
“சப்த ஜாலம் மஹாரண்யம்
சித்தப்பரமண காரணம்“
சொற்களுக்குள் தொலைந்தவன்
அடர்ந்த பெரும் காட்டில்
திக்கறியாது சுழலும்
ஒருவனுக்கு ஒப்பாவான் – விவேக சூடாமணி
வளர்ந்தவர்கள் வார்த்தைகள் விற்கிறார்கள்
சொற்களுக்குப் பின்
ஒளிந்து கொள்வதில்
என்றோ
விருப்பம் போய் விட்டது
யாரிடமும்
எதையும்
சொல்வதற்கில்லை
என்பதை
தெளிவாக உணர்கிறேன்
இது வரை
விமர்சித்து
தூற்றியவைப் போக
உலகில்
ஏதேனும் எனக்கென
மிச்சமிருந்தால்
அதை மட்டுமே சுவைக்க விரும்புகிறேன்
இப்பொழுதெல்லாம்
வார்த்தைகள்
அழைத்துச் செல்லும்
உலகங்களை
இயல்பாகக் கடக்கிறேன்
இப்படி இருந்தும்
ஏனோ
என்னைக் காட்டிலும் அனுபவமும்
என்னைக் காட்டிலும் அறிவும்
என்னைக் காட்டிலும் கர்வமும் உடைய
பெரியவர்கள்
நான் வளர்ந்த பின்னும்
விடாமல்
மீண்டும் மீண்டும்
என்னிடம்
வார்த்தைகள் விற்கிறார்கள்
அவற்றை
வாங்க மனமில்லாமல்
கோமாளிகளாய் அவர்கள்
கைத்தட்டி கூத்தாடுவதை
காலில் சக்கரம் பூட்டி சறுக்குவதை
மெல்லியப் புன்னகையுடன்
கடந்து செல்கிறேன்
சொற்களுக்குப் பின் நின்று
எட்டிப் பார்க்கும் அவர்கள்
என்னை ஒரு நாள் நெருங்கக் கூடும்
– ஆர். கே. ஜி