சண்டிகர் டு சிம்லா

ஹம்சாவின் கண்கள் அயர்ந்திருந்தன.

அம்மா, அப்பாவின் மேஜைக்கருகில் காபியை வைத்தாள். அம்மா இப்போதெல்லாம் அவர் விரும்பும் காபிக்கு மேல், அலங்காரமாக பால் நுரை வைப்பதில்லை. இருவருக்குள் பேசிக்கொள்ளும் சொற்களும் சொற்பமாகி விட்டது.

அப்பா வழக்கம் போல் திட்டிக் கொண்டே ஹிந்துவைப் புரட்டினார்.

“இவங்கப் பிரச்சனையே எல்லாத்துக்கும் ஒரு ஸ்டான்ட் எடுக்கறது தான்.”

விஸ்வநாதன் தனக்கான அறையில் அமர்ந்து கொண்டு, காபியின் நெடியை நுகர்ந்தப்படியே அரை இருட்டில் பேப்பர் படிப்பது வழக்கம்.

“குட் மார்னிங் பா.”

“மார்னிங். மார்னிங்.”

“என்னப்பா?”

“ஹம்சா, உன்ன படிக்க வெச்சாச்சு. வேலைக்கும் அனுப்பியாச்சு. எங்க கடமை இன்னும் ஒன்னு தான் பாக்கி. உன் அம்மா தொல்ல தாங்க முடியலடீ. மூஞ்சிக் கொடுத்து பேச மாட்டேங்கறா. புரிஞ்சுக்கோயேன். நான் என்ன கோயம்பேடுக்கு போய் மாப்பிள்ளையப் பொறிக்கிட்டா வர முடியும். எனக்கும் வயசு ஆகுது. நடக்க முடியல.

நேத்து வாட்ஸாப்ல அனுப்பின ரெண்டு பசங்களோட போட்டோ பார்த்தியா? கர்மம், இதெல்லாம் அப்பன் வேலையா என்ன?”

“அதான் பா நானும் சொல்றேன். ஏன் இவ்வளோ மண்டைக்கு எடுத்துக்குறீங்க? அது பாட்டுக்கு நடக்கும்.”

“என் காபில அடி விழுதே.”

இருவரும் சிரிக்கத் தொடங்கினர். தந்தை மகள் உறவில், Wolverine நகங்கள் முதுகு சொரிந்து கொள்வதற்கு தான் என்பது விஸ்வநாதனுக்கு தெரியாமல் இல்லை.

“எதையோ பண்ணு போ.”

ஹம்சாவிற்கு திருமணப் பேச்சு, அப்பா, அம்மா, சென்னை எல்லாம் அலுத்து விட்டது. எங்கேயாவது பிய்த்துக் கொண்டு ஓட வேண்டும். தன் வாழ்வைக் குறித்த சந்தேகங்கள் வேறு அவளை வருத்த தொடங்கியிருந்தது.

மார்க்கெட்டில் நீரைத் தெளித்து வெண்டைக்காய்களை வைப்பது போல், எவனோ ஒருவன் வாங்கிப் போவதற்கு ஹம்சா வளர்ந்து வந்தாள்.

ஹம்சாவிற்கு பெண்ணியம், சுய அடையாளம் போன்றவற்றில் நம்பிக்கைகள் இல்லை. கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ளும் வழக்கம் கூட இல்லாதவள் என்பதால், இதெல்லாம் எதிர்பார்ப்பதற்கில்லை. பள்ளி, கல்லூரி இரண்டிலும் சாமான்யப் பெண்ணாக, இருந்த இடம் தெரியாமல் படிப்பை முடித்தாள்.

“சாதரணமா இருந்தா தான் என்னவாம். எப்பவுமே இவங்களுக்கு தன்ன வித்தியாசமா காமிச்சிக்கணும்.”

விஸ்வநாதன் தனக்கு பிடித்தமான ‘பக்த மானஸ ஹம்சிகா’ என்னும் நாமாவிலிருந்து ‘ஹம்ஸா’ என்னும் பெயரை அவளுக்கு சூட்டியிருந்தார்.

“என் பொண்ணு அம்பாள் ரூபம். அவளே குழந்தையா வந்துருக்கா.”

ஹம்சாவிற்கு இந்த வகையான பேச்சுகளிலும் பிடியில்லை.

யதார்த்தத்தில், அவளுக்கு அவளிடம் பிடிக்காதது நடை ஒன்று தான். அகலமாகக் கால்களை விரித்து நடப்பதால், அன்னம் அல்ல, யானை நடை. அதை மாற்றுவதிலும் ஹம்ஸா பெரிதாக அக்கறைக் கொள்ளவில்லை.

அவளிடம் இலக்கு என்று சொல்வதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை. விமர்சனங்கள் இல்லை. ஹம்சா உள்ளபடி வாழ்வை எதிர் கொண்டாள்.

ஹம்சாவின் கண்கள் அயர்ந்திருந்தன.

சண்டிகர் நகரின் காலைகள் ஹம்ஸாவிற்கு பிடித்திருந்தது. சாலைகள் எங்கும் துண்டிக்கப்படாத மரங்கள், தம் கைகளால் நிழலின் மையை தெருவின் கன்னங்களில் அப்பிக் கொண்டிருந்தன. குல்மோஹர் மலர்கள் அதிகம் பூத்திருந்ததால், கருமைக்கு சிவப்பு அழகை சேர்த்தது. சென்னையில் அதிகம் பார்க்கக் கிடைக்காத வெள்ளைப் பட்டைகள் கொண்ட அர்ஜுன மரங்கள், சூரிய தேஜஸுடன் பொலியும் மலர்கள் கொண்ட கடம்ப மரங்களும் காணக் கிடைத்தன. ஹம்சாவிற்கு மலர்களின் பெயர்களை அடையாளம் செய்ய முடியவில்லை என்றாலும், அதை ரசிப்பதற்கு தடையாக அது அமையவில்லை.

ஹம்சா தன் கல்லூரித் தோழியான அம்ரித்தின் திருமணத்திற்கு வந்திருந்தாள். அம்ரித்தின் தந்தை சென்னை ஆர்மி கண்டோன்மெண்ட்டில் 2005 வரை, பத்து ஆண்டுகள் நிர்வாகப் பணியில் இருந்தார். இதனால் அம்ரித்திற்கு பள்ளி, கல்லூரி இரண்டும் சென்னையில் அமைந்தது.

அம்ரித் சரளமாகத் தமிழ் பயின்று கொண்டாள். ஹம்சா தமிழர் மானத்தை எதுவும் கற்காமல் காப்பாற்றினாள்.

ஹம்சா அம்ரித்தின் அண்ணன் திக்விஜயை சகோதரனாக பாவித்தாள். அவன் கைகளைப் பிடித்து குலுக்கி, அவன் வலிமையைத் தராசுப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தாள்.

“அண்ணா உங்கப் பேர் ஒன்றே போதும். நீங்க ஜவான் ஆவீங்கன்னு சொல்வதற்கு. திக் விஜய் சிங்! பாருங்க எவ்வளவு கம்பீரமா இருக்கு!”

திக் விஜய் இதைக் கேட்கும் போதெல்லாம் சிரிப்பான். ஹம்சா நினைத்தப் படி அமையவில்லை என்றாலும், சண்டிகர் கண்டோன்மெண்ட்டில் தந்தையின் சிபாரிசால் வேலைக் கிட்டியது.

திக் விஜய், பெண்கள் பொதுவாக வீரத்துடன் இருக்க ஆசைப்பட்டான். இறந்த அம்மாவின் நினைவு காரணமாக இருக்கலாம். கோடைக் காலங்களில், ஒவ்வொரு ஞாயிறும் சண்டிகரிலிருந்து சிம்லா வரை பைக்கில் செல்வதை வழக்கமாக வைத்திருந்தான். உடன் வர பைக்கிங் விரும்பிய நான்கு நண்பர்கள்.

“ஹம்சா, நான் பைக் ஓட்ட சொல்லித் தந்தது ஞாபகம் இருக்கா?”

“ரொம்ப நாள் ஆச்சுண்ணா. ஒரு நாள் முயற்சிப் பண்ணா சரியா வந்துடும்னு நினைக்கிறேன்.”

“அப்போ இந்த சண்டே நீ, நான், அம்ரித் சிம்லா வரை பைக்லப் போவோம். கல்யாணத்துக்கு அப்புறம் இதெல்லாம் நடக்குமாத் தெரியாது.”

“அண்ணா பயமா இருக்குமே!”

ஞாயிறு காலையில் சிம்லா செல்ல மூவரும் ஆயத்தமாயினர். சண்டிகர் எழ விருப்பமில்லாமல் கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தது. பேசியபடி, திக் விஜயின் நண்பர்கள் நால்வர் அவன் வீட்டின் முன்னால் குழுமினர். திக் விஜய் அம்ரித்திற்கும் ஹம்சாவிற்கும், இரு என்பீல்ட் பைக்குகள் வாடகைக்கு எடுத்திருந்தான்.

காலை ஆறரை மணி அளவில், கால்கா மலை அடிவாரத்தை அனைவரும் அடைந்தனர். ஹம்சா இது வரை மேடுகள் குறைவென்பதால் ஒரு அளவிற்கு சமாளித்து பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தாள். திக் விஜயும் அவ்வப்பொழுது உரக்கக் கூவி அவளை உற்சாகப் படுத்தினான்.

கால்கா கடந்து 7.30 மணி வாக்கில், சிற்றுண்டிக்காக ஒரு சிறிய ஹோட்டலில் ஒதுங்கினர்.

திக் விஜய் தன் நண்பர்களை அறிமுகப் படுத்தினான். சங்கோஜத்துடன் அவர்கள் ஹம்ஸாவைப் பார்த்து சிரித்தனர். ஹம்சாவிற்கு குறிப்பாக கரண்வீரைப் பிடித்திருந்தது. ஆறடிக்கு ஆஜானுபாகுவாக தோன்றினாலும், அவன் ஒரு முறைக் கூட அவள் கண்களுடன் உறவாடவில்லை.

“ஏன் அண்ணா! உங்க ஊர்ல எல்லாப் பெயர்களும் ஜவான் துவனிலையே இருக்கு? கரண்வீர்! திக் விஜய்!”

ஹம்சா ஜவான் ஒருவனின் குரல் போல பாவனை செய்ய, கரண்வீர் அடக்க முடியாமல் சிரித்தான். அவளுக்காக சூடானத் தேனீரை அவள் கைகளில் ஒப்படைத்தான். அவன் விரல்கள், அவளை ஸ்பர்சிக்கக் கூடாதென்பதில் கவனமாக இருந்தான்.

“அத்ரக் சாயா. நிதானமா பார்த்து குடிங்க.”

அவளிடம் சாயாவை ஒப்படைத்து, புகைக்க கிளம்பினான்.

அக்கணம் ஆண்களை காமாந்தர்களாக கற்பிக்கப்பட்ட பாடங்கள் அனைத்தும், கரண்வீரால் உடைந்து போனது. ஐந்து ஆண்களுடன், எக்காலத்திலும் அருகில் அமர்ந்து இப்படி தடையுமின்றி சிரித்ததாக ஹம்ஸாவிற்கு நினைவில்லை.

பைக்குகள் அனைத்தும் வரிசையாக மலைச் சரிவில் ஏற முனைந்தன. சிறிது தூரம் ஏறியப் பின், இன்னொரு பைக் குழாமும் அவர்களைத் தொத்திக் கொண்டது. அனைவரும் பதட்டமில்லாமல், நீண்ட வரிசையாக மலைச் சாலைகளை அலங்கரித்து ஓட்டினர்.

அக்கணம் ஹம்சாவால் ஒரு வித நிதானத்தை உணர முடிந்தது. அவளுக்கு முன்னாள் கரண்வீர் என்பதில் பைக்கை செலுத்திக் கொண்டிருந்தான். லெதர் ஜாக்கெட் அணிந்திருந்ததால், அவள் முகம் மட்டுமேக் குளிரை உணர்ந்தது.

ஒன்பது மணி அளவில் சாயாவிற்கு ஒதுங்கினர். ஒரு மணி தூரத்தில் சிம்லா.

கரண்வீர் மீண்டும் பவ்யமாக அவளிடம் சாயாவை நீட்டினான்.

“என் வாழ்க்கைல ரொம்ப முக்கியமானப் பயணம் இது கரண்வீர். எனக்கு இந்த பைக் பயணம் எல்லாம் இன்னும் பயமா தான் இருக்கு. ஆனா, யு நோ வாட், இந்த பயம் நான் தேர்ந்தெடுத்தது! யாரும் சொல்லித் தரல. என் பயம் என்னோட சாய்ஸ்!”

கரண்வீர் சிரித்தான்.

“நான் ஒரு தடவ உன்ன ஹக் பண்ணட்டா? என்னமோ எனக்கு உன்னப் பிடிச்சிருக்கு. ஏன்னு சொல்லத் தெரியல.”

கரண்வீர் அவளை முழுதாக அணைத்து தட்டிக் கொடுத்தான். அவன் அணிந்த லெதர் ஜாக்கெட்டின் கதகதப்பும், நெடியும் ஹம்ஸாவை வசீகரித்தது.

12 Delhi To Shimla Trains Guide 2020: Route, Time Schedule(+FAQs!)

காலை பத்தரை மணி அளவில், அவர்கள் சிம்லாவை அடைந்தனர். சிம்லாவின் எல்லையில் இருந்த ரயில் நிலையம் வரை சென்று திரும்புவது வழக்கம்.

கரண்வீரும், திக் விஜயும் புகைக்க ஒதுங்கினர். சிறிய மேட்டில் நின்றிருந்த ஹம்ஸாவிற்கும் அம்ரித்திற்கும், பிறையாக தூரத்து மலைகளை சூழ்ந்திருந்தப் பனிப்படலம் தெரிந்தது. எரிந்து கொண்டிருந்த ஹம்ஸாவின் கண்களை அக்காட்சி குளிர்வித்தது.

அம்ரித்தின் திருமணம் முடிந்து ஹம்சா சென்னை அடைந்தாள். இறங்கியக் கையுடன் அவளுக்கு பெண் பார்க்கும் படலம்.

அனைவரின் வியப்புக்கு, ஹம்சா தன் நெடியக் கூந்தலை சீராக வாரி முடிந்தாள். பின்னலில் பூக்களை அலங்கரித்தாள். விஸ்வநாதன் முரண்டு பிடிக்காத பசுமாட்டைத் தடவிக் கொடுப்பது போன்று, ஆனந்தத்தில் ஹம்ஸாவை அணைத்துக் கொண்டான்.

ஹம்சாவிற்கு இதெல்லாம் பெரிதாகத் தோன்றவில்லை. இந்த அடையாளங்களைப் போர்வையாக மட்டுமேப் பார்க்க விரும்பினாள்.

அவள் எதிர்ப்பார்த்ததெல்லாம் மீண்டும் அந்த பைக் பயணம் வாழ்வில் ஒரு முறையேனும் நிகழ வேண்டும். இந்த ஒன்றை மட்டும், ‘எதிர்ப்பார்ப்பு’ என்ற பட்டியலில் போட்டு விஸ்வநாதனிடம் சேர்த்தாள் .

ராகு காலம் முடிந்து ஞாயிறு மாலை ஆறரை மணி அளவில், மாப்பிள்ளை வீட்டார் ஹம்ஸாவின் வீட்டை அடைந்தனர்.

“சாரி … நேரம் காலம்லாம் பார்த்து வர வேண்டியதாப் போச்சு. அதான் கொஞ்சம் லேட். “

இந்த வார்த்தைகளை வைத்து மாப்பிள்ளை வீட்டாரை அளவிட முடியுமா என்பது விஸ்வநாதனுக்கு புரியவில்லை. கைகளைக் குவித்து, தன் மனைவியுடன் அவர்களை உற்சாகமாக வரவேற்றார்.

“வாங்கோ சார். பெரிய வார்த்தைலாம் வேண்டாமே. பையன் வரல?”

பையனின் அம்மாள், பெருமிதத்தில் வேண்டாததைக் கொளுத்திப் போட்டாள்.

“கேட்காதிங்க சார். அவன் பொதுவா கார்ல வரது இல்ல. கேட்டா Pollution அது இதுனு மாசுக் கட்டுப்பாடு இன்ஸ்பெக்டர் மாதிரிப் பேச ஆரம்பிப்பான். எவ்வளவோ சொல்லியாச்சு. பைக்காவது வாங்குடான்னு. கேட்க மாட்டேங்கறான். பின்னாடி 37 ஜி ல வந்துண்டு இருக்கான்.”

ஹம்சாவிற்கு இது எட்ட இன்னும் பதினைந்து நிமிடங்கள் ஆகலாம் என்பதால், விஸ்வநாதன் துவனி மாறாமல் வந்தவர்களை வரவேற்றார்.

“வாங்கோ! உள்ள வாங்கோ!”

– ஆர். கே. ஜி

Published by ராம் கார்த்திக் கணேசன்(Ram Karthik)

எழுத்தாளர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: