நான் காலம் பேசுகிறேன் – சிறுகதை

நான் காலம் பேசுகிறேன்

Dharmakshethra - India Unabridged

ஹமீத் பிரமாண்ட விசிறியின் காற்றைத் தன் தோளில் வாங்கிக் கொண்டு, பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றின் மேல் தன் கால்களை நீட்டியபடி, கனவுகள் நுழைய முடியாத உறக்கத்தில் லயித்திருந்தான். மூக்கின் துவாரம் வழி அவன் மூச்சை இழுப்பது, விசில் போன்று ஒலித்தது. சட்டை பொத்தான்களின் வழி, காடாய் வளர்ந்திருந்த மார்பின் கரு மயிர் சுருள்கள்‌ தெரிந்தன. ஏனோ எண்பதைக் கடந்த ஹமீதின் வயோதிக முகத்திற்கு அவைப் பெரிதாகப் பொருந்தவில்லை.

ஹமீத் உறங்கி கொண்டிருந்த அரங்கம், உம்பர்கா என்னும் கடற்கரை நகரில் அமைந்திருந்தது. உம்பர்கா, மும்பைக்கு வடக்காக 150 கி மி தொலைவில் அமைந்துள்ள கடற்கரை நகரம்.

பிரம்மாண்ட செட்களும், போர் காட்சிகளும் அமைக்க, இத்தனை மலிவாக நிலம் மும்பை நகருள் கிட்ட வாய்ப்பில்லை என்பதால், உம்பர்கா தேர்வாகியிருந்தது.

சீரியலின் செட்டுகளைத் தவிர்த்தால், கிழக்கு கடலை ஒட்டிய சிறிய டவுனாகவே உம்பர்காவை ஒருவனால் அடையாளம் கொள்ள முடியும். இரயில் நிலையத்தை ஒட்டியத் தெருக்கள் ஒன்றே மக்கள் புழங்கும் இடமாக இருந்தது. அழுக்கு படிந்த மணல் கரைகளைக் கழுவ முடியாமல், கடல் நாளும் பின் வாங்கிக் கொண்டிருப்பது போல் மக்கள் உணர்ந்தனர்.

காற்று அளவாக வரும்படி அரங்கின் கதவு மூடிக. செய்யாவிடின், இரவோடு இரவாக செட் ப்ராபர்ட்டிகளில் மீன் வாடை பொதிந்து விடும் என எக்ஸ்கியூடிவ் தயாரிப்பாளன் மெஹ்மூத் விசித்திரமான ஒரு வாதத்தை வைத்தான்.

விடியலின் வெளிச்சம் ஹமீதை உறுத்தவில்லை. கொசுக்களுடன் ஒப்பந்தம் வைத்தது போல, சரியாகப் பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை கொசுக்கள் அவனைக் கடித்து கொண்டிருந்தன. கால்களிலிருந்து ஏற முடியாதக் கொசுக்களை, சொரிந்து கொண்டு, கைத் தாங்கலாக ஹசன் அவை விரும்பிய இடத்தில் இறக்கினான்.

ஹமீத் பொதுவாக மும்பைக்கு மாலையில் திரும்பிவிடுவது வழக்கம். மும்பை அடைய பஸ் சர்வீஸ் இருந்தாலும், நீளமான அவன் கால்களுக்கு சரிப்படவில்லை. நேற்று மும்பைக்கானக் கடைசி இரயிலைத் தவர விட்டதால், அரங்கத்திலே உறங்க முடிவெடுத்தான். நான்காவது முறை என்பதால், எவ்விதத் தடையுமின்றி உறங்க முடிந்தது.

வழக்கம் போல் அரங்கின் பிரம்மாண்டக் கதவுகளை, மெஹ்மூத் காவலாளன் ஒருவனை வைத்து திறந்தான். சடங்காக சுவிட்ச் கியர்களின் பச்சை பொத்தான்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அழுத்தினான்.

ஆயிரம் சூரியன்கள் எழுவது போல், ஹஸ்தினாபுரம் சுடர்ந்தது. திருதராஷ்டிரனின் சிம்மாசனமிருந்தும், ஹமீத் தன்னை மறந்து பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றில் உறங்கிக் கொண்டிருப்பது மெஹ்மூதிற்கு வேடிக்கையாக இருந்தது.

ஹஸ்தினாபுரம் பல வண்ணங்களால் நிறைந்திருந்தாலும், பிரதானமாக சிவப்பு நிறமேக் காண்பவர் கண்களை எட்டியது. மூன்று மாதங்கள் இரவு பகலாக உழைத்து அரங்கை அமைத்திருந்தனர்.

ஹஸ்தினாபுரத்தின் சபையில் பீஷ்மன், துரியோதனன், துரோணன் என ஒவ்வொருவரின் உடல் அமைப்பிற்கும், பாரதத்தில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதைக்கும் ஏற்றார் போல் ஆசனங்கள் அமைக்கப்பட்டன.

காவலாளன் ஹமீதின் தோள்களைக் குலுக்க, மெஹ்மூத் குழந்தை ஒன்றின் சேட்டைகளைப் பார்ப்பது போல் ரசித்தான்.

“விடிஞ்சிடுச்சா?”

ஹமீத் கண்களைக் கசக்கினான்.

“அது சரி. ஏன் யா ஹமீத். தூக்கத்துல கூட அப்படியே பீஷ்மர் தான் நீ.

பக்கத்துல இவ்வளவு பெரிய சிம்மாசனம் இருக்கு! நல்லா பஞ்சுல ஒரு பக்கம் தலைய வெச்சு, கால நீட்டித் தூங்கலாம்ல?”

ஹமீத் நெளிந்தான். வயோதிகனாக இருந்தாலும், ஹமீத் ஒருமையிலேயே அனைவராலும் விளிக்கப்பட்டான்.

“சாப் … அல்லாஹ் கருணையால இந்த மனுஷனுக்கு எல்லா இடமும் பஞ்சு மெத்தையாத்தான் இருக்கு. மெ கிஸி ஜகான் பீ டீக் ஹூ. குரான் சொல்லுது … அல்லாவுக்குத் தெரியும், மனிதனால் எவ்வளவு துன்பம் தாங்க முடியுமோ, அவ்வளவு தான் அல்லாஹ் அவனக்கு துயரத்த தருவார்னு.”

குரானில் வரும் வரிகளை ஹமீத் உள்ளபடியே அரபியில் ஒப்பித்தான். காலைக் காரியங்களை முடிக்காத காவலாளிக்கு ஹமீதின் உபன்யாசம் சற்று அதிகாமாக இருந்தது.

“பீஷ்மர் அரபி பேசுற மாதிரியே இருக்குது! சரி போய் என் ரூம்ல குளிச்சிட்டு சரியா ஒன்பது மணிக்கு ஷூட்டுக்கு வந்துடு.”

மெஹ்மூத் தலைமைப் பொறுப்பாளன் என்பதால், உம்பர்காவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அரங்கத்திற்கு அருகாமையில் தங்கியிருந்தான். சீரியலின் மூலம் அவனுக்கு டி. வி. உலகில் கிட்டிய கவனத்தால், அதன் நிமித்தமாக எதையும் செய்யத் தயாராக இருந்தான். தொலைக்காட்சிகள் எடுப்பதாய் இருக்கும் வரலாறு, காவியம் தழுவிய சீரியல்கள் அனைத்திற்கும், அவன் ஒருவனே தயாரிப்பு நிர்வாகங்களின் நம்பிக்கையாக விளங்கினான்.

ஹமீத் மெஹ்மூதிடம் சொன்னது போல், அல்லாஹ் அவனுக்கு பெரிய சோதனைகள் எதுவும் வைக்கவில்லை. பல யுகங்கள் வாழ்ந்தவனின் நிதானம் அவனிடம் தெரிந்தது.

தனக்கு பிறந்த முதல் ஏழு குழந்தைகளையும் கங்கையில் கரைத்ததாகவும், எட்டாவதாக மெஹ்மூத் பிறந்ததாகவும் பேசிக் கொண்டனர். ஒவ்வொரு முறையும் இதைக் கேட்கையில், அவனுக்கு வேடிக்கையாக இருக்கும். தாய் குறித்து ஒருமுறைக் கூட அவன் தந்தை பேசியதாய் நினைவில் இல்லை.

மெஹ்மூத், கான்பூர் நகரில் தன் தந்தைக்கு சத்யா என்னும் பெண்ணின் வழி பிறந்த தம்பி மார்களுக்காகத் தன் வாழ்வை மொத்தமாக அர்ப்பணித்திருந்தான். அவன் சேர்த்தப் பணம் மொத்தமும், அவர்களின் பிள்ளை மார்களுக்கும், பேரன்களுக்கும் சேரும் படி, உயில் எழுதி வைத்தான். கடைசி வரை மணம் செய்து கொள்வதை மறுத்தான்.

“எல்லாம் அல்லாஹ்வின் விருப்பம்.”

சிறு தோல்விகளுக்கும், பெரும் துறவுகளுக்கும் இதுவே மெஹ்மூதின் பதில்.

ஒன்பது மணிக்கு அரங்கம் பஜார் போலக் காட்சி அளித்தது. யானைத் தூண்கள் நன்கு தெரியும் படி பல்புகள் பொருத்தப்பட்டன. தர்பாரின் மத்தியில் நீல நிறக் கம்பளம், அரங்கின் இரு முனைகளும் இணைக்கும்படி விரிக்கப்ட்டிருந்தது. இன்று, பீஷ்மர் அம்பு படுக்கையில் உயிர் துறக்கும் காட்சி என்பதால், ஆளற்ற ஹஸ்தினாபுர தர்பாரை, பீஷ்மரை இழக்கப் போகும் கௌரவர்களின் வெறுமைக்கு குறியீடாக வைத்திருந்தனர். நாளின் இரண்டாம் பாதியில் படமாக்குவதாகத் திட்டம்.

முதல் பாதி, மைதானத்தில். அம்புப் படுக்கைகள் தயாராக இருந்தன. அம்புகள் பித்தளையால் ஒத்த அளவுடன் அமைத்து, அதன் நுனிகளை ரப்பரால் மறைத்திருந்தனர்.

இயக்குனர், தென்னியந்தரான வி. எஸ். அனந்தராம் (சுருக்கமாக வி. எஸ். எ ), மைதானத்தில் நுழைந்தவுடன் ஒரு வகையான மயான அமைதி சூழ்ந்து கொண்டது. வழக்கமான சீரியல்கள் போன்று இல்லாமல், தன் தந்தையுடன் சேர்ந்து எடுத்து வந்த ‘ இன்றைய பாரதம்’, பொருட்செலவு, ஆராய்ச்சி என இரண்டிலும் பெரிதாக் உழைக்க வேண்டியிருந்தது.

ஹமீதும், கிருஷ்ணனாய் நடித்து கொண்டிருக்கும் கோவிந்த் என்னும் முப்பது வயது இளைஞனும், மைதானத்தின் ஓரத்தில், குடைகளின் நிழலில் அமர்ந்திருந்தனர். ஹமீதின் கருமையான மார்பு மயிரை மறைக்க, வெண் சாயத்தை தீட்டியிருந்தனர். அதன் இரண்டாம் தரத்தால், ஹமீத் சகிக்க முடியாத அரிப்பில் தவித்தான்.

கோவிந்த் தில்லியை சேர்ந்தவன். அவன் கண்களில் தெரிந்த குறும்பிற்காக மட்டுமே, கண்ணன் வேடத்தில் பொருத்தப்பட்டான். கீதா உபதேசத்தின் பொழுது, அதன் சாரம் ஒன்றும் விளங்காமல், புரிந்தது போலவே நடித்து கொண்டிருந்தான். ஹமீதின் நாடக அனுபவத்தை மொத்தமாக சேர்த்தால், கோவிந்த் குறைந்தது முப்பது ஆண்டுகள் கடக்க வேண்டும். அதைப் பற்றியெல்லாம் கோவிந்த் பெரிதாக எண்ணவில்லை. அவன் கண்ணன். பாரதத்ததின் நாயகன்.

சூரியன் நடு வானை அடைந்ததால், படத் தளம் எரி குண்டம் போல் தோன்றியது.

தர்மனை கண்ணன் அழைத்து கொண்டு, அம்புப் படுக்கையில் கிடந்த பிதாமகற்கு மரியாதை செய்யும் காட்சி. தர்மனாக நடித்த ஆனந்த், தகிக்கும் வெய்யிலிலும் அரை தூக்கத்தில் அழுது வடிந்தான். நடிப்பிற்கும் அவனுக்கும் சம்மந்தமில்லை. பெரிதாக முகத்தை அலட்டிக் கொள்ளாததால், அவனால் சலனமற்ற தர்மனின் கதா பாத்திரத்தில் இயல்பாகப் பொருந்த முடிந்தது.

ஆனந்த், கோவிந்தைக் காட்டிலும் சற்று முதிர்ந்தவனாகத் தோன்றினான். இவர்கள் போக, போர் வீரர்களாக நூற்றுக்கணக்கான சைட் ஆர்ட்டிஸ்டுகள்

வி. எஸ். எ. மீண்டும் ஒருமுறை காட்சிகளை ஒளிப்பதிவாளனிடம் விளக்கினார். காட்சியைத் தொடங்கும் முன், ஹமீதிற்கு கோவிந்திடம் பேச சில விஷயங்கள் இருந்தன.

“கோவிந்த் இவ்வளவு விளையாட்டுத் தனம் கூடாது. என்ன மாதிரி இல்ல, உனக்கு சின்ன வயசுல எல்லாம் அமஞ்சிடுச்சு. ஆனா வாழ்க்கை இதோட நிற்கப் போறதில்ல. கண்ணனோட சாதுர்யத்த நீ வளர்த்துக்கணும். இன்னும் ஆழமா நடிக்கணும். ஏதோ வந்தோம் நடிச்சோம்னு இல்லாம.

கோவிந்த், இத மனசுல வாங்கிக்கோ. நாம் உண்மையாக நடிச்சு நடிச்சு நாம் உண்மையாக மாறுகிறோம். சுருக்கமாக சொன்னால் நடிப்பு தவம். விருப்பமிருந்தா நான் சொன்னத யோசி. அல்லாஹ்வோட வார்த்தையா இத எடுத்துக்கோ. அல்லாஹ் உன்ன நிச்சயம் கை விடமாட்டார்.”

அம்புப் படுக்கையில் ஹமீத் சரிந்தபின், அவன் முன்னால் கண்ணனும் தர்மனும் தோன்றினர்.

உதவி இயக்குனன் கிளாப் தட்ட, ஹமீத் தன் வசனங்களை மொழிந்தான்.

” தர்மா… நான் சூரியனின் அசைவுகளைக் கூர்மையாகப் பார்க்கிறேன்.

ஆயிரம் நாமங்கங்களைத் தன் அணிகலனாக சூடிய, சொற்களுக்கு அகப்படாத அந்த புனிதனின் உருவமும், குணங்களும் தான் என் மனதை இக்கணம் நிறைக்கின்றன.

பீஷ்மன் என்றவன், அம்புப் படுக்கையில் கிடந்தபடி அவன் புகழைப் பாடினான் என்று உலகம் இனிப் பேசட்டும்.

அனைத்திற்கும் பின்னால் நின்று, அப்புனிதனே இம்மாயா பிரபஞ்சத்தை இயக்குகிறான். அனைத்தும் அவன் நடத்தும் வேள்விகள் என்று சொன்னால் மிகையாகாது! அப்பெருவேள்வியில் நான் என்னை அன்னமாகப் படைக்கிறேன். அவன் என்னை உண்பானாக.'”

கண்களில் நீர் ததும்ப, ஹமீத் சூரியனைப் பார்த்தபடி தன் கைகளைக் குவித்தான்.

கோவிந்த் சுக – துக்கங்களுக்கு அப்பால் நிற்பவனாக, கண்ணனாக ஒரு சிரிப்பை உதிர்க்க வேண்டும் . ஹமீதின் நடிப்பு அவனை உறையச் செய்தாலும், அந்த ஒரு கணம் அவன் தன்னைக் கண்ணனாக உணர்ந்தான். கோவிந்த் சிரித்தான்.

ஒரு கணம் அச்சிரிப்பு ஹமீதின் வயதை தொட்டு விழுந்தது.

காட்சித் தன் விருப்பம் போல் அமைந்ததால், வி. எஸ். எ பெருமூச்சிட்டான். ஏனோ அவன் ‘கட்’ சொல்லியும், ஹமீத் அம்புப் படுக்கையை விட்டு எழ மறுத்து விட்டான்.

கோவிந்த், ஹமீதின் கண்களை ஆராய்ந்தான். அவை ஒளியை நேராக சந்திக்கும் சக்தியோடு, அசைவற்று நின்றன.

வழக்கம் போல், ஞாயிறன்று ‘இன்றைய பாரதம்’ ஒளிபரப்பானது.

“நான் காலம் பேசுகிறேன்.”

சீரியலின் பாத்திரங்களுள் ஒன்றான காலம், தன் வசீகரக் குரலில் நடந்தவற்றைத் தொகுத்தது.

கண்ணன் என்பவன் எல்லாம் தெரிந்தும் எதிலும் ஒட்டாமல் சிரித்தாக வேண்டும். பீஷ்மரின் நாமங்களைப் போற்ற முடியாத கண்ணனாக கோவிந்த் தன்னை உணரத் தொடங்கினான். ஹமீதின் கண்கள் அவன் கனவுகளில் அவ்வப்போது வந்து போயின.

– ஆர். கே. ஜி.

%d bloggers like this: