
பாடுவான் நகரத்தைத் தொடர்ந்து வாசித்த ஆர்.கே.ஜியின் இரண்டாவது நாவல் “அகம்”. அகம் எனும் சொல் இலக்கிய அளவிலும் தத்துவத்தின் அளவிலும் தனித்துவமான அர்த்தங்கள் கொண்டவை. சுய அடையாளத்தின் கருத்தியலாக “அகம்” எனும் சொல் குறிக்கப்படுகிறது. Self & Others எனும் தத்துவார்த்த முரணை அடையாளம் காணும் இடமாகவும் அந்த சொல் அமைகிறது. இந்த அகம் பலரிடத்தில் அகந்தையாக பரிணமிக்கிறது. அதனுள் சிக்கிக் கொண்டு விடுதலை வேண்டி நிகழும் அலைச்சல் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கொடுக்கிறது.
இந்த அகம் மூன்று நிலைகளாக பிரிவுகொள்கிறது.
1. தனக்கான பிரத்யேக அடையாளத்தை அடைதல். சமூகத்தின் பொது நீரோட்டத்திலிருந்து பிரிந்து திறன் வழியாகவோ, பாரம்பரிய பொருள்முதல்வாத அடிப்படையிலோ இந்த அடையாளத்தை நோக்கிய விழைவு.
2. அடையாளத்தை ஏற்றவுடன் அதனால் ஏற்படும் கீழ்மைகளுக்கு பொறுப்பேற்க இயலாமல் தத்தளிப்பது. மாறாக்க கீழ்மைகளை மறைக்க சில பொய்களைத் தமதாக்கிக்கொண்டு அடையாளத்தைத் தற்காத்தல்.
3. அடையாளத்தைத் துறந்து பொது நீரோட்டத்துடன் இணைதல் அல்லது அடையாளமற்று இருத்தல். இதைத் தத்துவங்கள் துறவோடு ஒன்றிணைக்கின்றன. யதார்த்தத்தில் இவை கீழ்மைகளை அங்கீகரித்தலும், அடையாளங்கள் எல்லோருக்கும் பொது எனும் நம்பிக்கையைப் பெறுதலுமாகிறது. எல்லோரிடமும் இருக்கும் அந்த அடையாளங்கள் காலத்தைப் பொருத்தும், சூழலைப் பொருத்தும் சிலருக்கு பொருந்துவதும் சிலருக்கு பொருந்தாமல் போவதும் இயல்பாகிறது. ஆனால் அதன் மீதிருக்கும் இச்சையைத் துறப்பதன் வழியே அடையாளங்கள் அர்த்தமற்று போகின்றன.
இந்த மூன்று அம்சங்களை வேறு வேறு கதைக்களங்களைக் கொண்டு அ-நேர்கோட்டு தன்மையில் எழுதப்பட்டிருக்கும் நாவல் அகம். சில கதைகள் மிக நீளமாகவும், சில கதைகள் கச்சிதமான சிறுகதைத் தொனியுடனும் அமைந்திருப்பது நாவலின் பலம். நீளமாக செல்லும் கதையின் பகுதிகளிலும் கதைசொல்லி மாறிக்கொண்டே இருப்பது நாவலின் வடிவத்திற்கும், கதையின் மையத்திற்கும், கதைசொல்லலின் மையமற்ற தன்மைக்கும் ஓர்மையைச் சேர்க்கிறது. நாவலின் இடையே வரும் கவிதைகள் சிறப்பாகவும் பொருந்தியும் அமைந்திருக்கின்றன.
திருநங்கைகளை மையப்படுத்தி சொல்லப்படும் கதை தத்துவார்த்த புலத்தில் சிறப்பிடத்தை அடைகிறது. அர்த்தநாரி எனும் அடைமொழியுடன் நாவலில் அடையாளப்படுத்துகிறார். தொன்மக்கதையொன்றும், சமகாலக் கதையொன்றும் இடம்பெறுகிறது. இரண்டிலும் வரும் நாயகர்கள் கலை வாழ்க்கையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார். ஆனால் அவர்கள் மீது காட்டப்படும் உடல்சார் அரசியல் சுய அடையாளங்களைக் கேள்விக்குள்ளாகுகிறது.
அடையாளத்திற்கு அர்த்தங்கள் முக்கியப்பொருளாகின்றன. அர்த்தநாரியை முழுமை பெறாத அர்த்தமாக ஆசிரியர் சொல்கிறார். இரண்டு முழுமையற்ற தன்மையின் வடிவம் என்று சொல்லத் தொடங்கி அவர்களுக்கான அடையாளங்கள் முழுமை பெறாமல் செல்வதன் தடத்தையும், அவர்கள் அடைய விரும்பும் முழுமையான நிலை எது எனும் கேள்வியையும் பின்தொடர்ந்து செல்லும் இடங்கள் மிகச் சிறப்பாக வெளிப்படுகின்றன. அடையாளங்கள் உடன்பாட்டு(Consensus) உலகத்தால் கிட்டுபவை. அர்த்தநாரிகளின் அடையாளங்கள் கூட்டு சமூகத்தின் பார்வைகளால் உருவாக்கப்படுபவை. அவர்களுக்கென்று இருக்கும் தனித்திறன்கள் அர்த்தமிழப்பதும் இந்த கூட்டு சமூகத்தின் கீழான பார்வையால் நிகழ்கின்றன. புனைவின் வழியில் இவற்றைத் தர்க்கமாக மாற்றியிருப்பது பாராட்டுதலுக்குரிய ஒன்று.
சத்யன் எனும் கதாபாத்திரம் ஒரு நடிகன். இந்த கதாபாத்திர வார்ப்பே கதையின் மையத்திற்கு வலு சேர்க்கிறது. சத்யன் கூத்துக்கலைஞரின் வம்சத்தில் வந்தவன். கூத்து – நாடகம் – திரைப்படம் எனும் சுழலில் கலையின் ஆதிவடிவத்திலிருந்து வழுவி புகழ் சேர்க்கும் அடையாளச் சுழலுக்குள் சிக்கிக் கொள்கிறான். கொள்கைகள், நடிப்பின் வழி எடுத்துக்கொள்ளும் பல்வேறு அடையாளங்களில் இழக்கும் சுயம் எனும் எண்ணச் சுழலில் சில ஆசுவாசங்களும், சில கீழ்மைகளும் வெளிப்படுகின்றன. அவற்றை ஆசிரியர் விமர்சனம் செய்யாமல் நிகழ்த்துக்கலையாக காட்டியிருக்கிறார்.
முன்னரே குறிப்பிட்டதுபோன்று நிறைய அத்தியாயங்கள் தனித்த சிறுகதைகளாக மிளிர்கின்றன. நாவல் வாசித்து முடிக்கையில் நிச்சயம் நிறைய தர்க்கங்கள் எழும். அவை தீர்வை நோக்கி நம்மை நகர்த்துபவை அல்ல. தீராத உரையாடலுக்கு உந்தித் தள்ளுபவை.
பாடுவான் நகரத்தைப் போன்றே மெடா ஃபிக்ஷன் வடிவத்தை நாவலின் இறுதி பகுதியில் கையிலெடுப்பது நாவலின் பலவீனம். இந்த வடிவத்தை நாவலின் தொடக்கத்திலிருந்து வைத்திருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும். தனிமனிதனின் சுயத்தை அடையாளம் காண்பதும், பின் அந்த சுயத்திலிருந்து விடுதலை நோக்கி அல்லலுறுவதும் நாவலின் மையம். அதற்கொப்பவே கதைசொல்லல், கதாபாத்திர வார்ப்பு அனைத்தும் அமையப்பெற்றிருக்கிறது. அதிகம் பேசப்படாத, அதே நேரம் தவறவிடக்கூடாத நாவல்.
அகம் | ஆர்.கே.ஜி | நாவல் | யாவரும்

Leave a Reply