கதை சொல்லி

இடசேவல் கிராமம் இரண்டு உன்னத ஆளுமைகளை தமிழ் இலக்கியத்திற்குத் தந்துள்ளது. ஒன்று, கி. ரா என்னும் கி. ராஜநாரயணன், மற்றொன்று கு. அழகிரிசாமி.

கி. ராஜநாரயணன் இலக்கியம், கரிசல் வரலாறு, சமூகம் எனப் பன்முக ஆற்றலோடு விளங்கியவர். கிளாசிக் எனப் பொதுப்படையாகிப் போன பிரோயகத்தை, கி. ராவின் கோபல்ல கிராமம் நாவலுக்கு கம்பீரமாக முடி சூட்டலாம்.

கம்மவாரு என்று பெயர் வந்ததற்கு மங்கத்தாயாரு அம்மாள் சொல்லும் காரணம் காது வளர்ந்து வளையம் போன்ற கம்மஎன்ற காது ஆபரணத்தை இந்தப் பெண்கள் அணிந்து கொள்வதால் இப்பெயர் வந்தது என்று சொல்லுவாள்.

கம்மவாரின் முதல் தோன்றலைப் பற்றியும் ஒரு பூர்வ கதை சொல்லுவாள். நாகர்ஜூன மலையில் வீரம் நிறைந்த ஒரு ராட்சதப் பெண் இருந்தாளாம். அவளை அடக்க யாராலும் முடியவில்லை. அழகும் வீரமும் கொண்ட பிராமணன் அவளை அடக்கி அவளுடைய மூக்கில் துறட்டியைப் போட்டு இழுத்துக் கொண்டு வந்தானாம். அந்தத் துறட்டியே அவள் ஆபரணமாக விரும்பிப் போட்டுக் கொண்டாளாம். ஆகவே தான் அவர்களுடைய சந்ததியாக நமது பெண்டுகள் இன்றும் மூக்கில் தொறட்டி என்ற ஆபரணத்தை அணிந்து கொண்டிருக்கிறோம்.

கம்மவாரு தெலுங்கர்கள் தமிழகத்தில் குடி பெயர்கிறார்கள். இன்றைய அரசியல் கற்பிப்பது போல சமூக இயக்கவியல் (social dynamics) அமையவில்லை. எந்த நிலத்திலுமே, மண்ணின் மைந்தர்கள் என சொல்லக் கூடியவர்கள், தம் தம் நிலத்தை விட்டு நீங்காதவர்கள் பங்கில் இருபது சதவிதத்திற்கு  மேல் இருக்க வாய்ப்பு சிறிதும் இல்லை.

ஜாதிகள் என நாம் பொதுப்படையாக சொல்பவையும் பிரிவிற்கு அன்றி, தொகுத்தலுக்காக அமைந்தவையே. அடிப்படையில், எதிலோ ஒன்று கூடும் பொழுது, ஒன்றிலிருந்து பிரிவது இயல்பே. ஜாதியை ஒற்றைப் படையாகத் தவிர்க்க நினைப்பது அறிவிலி காரியம் என்பதில் சந்தேகமே இல்லை.

கம்மவாரு தெலுங்கர் தமிழ் நாட்டில் குடிப் பெயர்ந்த பொழுது, சென்னமா தேவி, துறட்டி அணிந்த அரக்கி எனப் பலத் தொன்மங்களோடு, கதைகளோடு நுழைகின்றனர்.

கி. ரா. காண்பிக்கும் தெலுங்கர்கள், தமிழ் நாட்டைப் பல கனவுகளோடு அனுகினர்.

இவர்கள் இங்கே புறப்பட்டு வந்ததற்கும் காரணங்கள் எத்தனையோ.

 தெலுங்கு அரசர்கள் இங்கே ஆட்சி செலுத்தவதையொட்டி வந்தவர்கள், பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். முஸ்லீம் ராஜாக்களுக்கு பயந்து கொண்டு வந்தவர்கள், இப்படி இப்படி.

தமிழை அரவ நாடு என்றும், அரவ பாஷை என்றும், அரவ நாட்டு மக்கள் அவர்களின் குடியேற்றத்திற்குத் துணையாக நின்றதாக நாவலில் பல இடங்களில் குறிப்புகள் தருகிறார் கி. ரா. இன்றும் சென்னை ஆந்திர ஒட்டிய வடமாவட்டங்களில் அரவ பாஷை என்ற சொல் வழக்குகளைக் காணலாம்.

தொண்டை நாடு நாயக்கர்களுக்கு ஏதோ ஒரு வகையில்  உகந்ததாக இருந்துள்ளது. விஜய நகரம் ஹம்பியில் கவிழ்ந்தப் பின், வேலூரில் தான் அரசமைக்கிறார்கள். குறிப்பாக, அரியநாத முதலியார், திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு என்னும் ஊரில் தொண்டை நாட்டில் பிறந்தவர். இவரே விசுவநாத நாயக்கர் காலத்தில் ஆட்சியாளராக இருந்தவர். மீனாட்சி அம்மன் கோயிலின் ஆயிரம் கால் மண்டபம் போன்றவற்றை எழுப்பியவர் இவரே.

இடம் பெயர்தலில், பிராமணரும் விலக்கல்ல. பிருஹத் சரணம் (பெரிய நடைப் போட்டு வந்தவர்கள்) என்ற பிரிவே உண்டு! நர்மதையிலிருந்து, கங்கையிலிருந்து தெற்கேவும், தெற்கிலிருந்து பல ஆயர் குடிகள் வடக்கேயும் இடம் பெயர்ந்துள்ளன. இதுவே இந்நாட்டில் நிகழ்ந்தது.

சென்னா என்னைத் தன் பக்கத்தில் இழுத்து உட்கார வைத்துக் கொண்டு சிறு குழந்தைகள் தங்களுக்குள் சொல்லி மகிழும் கதைகளில் ஒன்றை எனக்கு சுவாரஸ்யமாக சொல்லிக் கொண்டு வந்தாள். இரண்டு ஈக்களுக்கு கல்யாணமாம். மாப்பிள்ளை என்னென்ன நகைகள் போட்டுக் கொண்டிருந்தது. பொண்ணு என்னென்ன நகைகள் போட்டுக் கொண்டிருந்தது.

தலையிலிருந்து பாதங்கள் வரை என்று வர்ணித்துக் கொண்டு வந்தாள்.பொண்ணு கழுத்தில் அவ்வளவு நகை போட்டிருந்ததாம். கழுத்தை திருப்ப முடியலையாம்! மாப்பிளை ஈயின் முகத்தை பார்க்கணும்ணு பொண்ணு ஈக்கு ரொம்ப ஆசை. கழுத்தில் கிடக்கும் நகைகளோ கழுத்தைத் திருப்ப முடியாமல் செய்துக் கொண்டிருக்கிறது.

இப்படி கதைகளுக்கு மேல் கதைகள் மக்களுடன் இன்னொரு ஜீவனாக உலாவின. பல தளங்களில். துன்ப நேரத்தில் அந்த ஜீவனை அணைத்துக் கொண்டு மக்கள் கனவை நோக்கி நகர்ந்தார்கள்.

writer_ki_ra_books.jpg

கவித்துவமானப் பல சித்திரங்களும் இந்நாவலில் காணக் கிடைக்கின்றன.

கிராமங்களில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், பெற்றவர்கள் இட்டபெயர் அநேகமாய்த் துலங்காது. கிராமத்தாரெல்லாம் சேர்ந்து ஒருவருக்கு ஒரு பெயரை வைத்து விடுவார்கள்! அது காரணப் பெயராக இருக்கும். சிலது கேலிப் பெயராகவும்

 கோபல்ல வெங்கிடம்மாள் அந்த கிராமத்துக்கு வாக்குப்பட்டு வந்ததும் அந்த ஊரில் பல வெங்கடம்மாக்கள் இருந்ததால், அடையாளத்துக்காக அவளது இரத்த சிகப்பு நிறம் காரணமாகதுண்டபண்டு வெங்கடகம்மா என்றுபேர் வைத்திருந்தார்கள். தெலுங்கில் துண்டபண்டுஎன்றால் கோவைப்பழம் என்று அர்த்தம்.

 

இயல்பாக எந்தக் குடிக்கும், கதைகளும், கடவுளரும், மொழியும் தான் அவர் தொகுப்பின் அடையாளம்! இன்று நம் மக்கள் அயல் நாட்டிற்கு இடம் பெயர்ந்து, குல தெய்வ வழிபாட்டிற்கு கோயில் அமைத்து மகிழ்வதுப் போன்ற நிலையே இது! குல தெய்வங்களும், கதைகளுமே குடிகளின் காப்பு. சென்னமா தேவி என்னும் தெய்வம்  கம்மாவாரைக் காப்பது போலவே, ஈயும் அவர்களைக் காத்தது.

நட்டமாக நிமிர்ந்த மரம் திரும்பவும் எங்களை நோக்கி வளைந்தது. என் குழந்தைகளே, என் மக்களே இந்த அரசமரத்தின் கிளைகளை பத்திரமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். இது நம்மைக் காப்பாற்றி அக்கரைக் கொண்டு சேர்க்கும்.

 தரையைத் தொட்ட அந்த அரச மரத்தின் கிளைகளின் மீது ஏறி கெட்டியாகப் பிடித்துக் கொண்டோம். குதிரை வீரர்கள் எங்களை நெருங்கும் சமயத்தில் நாங்கள் பற்றியிருந்த மரம் நிமிர ஆரம்பித்தது.

கோபல்ல கிராமம் போன்ற நாவல்கள், கி. ரா. போன்ற ஆசிரியர்கள் அரச மரமாக நிற்கிறார்கள். கெட்டியாகப் பிடித்தால் நலம். வரலாற்றின் ஏதோ ஒரு புள்ளியிலிருந்து நாம் நடக்க ஆரம்பித்துவிட்டோம்.

ஊராக ஒன்றைக் கொண்டு, வீடாக ஒன்றை நினைத்து, மக்களாக சிலரை அணைத்து, அன்பைப் பொழிவோமாக. ஆண்டாள் சொல்வதைப் போல, கூடியிருந்து குளிர்வோமாக!

– ஆர். கே.ஜீ.

விகடகவி இணைய இதழில் 28/7/18 அன்று வெளி வந்தது.

%d bloggers like this: