துன்பம் என்னும் கேளிக்கை

The virtue of all-in wrestling is that it is the spectacle of excess.
Here we find a grandiloquence which must have been that of ancient theatres.
–Roland Barthes, Mythologies.
மல்யுத்தம் மிகையான சாகசங்களின் தொகுப்பு. அதன் வழி நாம் அடையும் சூழல், பழம் அரங்குககளின் சூழலுக்கு ஒப்பானது.
பல காலமாக இந்திய எழுத்துக்கள், சாகசங்களையே அதிகமாக நிகழ்த்தி வந்துள்ளன. சரி, தவறு என்பதைக் கடந்து, இப்போக்கு இந்திய யதார்த்தத்தை தழுவி அமைந்ததாகவேத் தோன்றுகிறது.
பொதுவாகவே இந்தியர்களின் மனம் மிகை உணர்ச்சிகளுக்கு பரந்த இடத்தை வாரி அளிக்கும் ஒன்று. நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி இறக்க, அதற்கு சிறிதும் சலனப்படாத இந்திய மனம், பிரபல பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் இறக்க, அவர் இறுதி சடங்கில் அரசு மரியாதை, பாரத ரத்னா என அனைத்தையும் ஒரே இரவில் கூவியது. வழக்கம் போல் தமிழ் நாட்டில் இவர்கள் வாழ்வைத் தொகுக்கும் நடுநிலைக் கட்டுரைகள்,நினைவேந்தல்கள் அரிதாகவேக் காணக் கிடைத்தன,
‘மக்களின் கலைஞன்’ போன்ற சொல்லாடல்கள் எல்லாம், சாகசத்திற்காக காத்திருக்கும் நம் மனநிலையைப் பிரதிபலிப்பதாகவேத் தோன்றுகிறது.
உறவில், எழுத்தில் தத்துவத்தில் என அனைத்திலும் மிகை உணர்ச்சி / சாகசத்தின் அம்சங்களை மட்டுமே இங்கு நம்மால் காண முடிகிறது.
சாகசங்கள் சுவையாக அமைந்தாலும், கணம் கணம் அதை நிகழ்த்தாக வேண்டியுள்ளது.
Wrestling demands an immediate reading of the juxtaposed meanings, so that there is no need to connect them – Roland Barthes, Mythologies
சாகசங்கள் ஒரு கணத்தில் பொருட்கொள்ளப்பட்டு, அடுத்த கணத்தோடு, அடுத்த நிகழ்வோடு இணைக்கப்படாமல் முற்று பெரும்.
பார்த்தேயின் வாதத்தை நமக்கு பரிட்சயமான ராமாயணத்தில் சித்தரிக்கப்படும் சூர்ப்பனகை, சீதையின் நிகழ்வுகளைக் கொண்டு பொருட்கொள்ளலாம் .
எத்தனையோ நாகரீகமான வழிகளில் இப்பெண்களின் குற்றங்களை (குற்றமாக இருக்குமாயின்) தண்டித்திருக்கலாம். மூக்கறுப்பதும், தீயில் பாய வைப்பதும், ‘Colosseum’ போன்ற அரங்கில் பார்வையாளர்களின் கூச்சலில் நிகழ வைத்தது போலவே உணர முடிகிறது.
புருவங்களை மடக்குவது, கைகளை மார்பில் அறைந்து கொள்வது, பார்வையாளர்கள் நோக்கி வசை மொழிகளால் கூச்சலிடுவது என மல்யுத்தர்ககளின் சிறு அசைவுகளும், பார்வையாளர்களின் ஆரவாரத்தை வேண்டி அமைவது போலவே, இச் சம்பவங்களும் வெளிப்படுகின்றன.
பெண்ணின் மூக்கை அறுக்கும் செயல், சாகச நொடியாக மாறி, அதன் மிகை ஒன்றினாலேயே, தர்க்கங்களை மீறி நம்முடன் இணைகிறது.
சீதை தீயில் பாய்வதும் அவ்வகையே. ராமன் தர்க்கங்களாலும், உரையாடல்களாலும் நிரப்ப முடியாத வெறுமையை, ஒரு சாகச நிகழ்வைக் கொண்டு கடக்க முயல்கிறான். அரசியல் தந்திரம், காவியச் சுவை, இதை எப்படி எடுத்து கொண்டாலும், ஏதோ ஒரு வகையில் சாகச ஆர்வத்திற்குத் தீனிப் போடும் வகையிலேயே இதுவும் அமைந்துள்ளது.
மிகைகளும், சாகசங்களும் இந்திய மன நிலையில் திடமான இடத்தைக் கொண்டுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
யோகம், லோகாயதம், சாங்கியம் எனப் பல ‘தத்துவ உரையாடல்கள்’ இந்திய ஞான மரபில் தொடர்ந்து வந்தாலும்,மக்களுடன் அதிகமாக உரையாடியது காப்பியங்களும், புராணங்களுமே.
பரசுராமன் மழுவை எரிந்து கடலைப் பின் வாங்கச் செய்தான் என்னும் சாகசப் படிமமே, சேரர்கள் வீழ்ந்தபின், கேரளத்தின் வரலாற்றை மீள் உருவாக்கத்திற்கு உதவியது. இப்படி, வரலாறு, தத்துவம் கடந்த, ‘Myth’ என்று சொல்லப்படுகின்ற புராணக் கதைகளே மக்களின் நினைவுகளோடு இன்று வரை உலாவுகின்றன.
இந்த மிகைப் போக்குகளுக்கு எதிரான விசையிலே இந்திய தத்துவ மரபு தன்னை நிறுத்த முனைகிறது. அகத்தை,எண்ணங்களை, சுற்றத்தை தர்க்கங்களால் அளக்க முயல்கிறது. தத்துவத்தின் உச்சமான அத்வைத்தம், பார்ப்பவன், பார்க்கும் பொருள், பார்வை என அனைத்தையும் ஏகமாக்கி (ஒன்றாக்கி), மிகைகளை சூன்யமாக்கும் சாத்தியத்தை முன் வைக்கிறது.
சாகசங்களின் வரம்புகளை உணராத காரணத்தால், ‘Breaking news’ ஒவ்வொன்றிற்கும் கூச்சல் போடும் மன நிலை இங்கு உருவாகியுள்ளது. இந்த போக்கு உரையாடல்களுக்கு வழி வகுக்காமல், சார்புடைய வாதங்களை நோக்கியே நம்மை அழைத்துச் செல்லுகிறது.
எவ்வளவு தீவிரமாக நாம் விமர்சனம் வைத்தாலும், துன்பத்தை கேளிக்கையாகப் பார்க்கும் மன நிலையிலிருந்து நாம் இன்று வரை விலகவில்லை. இந்த ஒரு காரணத்தினால் மட்டுமே, ‘துன்பம்’ நமக்கு வேண்டிய Theatrical – அரங்க சூழலை இன்று வரை வெற்றிகரமாக அமைத்துக் கொண்டிருக்கிறது.
பறவைகள் இரண்டு இறக்க, அதன் சோகத்திலிருந்தே (சோகம்-ஸ்லோகம்) ராமாயணம் என்னும் பெரும் காப்பியம் பிறந்ததாக வால்மீகி இக்கருத்தையேக் குறிப்பாக உணர்த்துகிறார். பெரும் காப்பியங்கள் துன்ப ரசத்தை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டன. தமிழ் நிலத்தில் சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டையும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
Suffering is spectacular
So great are the tragedies…
– ஆர். கே. ஜி
இணைப்பு
http://homes.chass.utoronto.ca/~ikalmar/illustex/Barthes-wrestling.htm
