
நீரின் கைகள்
மனம் உடல் வாக்கு என்று
அனைத்தையும் சுத்தப்படுத்தும்
நீரின் கைகளை
என் முன்னோர்கள் நம்பி வந்தார்கள்.
காட்டிலும் மலையிலும்
பதுங்கி நின்ற பன்றிக் குட்டிகளை மாய்த்து
மாலையில் எதோ ஒரு நதியின் கரையில் அமர்ந்தபடி
பயத்துடன் இறந்து வீழ்ந்த அந்த பன்றியின் கண்களை
நீரில் பார்த்தபடி அவர்கள் அசைப்போட்டார்கள்.
உண்மையில் அக்காலம்
பசிக்கும் – பண்பிற்கும் விடை சொல்ல முடியாத ஒரு காலம்.
எப்படியோ அந்த காலத்தில்
எளிதாக மந்திரத்தில் நீர் சுத்தமானது.
சுத்த நீரில் மலர்கள் தூவப்பட்டன.
இன்று
நம் கண் முன்னே அழுக்கு நீரும்
நீரில் பிரதிபலிக்கும் பொய்யும் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.
இதை உணர்ந்தபடி
நிதானத்துடன்
நீரை சுத்தப்படுத்த
நீரின் கைகளையே நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
– ஆர். கே. ஜி
Leave a comment