பாடுவான் நகரம் – நாவல் வெளியீடு

என் முதல் நாவலான ‘பாடுவான் நகரம்’, யாவரும் பதிப்பகத்தால் நவம்பர் 9, 2020 அன்று சென்னையில் வெளியிடப்படுகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.

இதற்குத் துணையாக இருந்த என் குடும்பத்தாருக்கும், தொடர்ந்து ஊக்கவித்த நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

இந்நேரத்தில் எனக்கு ஆசான்களாக, புத்தகங்களின் உலகை அறிமுகம் செய்த திரு நரசிம்மன் (பெங்களூர்) அவர்களையும், திருமதி விஜயலட்சுமி வெங்கடேஷ் (சென்னை) அவர்களையும் நினைவு கூர்கிறேன்.

எண்ணற்ற முறை பெங்களூருக்கும் சென்னைக்கும் இடையில், புத்தகங்களை எனக்களிக்கும் பொருட்டு ரயில்களில் சுமந்து வருவது நரசிம்மனின் வழக்கம். இவர் அறிமுகமில்லையென்றால், ர. சு. நல்லபெருமாள் போன்ற ஆளுமைகளை, அக்காலத்தில் நான் வாசித்திருக்க வாய்ப்பில்லை. என் திருமணம் வரை, அவரிடமிருந்து புத்தகங்களை மட்டுமேப் பரிசாக வாங்கி வந்துள்ளேன். பிரயாணங்களின் மேல் நான் கொண்டுள்ள காதலுக்கும் ஏதோ ஒரு வகையில் இவர்தான் தொடக்கப் புள்ளி.

நரசிம்மன் அவர்களுடன்

விஜயலட்சுமி அவர்கள் பள்ளித் தோழன் அனிருத்தின் தாயார்.

ஒரு காலத்தில், வித்தியாசமாக எதையாவது செய்து விட வேண்டும் என்று திக்கின்றி சுற்றிக் கொண்டிருந்த எனக்கு அவர் சொன்னது…

“பூமி மாதிரி அலட்டிக்காம மழைய வாங்கணும்.”

சலிப்பான வாழ்க்கைத் தருணங்களில், இவருடன் அமைந்த உரையாடல்கள் எனக்கு பல முறை உத்வேகத்தை தந்துள்ளன. தீவிர வாசகி என்பதால், இலக்கிய நூல்கள் பல இவர் மூலம் எனக்கு அறிமுகமானது.

திருமதி விஜயலட்சுமி

நரசிம்மன், விஜயலட்சுமி இருவரும், ஞானத்தையும் அன்பையும் ஒரே இடத்தில் பெறுவதற்கான வாய்ப்பை இள வயதில் எனக்கு அமைத்து தந்தனர் என்று சொன்னால் மிகையாகாது.

எழுத்தில், பாடுவான் நகரத்தை முதல் படியாகவே உணர்கிறேன்.

புத்தகம் வாங்குவதற்கான விவரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும். நாவலின் களம் குறித்து தனி ஒரு கட்டுரையாகத் தருகிறேன்.

புத்தகம் வெளிவர முயற்சிகளை எடுத்துக் கொண்ட பதிப்பாளர் திரு. ஜீவ கரிகாலன் அவர்களுக்கு என்றும் என் நன்றிகள்.

அன்புடன்
ஆர். கே. ஜி.

%d bloggers like this: