By

ஆச்சிப் பாட்டியின் Autopsy

/

எப்படி பொதுவுடைமை ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டதோ,

அன்பும் கொண்டாடப்பட்டது என்று சொல்லும் காலத்தில் தான் நாம் இருக்கிறோம்.

அந்த காலத்தைச் சேர்ந்தவள் என் ஆச்சிப் பாட்டி.

/

பாட்டிக்கு பொதுவுடைமை தெரியாது.

அவளுக்கு தெரிந்தது எல்லாம்

அவள் சமைத்த எண்ணெய் கத்திரிக்காய் பொரியலை

குறிப்பாக, பாத்திரத்தின் விளிம்பிலும் அடியிலும் ஒட்டிக் கிடக்கும்

அந்த எண்ணெய் மிதக்கும் நறுநற கத்திரிக்காயை

அவள் பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும் என்பதே.

/

வாய்ப்பு அமைந்து,

எல்லோரும் சாப்பிட்ட பின் ஏதேனும் எஞ்சியிருந்தால்,

சமைத்த பாத்திரத்தில்

சோற்றில் நீரும் மோரையும் ஊற்றி

தானும் உண்பாள்.

/

பாட்டி பிறந்தது வேலூரில்; இறந்தது சென்னையில்.

முதல் பிள்ளையான மாமா

அவள் போட்டதையெல்லாம் உண்டார்.

அம்மா, மூக்கை உறிஞ்சியபடி

“கடன்காரி” என்றும் “மூளி”என்றும் எதை எதையோ ஏசிக்கொண்டு

அவள் சமைத்ததை சாப்பிட்டாள்.

பேரனான நான்

கூச்சமில்லாமல்,

எந்த வஞ்சனையுமின்றி சாப்பிட்டேன்.

/

பல நாட்கள்,

கீரை சாதம் மணக்கும் அவள் கைகளை

என் மூக்கில் வைத்தபடி,

புடவையின் இடுக்கில்

சுருங்கிய அவள் தோலின் சருமத்தில்

தலை புதைத்து தூங்கியுள்ளேன்.

/

உண்மையில்,

சோறு போட்டு வளர்த்த என் பாட்டி சுப்புலட்சுமி

என் அன்னலட்சுமி,

என்னைத் தட்டி தூங்க வைத்த நித்திரா தேவி.

/

அவள் பிள்ளைகள் எல்லாம் நகர்ந்து போனார்கள்.

மாமா தன் மகளுக்கு வதுவை செய்தார்;

அம்மா என்னைப் படிக்க வைத்தாள்.

மாமாவின் பெண்ணிற்கு பெண் பிறக்க,

அவளுக்கும் ஒரு பெண் பிறக்க,

பாட்டி அவர்கள் வீட்டிலும் சமைத்து கொண்டே தான் இருந்தாள்.

/

வருங்காலங்களில்

இன்னும் எங்கள் குடும்பத்தில் பிள்ளைகள் பிறக்கலாம்;

கிழவியும் சமைத்து கொண்டே போகலாம்.

காலம் இதை நிறுத்த வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தேன்.

அவள் சமைத்த அன்பை நினைக்க நினைக்க

உலகியல் பழகிய எனக்கு

ஏனோ இப்பொழுதெல்லாம் திகட்டுகிறது.

/

ஒரு முறையாவது பாட்டி

அவளைப் பற்றி மட்டும் யோசித்தாளா?

அணு அளவாவது மனிதத்தனமான சுயநலம்

அவளிடம் இருந்ததா?

ஒரு முறை யோசித்ததாக நினைவு.

தாத்தா தொண்ணூறு வயதில்

வாய்வாதத்தில் வீட்டை விட்டு வெளியேறுவதாக சொன்னபோது,

மாமாவிடம் கடுமையாக சண்டை போட்டாள்.

“சொத்தில் ஒரு பங்கு உனக்கு சேராது” என்று சொன்னாள்.

தாத்தாவிற்காக சொன்ன இந்தச் சொற்களும்

என் அளவில்

அரைகுறை சுயநலம் தான்.

/

ஆச்சி பாட்டி நேற்று இறந்து விட்டாள்.

இன்று

சொர்க்கத்தில் புடவையை இழுத்துக் கொண்டு,

தேவர்களுக்கு வியர்க்க வியர்க்க

பாட்டி சமைத்து கொண்டிருக்கக்கூடும்.

/

கண் முன் உயிரற்று என் ஆச்சிப்பாட்டி கிடக்கிறாள்.

எறும்புகள்

அவள் கைகளில் எஞ்சியப் பருக்கைகளை

எள்ளுப் பேரன்கள் போல் உரிமையாக சுவைத்து கொண்டிருக்கின்றன.

/

ஆச்சிப் பாட்டியின் autopsy முடிந்து விட்டது.

இனி நீங்களும் விரும்பியபடி 

அவள் பிரேதத்தை பரிசோதிக்கலாம்.

ஆர். கே. ஜி

Leave a comment

About the blog

RAW is a WordPress blog theme design inspired by the Brutalist concepts from the homonymous Architectural movement.

Get updated

Subscribe to our newsletter and receive our very latest news.

← Back

Thank you for your response. ✨