதி, பாபநாச சிவன் போன்றவர்களின் மரபார்ந்த பாடல்களில் தொடங்கி, எழுத்தாளர் பெருமாள் முருகன், கவிஞர் சேரன் போன்ற நவீனக் குரல்களின் பாடல்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பை, ஒரு வடிவமைப்பை, ‘கலை’ எனும் கருத்தாக்கத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட ஒருவரால் மட்டுமே எட்ட முடியும்.
உண்மையில், கலை நிறுவனமயமாகும் (Institutionalization) போக்கை எந்தவொரு உன்னதக் கலைஞனும் முதல் நிலையிலேயே உணர்ந்து விடுவான். அதன் இறுக்கத்திலிருந்து தன்னால் இயன்றளவு விலக முனைவான். ஒரு கலைஞன் சில நேரங்களில் இதனால் மிகைத்தன்மையுடன் செயல்படவும் கூடும். ஆனால், சாதாரணத்திலிருந்து அவன் விலகி நிற்பது, அவன் வெளிப்படையாகக் காண்பிக்கும் இந்த அறுவறுப்பின் வழியாகத் தான். விமர்சனங்களுக்கு அப்பால், கலைஞர்கள் ஆளுமைகளாக மாறுவது இந்த உண்மைத்தன்மைக்காக மட்டுமே.
நிகழ்ச்சி முடிந்தபின், நான் எழுதிய ‘அகம்’ நாவலை டி். எம். கிருஷ்ணாவிற்கு பரிசளித்தேன். அன்போடு அதை ஏற்றுக்கொண்டதோடு, தனது கருத்துகளைப் பகிர்வதாகவும் உறுதியளித்தார்.
ஒரு மாலை, சூரியன் அஸ்தமிக்கும் பொழுதில், திருநின்றவூர் ஏரியின் கரையில் நின்றபடி, டி. எம். கிருஷ்ணாவின் குரலில் ‘ஶ்ரீராமச்சந்திர கிருபாலு பஜ மன’ என்னும் துளசிதாசரின் பாடலை கேட்டபொழுது, ஒருவித அமைதியை உணர்ந்தேன். அந்த ஆதார உணர்வில், சட்ஜமத்தில் மனம் இன்று இன்னமொருமுறை நின்றது.
-ஆர். கே. ஜி
Leave a Reply