ஜாஸ்

ஜாஸ்

louis armstrong Painting by AIME DA COSTA | Saatchi Art

டொரண்டோவில் வேலைக்காகத் தேடிக் கொண்டிருந்த காலங்களில், சென்ட்ரல் ஸ்குவேரின் 15 – 20 அடி டிஜிட்டல் டிஸ்பிளேத் திரைகளின் கீழ் அமர்ந்து கொண்டு டண்டாஸ் சாலையில் ஏதேதோ நிலங்களிலிருந்து வந்திருந்த மக்களை நோட்டம் விடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். பறவைகளை தொலைநோக்கியில் பார்ப்பது போல், மக்களின் அசைவுகளை உன்னிப்பாக கவனிப்பது எனக்கு அக்காலங்களில் பிடித்த ஒன்றாக இருந்தது. ஜாஸ், ஹிப் ஹாப் என மால்களின் வாசலில் இலவசமாக எத்தனையோத் திறமைகளைப்  பார்க்கலாம். 

‘பீப்பள் வாட்சிங்’ செய்து கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் தான், லூவி எனக்கு அறிமுகமானான். கிளாரினெட் வாசிக்கும் ஆப்ரிக்க நாட்டுக் கலைஞன். பழுப்பு நிற கோட் சூட் அணிந்து, நாற்காலியில் மூன்றடி வரை நீண்டத் தன் கால்களைப் பரப்பிக் கொண்டு, ஜனங்களைப் பொருட்படுத்தாமல் தன் வழிக்கு எதையோ வாசித்துக் கொண்டிருந்தான்.

அவன் வாசிக்கத் தொடங்கி, குறைந்தது ஒரு மணி இருக்கக் கூடும். எழும்ப மனமில்லாமல், இசையில் தொலைந்திருந்தான். அவ்வப்பொழுது, அணைந்து போன டொபாக்கோ பைப்பை கொளுத்த மட்டும், கிளாரினெட்டைத் தரையில் வைத்தான். கைகளை பாக்கெட்டினுள் சருக்கி லைட்டரைத் தேடுவது முதல் நிலை. இடது கை ஆள்காட்டி-நடு விரலுக்குள் பைப்பை சொருகிக் கொண்டு, பிளாஸ்டிக் நாற்காலியில் சாய்ந்தபடி கிளாரினெட்டை புகைப்பது இரண்டாம் நிலை. 

டொபாக்கோ பைப்பில் கஞ்சா இருக்கக் கூடும் என்பது பார்த்த மாத்திரம் தெரிந்தது. 

அவன் முன் நின்றிருந்த ஜனத்தைப் பார்த்து கேலியாக சிரித்தான். அவர்களை அவன் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. மால்களிலிருந்து வந்து கொண்டிருந்த ஜனங்களும், அவனை விசித்திரமாகப் பார்த்தும், இயல்பாகக் கடப்பது போல் கடந்தனர். 

சமூகம் என்ற ஒன்றை எடுத்துக் கொண்டால், ஏழ்மை, சிறுபான்மை, போக்கிடம் அற்றவர்கள் எல்லாம் எதிர்ப்பார்க்கக் கூடிய சாத்தியங்கள் என்பது போல் ஒரு கேடுகெட்ட அலட்சியம் அவர்களின் அசைவில் தெரிந்தது. 

விளம்பரப் பலகைகளில் உச்சக்கட்ட அபத்த விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருக்க, அதன் நிழலில் ஒரு மகத்தானக் கலைஞன் அசாத்திய இசையை வழங்கிக் கொண்டிருந்தான். இரவு பத்து மணி அளவில் அவன் வாசித்து முடித்ததாக அறிவித்து, கிளாரினெட்டை மரப்பெட்டி ஒன்றில் பத்திரமாக நுழைத்தான். பிளாஸ்டிக் நாற்காலியை மடித்து பைக்குள் சொருகி, அருகில் இருந்த பொது நாற்காலியின் பிடியில் மரப்பெட்டியை சாய்த்து, மீண்டும் புகைக்கத் தொடங்கினான். 

நிச்சயம் என் எழுத்தில், அவனைப் பதிவிட வேண்டும் என்று அக்கணம் தோன்றியது. 

சொல்லிக் கொள்ள லஜ்ஜையாக இருந்தாலும், ஏதோ ஒரு வகையில் சாமானியத்திற்கு மிகையான அதீதங்களே எழுத்தாளின் கவனத்தை கவர்கின்றன. சில நேரத்திற்குப் பின் நான் அவனை விடாப்பிடியாகத் தொடர்ந்து கொண்டிருப்பதை கவனித்தான்.

“ஸ்மோக்?”

“நல்ல இசை. இதை உங்களிடம் சொல்ல சங்கோஜமாக இருந்தது. அதான் இத்தனை நேரம் காத்திருந்தேன்.”

“பாஸ்டர்ட்! இந்த அங்கீகரத்தால எனக்கு என்ன லாபம் சொல்லு? போய்  வேலை ஏதாவது இருந்தா பாரு.”

“இல்லைன்னு தானே உன்னோடப் பேசிட்டு இருக்கேன் பாஸ்டர்ட்.”

மௌனம்.

“என் இசை அவ்வளவு நல்லா இருக்கா?”

“நிச்சயமா. நான் இதுவரைக் கேட்ட சிறந்த இசைகளில் உன்னோடதும் அடங்கும். ஆனா நீ இப்படி தெரு ஓரமா ஜாஸ் வாசிச்சா போதுமா? உன் இசையை நீ இன்னும் பெரிய விதத்துல மக்களிடம் சேர்க்கலாமே.”

“அவசியம் இல்ல.”

மௌனம்.

“உங்கப் பெயர்?”

“லூயி. நீ?”

“ராம்.”

அன்றிரவு டொரண்டோவின் பார்களில் இரவைக் கழித்தோம். பின் இரவில், ‘குயின்’ தெருவில் நின்ற வணிக வளாகம் ஒன்றைத் தேர்வு செய்து, அதன் பின்னால் விரிந்திருந்த மைதானத்தில் ஒதுங்கினோம். கிழக்கில் லேக் ஒண்டாரியோ இருளில் உருவின்றி அழுந்தியிருந்தது. டிராம், கார்களின் இறைச்சல் எதுவுமின்றி, உயர்ந்த கட்டிடங்களின் வெளிச்சமும், அரை நிலாவும் இரவை அலங்கரித்தன. 

“இரவுகள் எத்தனை அழகானவை லூவி. 

என் தோழி ஒருத்தி, தான் இது வரைப் பின் இரவுகளை ஒரு முறைக் கூடக் கண்டதில்லை என்று என்னிடம் வருத்தமாகச் சொன்னாள். என்னால் நம்ப முடியவில்லை. பெண் என்பதால் மாலை ஆறு மணிக்கெல்லாம் வீடு திரும்பி, வீட்டில் நேரத்தை செலவிடுவதை அவள் வழக்கமாக வைத்திருந்தாள். இந்தியாவில் எத்தனைப் பெண்கள் இப்படி பின் இரவைப் பார்க்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இரவின் நிசப்தம் பெண்களுக்கு பிடித்த ஒன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.”

லூவி சிரித்தான்.

“கனடாவில் நீ என்ன செய்கிறாய்?”

“கனடா வந்திறங்கி மூன்று மாதங்கள் ஆகி விட்டது. வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு எழுத்தாளன் என்பதால், இந்நேரத்தில் என்னால் அதிகம் எழுத முடிகிறது. டொரண்டோவைப் பின்னணியாக வைத்து, புனைவுக் கதைகளை எழுதி வருகிறேன்.”

“எழுத்தாளனுடன் தான் இத்தனை நேரம் பேசிக் கொண்டிருக்கிறேனா. அது தெரியாமல் போனதே!”

கூச்சத்தில் சிரித்தேன்.

“வளரும் எழுத்தாளன்.”

“ஏன் நீ அங்கீகாரத்தின் மேல் இத்தனை மோகத்துடன் திரிகிறாய்? யாரும் படிக்கவில்லை என்றால் நீ எழுத மாட்டாயா?”

“தெரியல லூவி … எழுத்தும் இசையும் இயல்பாகவே வெளி நோக்கிப் போகக் கூடிய ஒன்று. ‘Outbound.’ அதை உள்வாங்கும் அவை இல்லையென்றால் கொஞ்சம் பதற்றமாகத் தான் இருக்கிறது.”

லூவி சிரித்தான்.

“இசை, கேட்பார் இல்லையென்றாலும், காற்றாய் பிரபஞ்சத்தில் கரைந்து போகும். கலைஞனுக்கும் பிரபஞ்சத்திற்குமான உரையாடலில், மனிதர்கள் தடைக் கற்கள் என்று சொன்னாலும் மிகையில்லை.”

மைதானத்தில் ஒன்றிரண்டு டிரெயிலர்கள், ஜீப்கள் நின்றன. காலையில், மைதானம்  சுற்றியிருந்த வணிகக் கட்டிடங்களுக்கு வாகன நிறுத்தமாக மாறக் கூடும் என்பதை யூகிக்க முடிந்தது. காலையிலிருந்து அணிந்திருந்தப் பழுப்பு நிறக் கோட்டை விலக்கி, லூவி நீல நிறச் சட்டையும், பேண்டுடன் தரையில் அமர்ந்து கொண்டான். புழுதியைக் குறித்து கவலைப் படும் மன நிலையில் அவனோ நானோ இல்லை. 

லூவி கிளாரினெட் வாசிக்கத் தொடங்க, இரவின் ஏதோ ஒரு மூலையில் தொலைந்தவன் அடைக்கலம் கண்டது போல் உணரத் தொடங்கினேன்.

தூக்கம் முதல் முறை என்னிடம் நல்ல இடத்திற்காக ஏங்கவில்லை. மண்ணை மோந்தபடி ஆழ் உறக்கம். பின் ஏதேதோ கனவுகள். 

ஆப்ரிக்கா காட்டில் நானும் லூவியும். 

எருமைக் கூட்டம் முதிய சிங்கம் ஒன்றை துறத்துவது போன்று காட்சி. சில வினாடிகளில், சிங்கம் செய்வதறியாது எங்கள் திசை நோக்கி ஓடத் தொடங்குகிறது. காட்டின் ராஜாவான சிங்கத்திற்கும், கடைக்குட்டி எருமைக்கும் பயந்து ஓடத் தொடங்கினோம். கோட் அணிந்திருந்ததால், ஓடுவதற்கு கடினமாக இருந்தது. சிங்கம், எருமைகள் போக, அவற்றிற்கு மேலாகப் பறந்தபடி, விசாலமான சிறகுகள் கொண்ட கழுகு ஒன்றும் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. 

சூரியன் அஸ்தமிக்க எத்தனமாகிக் கொண்டிருப்பதைக் கண்டு, அவன் அஸ்தமிக்கும் மேற்கு திசை நோக்கி ஓடத் தொடங்கினோம். சூரியன், தன் ஒளிக் கதிர்களில் எங்களை அமர்த்தி, இரவின் திரைக்கு பின்னால் எங்களை மறைத்துக் கொண்டான். சிங்கமும், எருமைகளும் நாங்கள் வானம் ஏறும் காட்சியை உற்சாகமாகப் பார்த்தன. கழுகு மட்டும் எட்டிய அளவிற்கு எங்களைத் தொடர்ந்தது. காலையில், சூரியனின் கதிர்களில் சருக்கிக் கொண்டு,டொரண்டோவின் ‘குயின்’ தெருவில் நானும் லூவியும் விழுந்தோம். 

காலையில் லூவியிடம் என் கனவைக் குறித்து பகிர்ந்தேன்.

“ஏன் ஆப்ரிக்கா என்றாலே, காடும் சிங்கமும் என்று மட்டுமே சித்தரிக்க முடிகிறது. ஆப்ரிக்காவிற்குப் பன்முகத் தன்மையே இல்லை என்று நினைக்கிறாயா? உங்களின் இந்த நினைப்பு தான் எங்களை எங்கள் நாட்டில் வளர விடாமல் செய்கிறது. அதனால் தான் நாங்கள்,  பிரான்சிற்கும், அமெரிக்காவிற்கும் ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த பொதுத்தன்மையான மதிப்பீடு எங்களுக்கு எவ்வளவு பாரம் என்பதை உணர்கிறாயா? ஆனால், எத்தனை எளிமையாக, வேடிக்கையாக உங்களால் இதைச் செய்ய முடிகிறது பார்! நாம் நிற்கும் இந்த ‘குயின்’ தெரு போல் உன்னால் ஆப்ரிக்காவை ஒரு நாளும் உருவகிக்க முடியாது இல்லையா? நீ எழுத்தாளன் என்பதால் இதைப் பகிற்கிறேன். இந்த பொது மதிப்பீடுகளைக் கலைக்க மட்டுமே நீ எழுத வேண்டும். காற்றில் சொற்களைக் கலப்பதில் விருப்பமில்லை என்றால், மக்களிடம் இதைப் பற்றிப் பேசு. எழுத்துக்கள் அவர்கள் மீது குண்டுகளாகப் பாயட்டும். அப்பொழுது தான் அவர்கள் சுறனையற்றத் துயிலிருந்து எழும்புவார்கள்.”

என்னை ஒரு முறை சடங்காக அணைத்துக் கொண்ட பின் லூவி புறப்பட்டான். அவன் உலகை அறிந்து கொள்ள,அவன் எனக்கு வாய்ப்பைத் தரவில்லை. 40 வயது இருக்கக் கூடிய ஆப்ரிக்கன், டொரண்டோ ஸ்குவேரில் அறிமுகமான ஜாஸ் இசைக் கலைஞன் என்ற அளவில் மட்டுமே லூவியின் படிமத்தைத் தொகுக்க முடிந்தது. 

எதிர்ப்பார்த்தது போல் லூவி அதன் பின் டொரண்டோ ஸ்குவேர்  வருவதை நிறுத்தி விட்டான். மக்களின் முன்னால் வாசிக்கும் அலுப்பை அவன் தொடர விரும்பவில்லை.

டிஜிட்டல் திரைகளில் விளம்பரங்கள் அதே உற்சாகத்தோடு ஓடிக் கொண்டிருந்தன… லூவியின் இடத்தை இன்னொருக் கலைஞன் எடுத்துக் கொண்டான்.

ஆர். கே. ஜி. 

Eaton Centre (Ongoing Renewal) | UrbanToronto

Published by ராம் கார்த்திக் கணேசன்(Ram Karthik)

எழுத்தாளர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: