களிறு வருவன கண்டேன்…

கவளம தக்கரடக் கரியுரி வைக் கயிலைக்

களிறு விருப்புறும் அக் கனக முலைத்தரளத்

தவளவ டத்திடையிற் பவளமொ டொத்தெரியத்

தழலுமிழ் உத்தரியத் தனி உரகத்தினளே

கலிங்கத்துபரணியில், ‘தேவியைப் பாடியது’ என்னும் அதிகாரத்தில் வரும் ஜெயங்கொண்டாரின் வரிகள் இவை.  சிவபெருமானை ‘கயிலைக் களிறு’ எனக் கவித்துவமாக சொல்கிறார்.

பலருக்கும் தெரிந்த பாடல் தான். அப்பர் பெருமானின் ஐயாறு பதிகத்தின் முதல் பாடல்…

Screen Shot 2018-07-18 at 10.52.19 PM.png

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி

போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது

காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்

கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்

இரண்டு யானைகள், முகம் திருப்பாது, கழுத்து மணிகளை அசைத்தொலித்து, அதனால் பூடகமாகத் தமக்குள் பேசிக் கொண்டும், மெத்தனமாக இலக்கின்றி நடந்தும், காலம் கடத்துவது போன்ற ஓர்  படிமத்தை இவ்வரிகளால் காண முடியும்.

பலவும் கூறுக அஃது அறியாதோரே,

அருவி தந்த நாள் குரல் எருவை

கயம் நாடு யானை கவள மாந்தும்

மலை கெழு நாடன் கேண்மை

தலை போகாமை, நற்கு அறிந்தனென் யானே

– கருவூர்கிழார், குறுந்தொகை

எருவை (புல்) தின்னும் யானைகளைக் கொண்ட நாடவன் என் நட்பை அறிவான் என்கிறாள் தலைவி.

களிறெனும் படிமம் தமிழில் எந்த கவியும் தொட்ட உச்சம். தொடக்கூடியதும்.

கம்பனும் விதிவிலக்கல்ல …

உருகு காதலின், தழை கொண்டு, மழலை வண்டு ஓச்சி,
முருகு நாறு செந்தேனினை முழை நின்றும் வாங்கி,
பெருகு சூல் இளம்பிடிக்கு, ஒரு பிறைமருப்பு யானை,
பருக, வாயினில், கையின் நின்று அளிப்பது பாராய்

சூல் கொண்ட கரு மேகத்தைப் பார்த்து, இளம் பிடியின் ஞாபகத்தால் பிளிறியது ஆண் யானை. சித்திரக் கூடம் அடைந்த இராமன் சீதை இருவரும் கண்ட காட்சியாகக் கம்பன் இதைப் பாடுகிறான்.

யானையிடம் இத்தனை இருந்தும், ஈசன் ஏனோ யானைகளை சற்றும் புரிந்து கொள்ளாமல், கஜசம்ஹாரனாக நம்மை மிரட்டுகிறான்!

– ஆர்.கே.ஜீ.

%d bloggers like this: