அம்மாவிற்கு சினிமா பிடிக்கும் – சிறுகதை

அம்மாவிற்கு சினிமா பிடிக்கும்

அம்மா அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஹெட் அசிஸ்டென்ட்டாகப் பணியில் இருந்தாள். அளவுக்கு மேல் மைத் தீட்டியக் கண்களும், எண்ணெய்ப் படிந்த தலையும், தொப்பை சதைப் பிதுங்க மெல்லிசானப் புடவையுடன் திரியும் நடுத்தர வயதுப் பெண்ணாக அவளைப் பலரும் சீண்டாமல் கடந்திருக்கக் கூடும்.

பதினைந்து நிமிட தாமதத்திற்கு, உலகமே அழிந்து போவது போன்று, முகமெல்லாம் வியர்வை சொட்ட ஷார் ஆட்டோக்களிலிருந்து இறங்கி ஆபீஸிற்கு மாரத்தான் ஓடும் அம்மா போன்றவர்களை கலை-அழகியலின் கடைசிப் படிகளில் தான் வைக்க முடியும்.

இந்த சாமான்யக் குப்பையிலும், எண்ணெய் நெடியிலும், இவர்களை மனிதர் என்று சொல்ல ஏதோ ஒன்று உயிரின் சாட்சியாக இருக்கத் தான் செய்கிறது. அப்படி அம்மாவை வேறுபடுத்தியது, அம்மாவின் சினிமா.

திரைக்கு வரும் எல்லா சினிமாவையும் அம்மா பார்த்து விடுவாள். குறிப்பாக, தோளுக்கு மேல் கால்களை உயர்த்தக் கூடிய எந்த ஒரு ஹீரோவும், அம்மாவிற்குப் பிடித்தவன் ஆகி விடுவான். அம்மாவிற்கு வழித்தக் கன்னங்கள் பிடிக்காது. குழைந்து குழைந்து பேசும் ஹீரோக்கள் பிடிக்காது. ஹீரோ என்றால் விவஸ்தை என்பதில்லாமல் பார்ப்பவரையெல்லாம் அடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அம்மாவின் சினிமாப் பயணங்களை வைத்தே, அவள் நினைவுகளை எளிமையாகத் தொகுக்கலாம்.

பஞ்ச் ஸ்டார் ஒருவனின் படத்திற்கு சென்னையில் டிக்கெட் கிடைக்காததால், ஆந்திராவின் சித்தூர் வரை அவளை அழைத்துக் கொண்டுப் போக வேண்டியதாயிற்று. இன்டெர்வல் காட்சியில், ஹீரோ ஷார்ட் அடித்த ட்ரான்ஸபோர்மரின் தீப் பொறியால் சிகரெட்டைப் பற்ற வைத்து பஞ்ச் வசனங்கள் பேசிக் கொண்டிருந்தான். பின்னால் ட்ரான்ஸபோர்மர், சப்தமில்லாமல் பரிதாபமாக அக்கினிப் பிழம்பாக எரிந்து கொண்டிருந்தது. மனித இனத்தை சேர்ந்த எவனும், அவ்வளவு நெருப்பைப் பார்த்த மாத்திரத்தைலேயே ஓடி விடுவான். அம்மாவும் யதார்த்தத்தில் அப்படி தான் செய்திருப்பாள். ஆனால் சினிமா என்று வந்துவிட்டால், அவளுக்கு தர்க்கங்கள் மாறி விடுகின்றன.

அம்மா சினிமாவிற்கு பொதுவாகத் துணை எதுவும் எதிர்பார்ப்பதில்லை. வாரம் ஒரு முறை, சனி ஞாயிறுகளில் மதியக் காட்சி மட்டுமே. இரவுக் காட்சிகளைத் தவிர்த்து விடுவாள்.

“உன் அம்மாவுக்கு பயமே இல்லையா? எப்படி பட்டப் பகல்ல சினிமாவுக்கு போறா? எவனாவது கையகிய்ய வெச்சா?”

இவர்களுக்கு அம்மாவைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தியேட்டரில் ஒரு முறை பக்கத்தில் அமர்ந்திருந்த சுமார் முப்பது வயது இருக்கக் கூடிய தமிழ் நாட்டு இளைஞன் / காளை, அம்மாவின் முதுகை சொரியத் தொடங்கினான். நிதானமாக அவன் கைகளை அம்மா தன் மடியில் வைத்துக் கொண்டாள். கூச்சல் நெளிவு எந்த தடையமும் இல்லை. நேரம் போக, அம்மாவின் பிடிப்பை விட்டு, அவனால் கைகளை சிறிதும் அசைக்க முடியாமல் போனது. தியேட்டரின் வாசல் வரை அவன் கைகளை வலுவாகப் பிடித்துக் கொண்டு நடந்தாள். அவன் குறுகி செய்வதறியாது அழத் தொடங்கினான். அம்மாவின் கண்களைப் பார்க்கு திடம் அவனிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

தெரு முனையில் ஆட்டோ ஏறும் வரை அவன் பிடியை விடவில்லை என்று சிலர் சொல்லித் தெரிந்தது.

“அழுத்தம்.”

பாட்டிக்கு அம்மாவின் செய்கைகள் சங்கடத்தை தந்தன. அம்மாவைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவள் முகத்தில் ஏளனம் குடி புகுந்து விடும்.

“ஏன் பாட்டி … அம்மாவோட செய்கை தான் யாருக்கும் பிடிக்கலன்னு தெரியுதுல. வாயத் தொறந்து கேளேன்.”

“எதுக்கு ? மாமியார் கொடுமைக்கு ஏதாவது படத்துல சீன் வெச்சுருப்பா. ஒரு நிமிஷத்துல நான் கொடுமக்காரி ஆகிடுவேன். ஆள விடு.”

பாட்டி தெளிவாக இருந்தாள்.

அப்பாவை வீட்டில் பார்ப்பதோ அரிதாக இருந்தது. பிளேட்டிங் கம்பேனியில் சூப்பர்வைஸர். காலை ஐந்து மணிக்கு ஆபிஸுக்கு கிளம்பி விடுவார்.வீடு திரும்ப, குறைந்தது இரவு ஒன்பதாகும். எவருக்கும் உபயோகமில்லாத புதன்கிழமைகளில் விடுமுறை. அப்பா, அம்மாவை வித்தியாசமாகப் பார்ப்பது மட்டுமில்லாமல், அவர் உலகத்திலிருந்து அவளை ஒதுக்கியும் வைத்தார். அம்மா இதைப் பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

வழக்கம் போல் மதிய வேளையில், அலுவலகத்திற்கு வெளியிலிருந்த சலீம் பாயின் டீ கடைக்கு சகிகளுடன் கிளம்பி விடுவாள். பாய், தள்ளு வண்டியின் கால்களை சாக்கடையின் இரு புறமும் பொருத்தமாக நிற்க வைத்து, சாக்கடையின் மேல் மரக் கட்டைகளை அடுக்கியிருந்தாலும், கொசுக்கள் தமக்கான வழியை அமைத்து, கடையை விடாமல் சுற்றிக் கொண்டிருந்தன.

டீ நேரங்களில், அம்மா சமீபமாகப் பார்த்த சினிமாவின் கதையை அப்படியேத் தன் தோழிகளின் முன்னால் ஓட்டுவாள். கசப்பானத் தேநீரை அருந்தவும், கொசுக்களின் பிடுங்கலை மறக்கவும், அம்மாவின் கதைகளே உதவின.

அம்மா தமிழ் விசுவாசி என்பதால் இரண்டு கொள்கையை மட்டும் விடாது பின்பற்றி வந்தாள். ஒன்று, சீரியல்கள் எக்காலத்திலும் பார்ப்பதில்லை. தமிழ் சமூகம், குறிப்பாகப் பெண்கள் சீரியலைப் பார்ப்பதால் தான் புத்தி மங்கிப் போகிறார்கள் என்பது அவள் நம்பிக்கை. இரண்டாவது வேறு மொழிப் படங்கள் பார்ப்பதில்லை. தமிழ் திரைத் துறையை அவர்களை விட அம்மா அதிகமாக நம்பினாள். என்றோ ஒரு நாள் உலக சினிமாக்களை தமிழ் நாட்டில் உருவாக்கி, ஆஸ்கர் நாயகர்களாக இவர்கள் மாறக் கூடும் என்பது அவள் நம்பிக்கை.

அப்பாவிற்கு அம்மாவிடம் பேச எதுவுமில்லை. அவளை மாற்றவோ, அவளுடன் உரையாடவோ கடைசி வரை எந்த முயற்சியும் அப்பா எடுக்க விரும்பவில்லை. 40ஆம் வயதில் மார் அடைப்பில் பணியிலிருக்கும் பொழுது இறந்து போனார்.

படங்களைப் பார்த்து அதீதமாக உணர்ச்சிகளைக் காட்டிக் கொண்டிருந்த அம்மா, அப்பா இறந்த அன்று அழவில்லை. அப்பாவின் பூத உடலை எரித்து சாம்பலை ஒரு மூலையில் வைத்தனர். காரியங்கள் முடிந்து, பாட்டியை சித்தி அழைத்துக் கொண்டு போனாள்

அப்பா இறந்த பின், அம்மா சினிமாக்களைப் பார்க்க விரும்பவில்லை. அம்மாவிற்கென மிஞ்சிய சினிமா ஒன்றையும் அப்பா களவாடிப் போனார்.

அம்மாவால் சினிமாவை முழுதாக மறக்க முடியவில்லை. அவ்வப்போது தோன்றுவதைப் பகிர்ந்து கொள்வாள்.

“கற்பனை உண்மைல ஆண்டவன் கொடுத்த வரம்.

பசிச்சுதனா வயிறு நிறஞ்ச மாதிரிக் கற்பனப் பண்ணிக்கலாம். நயாப் பைசா இல்லைனாலும் பணக்காரன் மாதிரி கற்பனப் பண்ணிக்கலாம். யாருமே இல்லைனாலும், யாருக்கூடையோ இருக்கோம்னு … இப்படி நமக்கு வேண்டியபடி.

சினிமா கற்பனை உலகம். நிரப்ப முடியாத இடங்களை அந்த உலகம் நிரப்பும்.”

அம்மா ஆன்மீகத்தையும் சினிமாவில் மட்டுமேக் கண்டடைய விரும்பினாள்.

அம்மா இன்று எண்பதை நெருங்கி விட்டாள். ஆபீஸ் பெஞ்சில் தன் தோழிகளுடன் சினிமா கதைகளை சொல்ல முடியாமல் போனாலும், பேத்தி பானுவுடன் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறாள்.

பானு அம்மாவை திரை அரங்கிற்கு அழைத்துச் செல்வதாக, நேற்று வீட்டில் அறிவித்திருந்தாள். பேத்தியின் ஆசையை அம்மாவால் மறுக்க முடியவில்லை. ஒப்புக் கொண்டாள்.

சத்யம் தியேட்டரில் மதியக் காட்சி. தியேட்டரின் வாசலை அடைந்தவுடன், அம்மா இந்நாள் அழுத்தி வைத்திருந்த அசட்டு சிரிப்பை உதிர்த்தாள். பானுவிற்கும் எதையோ சாதித்துவிட்ட உணர்வு. இருவரும் டிக்கெட் கவுண்டர் அடையும் வரைப் பொறுமையாகக் காத்திருந்தேன்.

போஸ்டர்களை வைத்து, படம் சரியான மசாலா குப்பை என்பதைப் பார்த்த மாத்திரத்தில் சொல்ல முடிந்தது. 30 அடி கட் அவுட்டில் விரலை சொடுக்கிக் கொண்டு ஒரு பொடியன். அவனை வைவதா அல்லது அவனை இந்த தினுசில் பெற்றவர்களை வைவதா என்று விளங்கவில்லை. கட் அவுட், அகில இந்திய ரசிகர் மன்றத்தின், ராயப்பேட்டை – சென்னைத் தலைமைச் செயலகத்தின் காணிக்கை.

அம்மா அரங்கில் அமர்ந்து விட்டதாக பானு மேசேஜைத் தட்டி விட்டாள். சம்மணம் போடுவதிலிருந்து, நகம் கடிப்பது வரை அம்மா தியேட்டரில் அமர்ந்து தான் கற்றுக் கொண்டாள். அம்மாவிற்கு ஒரு வேளை இப்படம் திரை அரங்கில் பார்க்கும் கடைசிப் படமாக இருக்கக் கூடும் என்ற எண்ணம் எழுந்தது. படம் பார்த்துக் கொண்டே அவள் வீர மரணம் அடைய நேர்ந்தால்?

மதியம் என்பதால், சாலையில் பெரிதாக நெரிசல் இல்லை. ஸ்பென்ஸர் சிக்னல் ஒன்றரை நிமிடம் சிகப்பில் மாறாமல் நின்றது.

என் முன் அப்பா சாலையைக் கடந்து போய்க் கொண்டிருந்தார். என் இருப்பை அவர் கவனித்ததாகத் தெரியவில்லை. இறங்கி அவரைத் தொடரவும் பயமாக இருந்தது.

அப்பா மட்டும் ஏனோ அம்மாவுடன் கடைசி வரை சினிமாவுக்கு போகவில்லை.

– ஆர். கே. ஜி.

%d bloggers like this: