பாடுவான் நகரம் 

பாடுவான் நகரம்

அரங்கமா நகர் விழித்தது.

காகங்கள் மொட்டை கோபுரத்தில் அமர்ந்து, விடியலைக் கரைந்தழைத்தன. காவிரி, குடையாக நின்ற தென்னைகளைத் தழுவி நகர்ந்தாள். நகர் காணும் விடியலை வடபத்ரர் இன்றும் ஏற்றார். இரவின் பனி, நகர் முழுதும் ஓர் அங்கதக் குளிரைப் போர்த்தி நின்றது.

அம்மா மண்டபம் நுழைந்த வடபத்ரர், சுழித்தோடும் காவிரியைக் கண்டார். காவிரி அவர் அளவில் கோதையே. கண் எட்டும் தொலைவில், நதியின் மடியில் வேளாளர் நட்ட பசும்நெல், நதி மீது வீசும் காற்றால் அசைந்தாடியது. அக்கணம் வடபத்ரரின் பின்பக்கம் ஒலி எழ, ஒலி எழும் திசைநோக்கித் திரும்பினார். அவ்வொலி, அள்ளித்தழுவ வரும் சிறுமி போல் குதித்து வந்தது. பேரி ஓங்க, முழவதிர கோவில் ஆனை முன் செல்லும் பாகனை சிறிதும் மதியாது, தன் போக்கில் மண்டபத்தின் வாயிலை அடைந்து கொண்டிருந்தது. சிறு கண்களில் நதியின் விஸ்தாரக் காட்சியைக் காண முயன்றது.

ஆனையின் மேல் தளத்தில் அமர்ந்த பட்டர், தன் வயிற்றோடு நீர் கலசத்தை அணைத்துக் கொண்டு, ஆனையின் அசைவிற்கு ஈடுகொடுத்துத் தள்ளாடி அமர்ந்திருந்தார். பட்டரின் பின்வாக்கில் அமர்ந்த கோவில் பணியாள் கவரி வீச, ஆனை படி இறங்கா பத்தினி போல், ஒவ்வொரு படியிலும் மூச்சிரைத்து, கால் பதித்து இறங்கியது. படித்துறையின் கடைப்படியில் பின்னங்கால்களை மடித்து, சீராக நீரில் தன் முன்கால்களை நீட்டி அரை மண்டியிட்டு அமர்ந்தது. ஆனை தாழ, பட்டர் கலசத்தில் நீர் மொண்டு நிரப்பினார்.

முடிந்த வரை, ஆனை பாகனின் எவ்வித போதனையுமின்றி அசைந்தெழுந்தது. மந்திர உச்சாடனத்திலிருந்த பட்டர், பத்ரரைக் குசலம் விசாரிக்க, ஆனை படித்துறை விட்டு அயர்ந்து நகர்ந்தது. கவரி வீசிய பணியாளன் ஆனை மண்டப வாயிலைத் தொடும் நேரத்தில், முதுகு வளைத்து நதியைக் கண்டு, ஆனையுடன் அவனும் பெருமூச்சிட்டபடி நகர்ந்தான்.

புலரியில், அம்மா மண்டபம் ஆங்கிங்கு இரண்டு மூன்று பார்ப்பனர் திரிவதின்றி, நதியுடன் தனிமையில் கிடந்தது. ஆயன் ஒருவன், பசுவை நீருள் அமர்த்தித் தானும் குளியலில் ஈடுபட்டான். நீரின் போக்கிற்கு, பசுவின் மணி ஒலித்துக் கொண்டிருந்தது. பத்ரர் இக்காட்சிகளைக் கண்ட மாத்திரம், வைணவப் பெரியவர் ஒருவர், காவிரி ஒக்கும் நதியும், அரங்கம் ஒக்கும் கோவிலும் இல்லையென்றால், வைகுண்டம் துறந்து அரங்கம் திரும்புவதாகத் துணிந்து மொழிந்ததை எண்ணிக் கொண்டிருந்தார்.

பத்ரர் அரங்கத்தில் மூக்கன் என்றும், அரையர் சாமி என்றும், பாடுவான் என்றும் பல பட்டங்களைக் கொண்டிருந்தார். கண்ணாடிக் குழித்தக்கூர் மூக்கும், ஆந்தைக் கண்களும், தென்கலை நாமமும், நரைத்த முடியும், சிரசில் முடித்த சிகையும், வாயில் குதப்பும் வெற்றிலையும், நிமிர்ந்த மார்பும், கொழுப்பேறா சருமமும், அரையில் சார்த்திய பஞ்சகஜமும், ரப்பர் செருப்பும் அவரை அடையாளம் செய்தன.

வடபத்ரர் இயன்ற வரை மோன அனுபூதியில் லயித்தார். அவர் அகம் அரங்கனை மிக அணுக்கமாகவும், தொலைவிலும் காணும் விந்தையை அறிந்திருந்தது. சந்தியா வந்தனம் முடித்து, தன்வீடு நோக்கி நகர்ந்தார். பாடுவான் வீதியில் நுழைய, தன் வீட்டின் திண்ணையில், உடல் வெளுத்து, ஒடிந்த பெரியவர் ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டார். பெரியவரின் கண்கள், குழியுள் தவறி வீழ்ந்தவை போலத் தோன்றின. உடல் மீனின் சருமம் போன்று திகழ்ந்தது. தென்கலை நாமமிட்ட கரும் நெற்றி. தேஜஸுக்குக் குறைவில்லை. வீட்டில் நுழையும் முன், பெரியவரின் தீர்க்கக் கண்களைக் கூர்ந்தார்.

“மாமா நீங்க யாரு?”

“தேசிகன்.”

“ஏதாவது சாப்டேளா?”

“உன்னைப் பார்க்கணும்னு தான் அல்லிக்கேணிலேர்ந்து வந்திருக்கிறேன். வயசு எண்பதாகுது. பன்னாத தத்துவ விசாரம் இல்ல. ஆகமம், தந்திரம்னுப் பொறட்டிப் பொறட்டி, இதோ பெருமாள் அடுத்த பக்கத்தில விளங்கிடுவார்னு ஓஞ்சது தான். பக்தி பாவம் கூடவே இல்ல. ஆனா, புத்திக்கடந்த நிலைல நீ இருக்க. உன் கால சேவிச்சுட்டுப் போலாம்னு தான். அரையரில் ராஜாடா நீ. பெருமாள் உனக்காக இறங்காத நாளில்லை. வயசால் தானோ என்னவோ, உனக்கு சீடனாக இன்னும் மனம் ஒப்பவில்லை. நல்லா இரு.”

பெரியவரின் கண்கள் குழியில் கைப்பிடித்தேறி, பத்ரரின் இறுகிய கால்களை சேவித்து மீண்டும் குழியுள் விழுந்தன. பத்ரர் செய்வதறியாது திகைத்து நின்றார்.

பெரியவர் தளர்ந்து, மெதுவாகத் திண்ணையிலிருந்து எழுந்து, பாடுவான் வீதியை அடைந்தார். மீண்டும் பத்ரரின் கண்களைக் கூர்ந்து, தன்னுள் எழும் சப்தங்களை அடக்கி, வீதியை விட்டு மறைந்தார்.

பத்ரர், கிணற்றடியில் கால்களைக் கழுவியபடி, சுய விசாரம் செய்யத் தொடங்கினார். பெரிவரின் சொற்கள், குழித்தாளமிடும் அற்ப அரையனுக்கு மிகையானவையே. அரங்கன் அவர் வழி மாயையைத் தூண்டுவதாக எண்ணிக் கொண்டார்.

பின், சடங்காக கவளத்தை விழுங்குவது போன்று, கோவில் பிரசாதத்தை உண்டார்.

பின் பகலில் பத்ரரின் வீட்டுத்திண்ணையில் மூன்று வைணவப் பெரியவர்கள் கூடி, தம் ஈர வேட்டி திண்ணை மண்ணில் உரச அமர்ந்தனர். எதிர் திண்ணையில் அமர்ந்த பத்ரர், தீர்க்கக் கண்ணில் மூவரையும் அசையாது பார்த்தபடி இருந்தார். மூவரும், கசங்கிய காகிதத்தில் கிறுக்கலாய் எழுதிய வாக்கியங்களைப் படித்து முனகிக் கொண்டனர். மூப்பேறிய இரங்காச்சாரி, தன் ஒடிந்த இடையில் அங்கவத்தைச் சுற்றி, திண்ணை மேட்டில் துள்ளி எழுந்தார். நரைத்த தாடியும், கார் பிடித்தப் பற்களும், பொக்கை வாயொடும், தாயின் அகக்கனலை சொல்லால் கிளறினார்.

“பட்டுடுக்கும் பாவை… பட்டுடுக்கும் பாவை
அயர்ந்திருக்கும் பாவை… அயர்ந்திருக்கும் பாவை.”

இரங்காச்சாரி அனாயாசமாகக் கண்ணில் நீர் திரட்டினார். இயல்பிலேயேத் தளர்ந்த அவர் கைகள் மேலும் தளர்ந்து, தாயின் இயலாமையைத் தெரிவித்தன. கைகள் ஏதும் அறியா சிறுபாவை, மையல் கொண்டு, மணம் எதிர் நோக்க, கண்டவாறு உடலில் பட்டுடுத்தும் பாவனை செய்தன. கண்கள், ஆசை கொண்டு அலங்கரித்தத் தன் பாவை, நிலை அறிந்து, சேராக்காதலால் அயர்ப்பில் அமிழ்வதைத் தெரிவித்தன. நாச்சியாரின் நிலையை உயிர் தீட்டினார்.

திண்ணைச் சுவற்றில் விழுந்த அவர் அசைவின் ஒவ்வோர் நிழலும், உயிரற்றுத் தளர்ச்சியையேக் கூவியது. இரங்காச்சாரியால் அச்சொற்களைக் கடக்க இயலவில்லை. பட்டுடுக்கும் பாவை… பட்டுடுக்கும் பாவை… குளத்தில் மீன் நெளிவது போன்று, நீந்திக் கொண்டிருந்தார். காலம் கடப்பதை அறிந்து, இரங்காச்சாரித் தன்னைத்தானே ஆசுவாசம் செய்து, “கடல் வண்ணன் இது செய்தார் காப்பார் யாரோ?” என சுவரில் விழும் தன் நிழலை வெறித்துப் புலம்பினார். அவர் கண்கள் மனம் எட்டா மாயனை நோக்கிச் சென்றன. ஆழ்சூழ் அகல் பிரமத்தை ஜீவன் துரத்துவதுப் போல், மகள் பேதையாகத் திரிகிறாளே எனவும், ஜீவனின் உன்னதத் தேடலை தாயமாக விளையாடும் அவனைக் கடிந்தார்.

“எம்பெருமான் திருவரங்க மெங்கே?, என்னும்..”

இவ்வரையில் சுழன்றிருந்த இரங்காச்சாரி, திண்ணையில் ஓர் இடத்தில நின்று, நோய் நீக்க வந்திருந்த கட்டுவிச்சியின் போதனைக்கு செவி சாய்ப்பதெனும் முடிவேற்றார்.

பத்ரர் திண்ணை சுவற்றில் சாய்ந்தவாறு தெருவில் எழும் பகல் புழுதியில் ஆழ்ந்திருந்தார். மாட்டு வண்டியில் வைக்கோல் ஏற்றிச் செல்லும் வியர்வை படிந்த முதியவன், திண்ணைக் காட்சிகளைக் கண்டு நகைத்தான்.

“ஓதுறத விட்டுப்புட்டு ஆட வந்துட்டானுங்க.”

பத்ரர் சுவரில் சாய்ந்தார். கண்கள் அயர்ந்து மாலையில் விழிப்பு கொண்டன. விழிக்க, இரங்காச்சாரியும் உடன் வந்த பெரியவர்களும் துயில்வது தெரிந்தது.

பத்ரர், வீட்டின் அளவை நூறுமுறை அளக்கும் தன் பத்தினி போய் சேர்ந்தது முதல், வீடு வாய் பிளந்தபடி தான் கிடக்கிறது என எண்ணினார். கிணற்றடி அடைந்து, தொலைவில் தெரியும் மொட்டை கோபுரத்தைப் பார்த்தார். காலையில் கரைந்த காகங்கள், மாலையில் அவ்விடமே சேர்ந்தன.

மாலையில், தாரைகள் அரும்பும் காலத்தில், பத்ரரும் இரங்காச்சாரியும் மொட்டை கோபுரம் கடந்து கருட மண்டபம் அடைந்தனர். தெருவெங்கும் மின்விளக்கு சுடர்ந்து கொண்டிருந்தது. பத்ரர் கைகளில் பொதிந்த அரையர் குல்லாய், மின்ஒளியில் ஒளிர்ந்தது. நீலப்பட்டால் குல்லாயை வேய்ந்திருந்தனர். நுனியில் கூம்பு போன்ற பித்தளையை அழுத்தி, கிரீடமாக அமைக்கப்பட்டிருந்தது. சங்கும், சக்கரமும், நாமமும் வெண் வண்ணத்தால் தீட்டி, காதுகளைத் திரையிடும் வகையில் குல்லாயை அமைத்திருந்தனர். இருவரும் விரல் இடுக்கில் குழித்தாளத்தைச் சொருகியிருந்தனர்.

நேராக கர்ப்ப துவாரம் அடைந்து, காலமற்றக் கண்களோடு கிடந்த அரங்கனை சேவித்தனர். யோக நித்திரையில் இருந்த முடிவற்ற மேனி, கர்ப்பத்தின் எல்லா திசையையும் ஆக்கிரமித்து, ஒளியின் சிறு குவியலையும் துரத்திக் கொண்டிருந்தது. பட்டர் இருவர் கைகளிலும் துளஸி தீர்த்தத்தை வார்த்தார். இருவரும் நகர்ந்து, ஆயிரம் கால் மண்டபத்தை அடைந்தனர். நம்பெருமாளின் வருகைக்காக ஈசலாகக் கூடிருந்த சனம் காத்திருந்தது. களிப்பின் உச்சமாக மண்டபம் ஒலித்தது. பத்ரர் ஓரமாக நின்று, தூணில் புடைத்த அஸ்வ சிற்பங்களைக் கண்களால் வருடிக் கொண்டிருந்தார்.

அக்கணம், பறையும் சங்கும் ஓங்க, பந்தம் சுமப்பவர்கள் முதலில் நுழைந்தனர். நாத வித்வான்களும் அரையரும் தாளமிட்டபடி தொடர்ந்தனர். தேர்தளம் போன்று அமைந்த சபை, மையத்தில் சிற்பி வரைந்த கற்கோலமென நின்றது.

யாவரும் அச்சபை நோக்கி, மனம் குவிக்க முனைந்தனர். பறை மும்முறை ஒலிக்க, நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். பெருமான், வெண் மஞ்சள் சிவப்போடு கதம்ப மாலை அணிந்து, அபய ஹஸ்தத்தில் பச்சை மரகதம் பொதித்திருக்க, சிரசில் கார்நீலக் கிரீடமும், பச்சைப் பீதாம்பரமோடு ரங்க இராஜனாக நின்றான். புஜம் புடைத்தப் பல்லக்கு தாங்கிகள், உடல் வியர்த்து நின்றனர். பெருமானின் கண்களும், கால்களும் கண்ட சனம், கதிர் நோக்கும் தாமரையாகின. பெருமான் சபை மையத்தில் எழுந்தருளினார்.

நம்பெருமாள் எழுந்தருள, வடபத்ரர் அரையர் குல்லாவை அணிந்து திருமாலை எதிர்நோக்கி நின்றார். தாளங்கள் திமிராது அடங்கியிருந்தன. பட்டர்கள் பெருமான் அணிந்த பட்டை, குல்லாயின் மீது பரிவட்டமாகச் சூடினர். இரங்காச்சாரியும் இதை ஏற்றார். மங்கள தீபம் காட்டி, பெருமான் எதிர் நின்ற பட்டர் உரக்க ஒலித்தார்.

“வாய்மொழி கேட்கும் பெருமாள் … நம்பெருமாள்.
வாய்மொழி கேட்கும் பெருமாள் … நம்பெருமாள்.”

நம்பெருமாளின் கண்கள் பத்ரரைச் சேர்ந்தன. மும்முறைப் பறை ஒலித்தது. காற்று சூழ்வது போல், சபையில் நிசப்தம் சூழ்ந்தது.

இரங்காச்சாரி கைத்தாளங்களை உரச, சப்தம் நிசப்தத்தை விழுங்கியது. பண்ணற்ற, சொல்லற்ற, தாளம் மட்டும் ஒலிக்க, பத்ரர் பெருமானின் மேனி முழுதும் உள்வாங்கிக் கொண்டிருந்தார். தாளத்தின் ஒவ்வோர் அதிர்விலும், ஒவ்வோர் அங்கமும் மனதுள் தையல் கொண்டன.

பத்ரர், இராஜனுக்கு இசைக்கும் இராஜ கந்தர்வனாக உருக்கொண்டார். அவர் கைத்தலத்தில் முதல் ஒலி எழுந்தது. அவ்வொலி தூணில் புடைந்த சிற்பங்களை, வெறித்த மண்டபக்கூரையை அறைந்து, ஒலிக்குமிழி போல் ஆங்காங்கே வெடித்து மறைந்தது.

அரங்கமெங்கும் நிசப்தம். பத்ரரின் மனம் அகாலத்தை அடைந்தது. நாயிகா பாவம் பூண்டார். கண்களின் நீர் பனி உருகுவது போல் கலங்கி ஓடியது. பராங்குச நாயகியாக அவர் இடை மெலிந்தொடிந்தது. அமுங்கிய மார்பின் காம்புகள் புடைத்து மேலெழுவது போல் நிமிர்ந்தார். பட்டர் சாத்திய ஆறடி வெண் சாமந்தி மாலை அவர் தோள் பாரத்தில் ஏற்றியதும், நிமிர்ந்து சனத்தை நோக்கினார். சனம் ஏதோ ஆதரவற்றப் பெண் தம்முன் நிற்பது போன்று உணர்ந்தனர். நம்பெருமான் வரத ஹஸ்தத்தால் திருவடி சேவை நிகழ்த்தினான். அவன் இடக்கை கால் நோக்கியும், கண்கள் வான் நோக்கியும் திகழ்ந்தன. வான் முதல் அடிவரை, விசும்பு சூழ் பரத்தை, பத்ரர் அகக்கண்ளால் விழுங்கினார். மீண்டும் சனத்தைக் கடிந்து நோக்கினார். குழித்தாளம் அதிர, நீலக்குல்லாயும், பரிவட்டமும் அவர் அசைவிற்கு அசைந்தன. மார்பிற்கு நேராக தாமரை போன்று வலக்கையினைக் குவித்தார். இடக்கை நிலத்திற்கு இணையாக நீட்டி, தாமரை போன்று குவித்த விரல்களை நாயகியின் மனம் சுட்டுவது போல் அபிநயம் பிடித்து பராங்குச நாயகியாகப் பாடத் தொடங்கினார்.

“என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே…”
“என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே…”

தாயின் மனம், இறைவனின் இருப்பை அறிந்தும், அறிய மறுத்தும், அறியாமையில் இருக்க, நாயகி நம்பியின் மேல் கொண்ட காதலைத் தீவிரமாக உரைக்கிறாள். அவள் அகம் உயிர்த்திருக்கும் வரை, பெருமானின் திவ்ய சித்திரத்தை அவளால் கடக்க இயலவில்லை.

“தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்
மின்னும் நூலும் குண்டலமும் மார்வில் திரு மருவும்,
மன்னும் பூணும் நான்குதோளும் வந்தெங்கும் நின்றிடுமே.”

பத்ரர் திருமானின் ஒவ்வொரு ஆபரணமும் கூறுகையில், நம்பெருமானைக் கைநீட்டிச் சுட்டியவாறு அபிநயம் பிடித்தார். இவை ஒன்றில் நீ அணிய மறந்தாலும், தொண்டன் தன் மனதுள் தானே அலங்கரிப்பான் என நாயகியாக திருமாலின் சித்திரத்தை சபை முன் வரைந்தார்.

“வந்தெங்கும் நின்றிடுமே…. வந்தெங்கும் நின்றிடுமே.”

பித்தேறிய நாயகியாகத் திருமானைக் கடிந்தபடி பத்ரர் பார்த்து நின்றார். காட்சிகள் நகர, காலம் நகர்ந்தது

இரவின் களி யாவும் முடிந்து, பத்ரர் காவிரியின் கரை அடைந்தார். அவர் அகத்துள் இரவின் நிசப்தம் கூடியிருந்தது. இரவில் நீரின் அசைவு மேலும் மோனத்தைக் கிளறியது. இறந்த மனைவியின் சித்திரம் அவர் அகத்தைச் சுட்டது. ஒவ்வொரு முறை நாயிகா பாவம் பூணும் தோறும், தன் மனைவியை அவர் உயிர்கொள்ளச் செய்வதாக எண்ணினார்.
அவர் பத்தினி இரங்கத்தில் உயிர் விடவேண்டும் என நித்தம் சொன்னபடியே இருப்பாள். அப்படியே உயிரும் துறந்தாள்.

பெரிய பெருமானின் கண்களும், நீள் மேனியும், ஆழ் சயனமும் பற்றி அவள் பேசாத நாள் இல்லை. இடையை வருத்தி, நாச்சியாராக சேவையில் ஆடுவது அவர் மனைவி இலக்குமியே.

பத்ரர் படிகளில் இறங்கி, நதியுள் முங்கி எழுந்தார். முடிந்த குழல்கள் அவிழ்ந்தன. காவிரி தான் விரஜை என்பதில் சிறு கர்வமுமின்றி ஓடிக்கொண்டிருந்தாள்.

அரங்கம் உறங்கியது.

– ஆர். கே. ஜி.

%d bloggers like this: