டொரோண்டோவில் யானைகள் இல்லை
நகுலன் பூக்களைத் தொடுப்பது போல், தன் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் ஆராய்ந்து, அழுகிப் போன சில பூக்களைத் தவிர்த்து, அழகிய பூமாலையாக கோர்க்க விரும்பினான். பல வித மலர்களை அவன் சேர்க்க விரும்பவில்லை. பூக்கள் அனைத்தும் ஒரே வகையாகவும், நிறமாகவும், திடமான ஒரே அளவு வாசனைக் கொண்டதாகவும் இருக்க, மூக்கின் நுனியில் பழுத்திருந்த தன் கண்களைக் கொண்டும், நாசியின் துவாரம் கொண்டும் நுகர்ந்தான்.
அவன் பெரிய பயணங்களை விரும்பக் கூடியவனில்லை என்றாலும், அவன் கால்கள் வேறு கதை சொல்லின. படித்தது திருச்சியில். முதல் வேலை தில்லியில். பின் சேல்ஸ் மேனாக இந்தியாவின் எத்தனையோ நகரங்களுக்கு பயணித்திருக்கிறான்.
பொதுவாக தென் இந்தியருக்கு கங்கை, யமுனை பரிச்சயம். ஆனால் லக்னோவில் ஓடும் கோமதி குறித்து நகுலனால் அரை மணி வரைப் பேச முடியும். கங்கை பாய்ந்தோடும் கான்பூர் போன்ற நகரங்கள், கிழக்கு கடலைப் பார்த்திருக்கும் பம்பாய் ஒட்டிய நகரங்கள், சண்டிகர் அருகில் இருக்கும் பிவாடி, ஜம்மூ, இப்படி பல தொழிர் பேட்டை அடங்கிய நகரங்களை, தன் வேலையின் நிமித்தமாக தரிசித்திருக்கிறான்.
ஊர்களின் பின்புலம், அதன் அரசியல், புராதன இடங்கள், நகரை ஒட்டி ஓடும் நதி என அனைத்தையும் படித்து கொண்டு போவது, அல்லது ஊரில் இறங்கி விசாரிப்பது வழக்கம்.
ஊர் இடங்களை சுற்றிப் பார்க்க நேரம் இல்லையென்றால், அதிக பட்சமாக அந்த ஊரில் ஓடும் நதியின் கரையில் ஒரு ஸ்மோக் செய்து இரவில் பஸ் ஏறி விடுவான். ஹரிதுவாரின் கரையில் பல முறை புகைத்த ஞாபகம்.
நதி இல்லையென்றால், பஸ் நிறுத்தம் ஒட்டிய தெருக்களில் நடந்து, அந்தந்த ஊரின் வாசனையை நுகர்ந்து கொள்வான். இப்படி வாசனைகளைக் கொண்டே அவனால் இந்திய நகரங்களை எல்லாம் அடையாளம் செய்ய முடியும்.
“உங்கள் வீடு எங்கே?”
இப்படி எவரேனும் கேட்டால், கேட்டவன் வருந்தும் வரை வாரிக் கொட்டுவான்.
சில நேரம்,
“என் வீடு தெரு தான். முழுக் கை சட்டைய நல்லா என் கையோட நுனி வர இழுத்து, கால வயிறோட மடக்கி சுகமா தூங்கியிருக்கேன்.”
சில நேரம்,
“வீடு அப்படினா விடுதலை. சத்தியமா இந்த உலகத்துல நமக்கு வீடுன்னு ஒன்னு கிடையாது.”
சில நேரம்,
“எல்லா பயணங்களும் ஒருவனின் வீடு நோக்கி தான். என் பயணம் இன்னும் முடிஞ்ச மாதிரி தெரியல.”
நகுலனின் வீட்டை ஒருவராலும் யூகிக்க முடியவில்லை. ஏதோ ஒரு நகரில், அவன் வீடு சவமாய் மாறி, ஈக்கள் அதன் முகத்தில் மொய்த்து கொண்டிருக்கும் என்பது மட்டும் புரிந்தது.
பொதுவாக இந்தியாவிற்குள் பயணித்து கொண்டிருந்த நகுலனுக்கு, கனடாவின் டொரோண்டோ நகரில் வேலை வாய்ப்பொன்றமைந்தது. ஜனவரி இரண்டிலிருந்து அங்கே வேலையைத் தொடங்குவதாக திட்டம்.
அவன் இறங்கும் காலம், நல்ல டிசம்பர் மாதக் குளிர். தெருவின் ஓரத்தில் பனிக் குவியலை மலைகளாக அடுக்கியிருந்தனர். கால்களை நிதானமாக சறுக்கும் தெருக்களில் பொதித்து நடக்க வேண்டியிருந்தது.
தெருவின் வெண்மைக்கு சம்மந்தில்லாமல், அவன் தங்கவிருந்த கிங் ஸ்ட்ரீட் வீட்டின் சுவர்கள் கருத்திருந்தன. வீட்டின் சொந்தக்காரி, ஜெசிகா என்னும் கனடா நாட்டு பெண், அவனை அணைத்து வரவேற்றாள். முப்பது வயது இருக்கலாம்.
“வெல்கம் டு டொரோண்டோ”.
கொஞ்சம் சங்கோஜம் இருந்தாலும், அவன் உடலை முழுவதுமாக அவள் மேல் தண்டிலிட்டன். அவன் இடையைத் தாங்க முடியமால் ஜெசிக்கா அவனை இரண்டு நொடிகளில் விலக்கி விட்டாள். தங்கும் அறை, குளியல் அறை, சமையல் அறை என அனைத்தையும் சுற்றிக் காண்பித்தாள். ஒரே வீட்டில் பங்கு முறை.
“Wifi?”
ஜெசிக்கா சிரித்தாள்.
“இருக்கு நகுல்”
அருகில் இருக்கும் இந்திய உணவகங்கள், சூப்பர்மார்ட் குறித்து பேசத் தொடங்கினாள்.
பின்னாலிருந்து ஒரு கனடா மிடுக்கன் அவன் அணிந்திருந்த கை கடியாரத்தை ஜெஸ்ஸிகாவிடம் சுட்டிக் காட்டினான். நகுலனும் அவன் கைக்கடியை எட்டிப் பார்த்தான்.
ஜெஸ்ஸிகா டி.வி. யில் புட்பால் மேட்ச் இருப்பதாக சொல்லிக் கிளம்பினாள். உதவி தேவைப்பட்டால், போனில் கூப்பிடும் படி சொன்னாள்.
தன் வயதை ஒத்திருந்த அழகானப் பெண்ணைக் கடத்தி கொண்டு சென்று விட்டான் என நகுலனுக்கு அவன் மேல் கோபம் எழுந்தது. “ஒரு வேளை கணவனாக இருந்தால்? செய்வதற்கு ஒன்றுமில்லை.”
நகுலன் தன் தங்க வேண்டிய அறைக்குள் புகுந்தான்.
சிறிய மர மேஜை. பொருட்கள் வைக்க சுவரை விட்டுப் பிரியாத இரண்டு அலமாரிகள். கட்டிலுக்கு அடியில் ஹீட்டர். ஜன்னலின் வழி பனி பொழிவது தெரிந்தது. ஈரத்தில் ஜன்னலின் மரம் பட்டுப் போகவில்லை.
ஏனோ நகுலனுக்கு ‘தன் வீடு’ என சொல்லிக் கொள்ளும் வகையில் ஒன்றும் அமையவில்லை. அவன் பெற்றோர்கள் சென்னையில் வசித்து வந்தனர். அது ‘அவர்களின் வீடு’ என்றாகியது. அப்படி தான் அவனால் அவ்வீட்டை அடையாளம் கொள்ள முடிந்தது.
வழக்கம் போல், டொரண்டோ என்னும் புதிய நகரை பரிச்சயம் செய்து கொள்ள விரும்பினான். மணி இரவு 11 இருக்கக் கூடும். எடுத்து வந்திருந்த விண்டர் ஜாக்கெட்டை அணிந்து கொண்டு, தெருக்களில் நடக்கத் தொடங்கினான். பனி அவன் தோள்களை நனைத்தது.
நகுலன் உண்மையில் எந்த நகரையும் முழுதாக விரும்பவில்லை. ஒவ்வொரு நகரமும் அவனுக்கு குறைகளுடனே தெரிந்தது.
“தில்லியில் கடல் இல்லை. சென்னையில் பனி இல்லை.”
ஒரு முறை குலு – மணாலிக்கு கோடை விடுமுறைக்காக சென்ற பொழுது, அங்கு தென்னை மரம் ஒன்று கூட இல்லை என வருந்த தொடங்கினான். விடுமுறைக் காலத்தின் மொத்த உற்சாகத்தையும் தென்னை மரம் கொன்றது . சென்னையில் இறங்கியவுடன், வீட்டின் பின்னால் இருந்த தென்னை மரத்தை ஆசையாகத் தடவிக் கொடுத்தான். அதன் பின் ஒரு முறைக் கூட தென்னையை நினைக்கவில்லை.
இப்பொழுது டொரோண்டோ.

அவன் காத்து கொண்டிருந்தது வீண் போகவில்லை. யானைகளின் ஞாபகம் சம்மந்திமில்லாமால் எழுந்தது.
மூங்கில் கழைகளை சுவைத்து கொண்டு, ஸ்ரீ ரங்கப்பட்டினத்தின் படித்துறையில், யானைகள் குளிப்பதை தன் இருபதுகளில் பார்த்த ஞாபகம்.
“டொரோண்டோவில் யானைக்கு எங்கே போவது? யானைகளுக்கு பனியில் பழக்கம் இருக்குமா?”
இந்த எண்ணம் எழுந்த பின் இனி அவனால் டொரொன்டோவை முழுதாக விரும்பவும், வெறுக்கவும் முடியாது.
“யானை வடிவத்தில் பொம்மைகள்?”
நகுலனின் வயது முப்பத்திரண்டு. பொம்மையை வைத்து விளையாடும் வயதில்லை.
“பிரிட்டிஷ் இந்தியாவில் துரைகள் ஆசையாக யானையில் சவாரி செய்தவர்கள் என்பதால், இங்கிலாந்தின் காலனியான கனடாவிலும் நிச்சயம் எவரிடத்திலாவது யானை இருக்கக் கூடும் என நகுலன் நம்பினான். ஆனால் என்னவென்று அவர்களை அணுகுவது?”
கனடாவில் இன்றும் டிராம்கள் ஓடுகின்றன. அதற்கு சமமாக, யானையின் மேல் உட்கார்ந்து சவாரி செய்வது அபத்தம், கோமாளித்தனம் என்பதை நகுலன் உணர்ந்தான். இதற்கெல்லாம் அப்பால், யானையின் விருப்பமும் கருத்தில் கொண்டாக வேண்டும்.
நகுலன் தன்னை வெறுக்கத் தொடங்கினான். சொல்ல முடியாத அலுப்பு அவனை சூழ்ந்து கொண்டது.
பனியும் பொருட்படுத்தாது, மூடியிருந்த இந்திய சூப்பர் மார்ட் ஒன்றின் வாசலில் அமர்ந்தான். கண்கள் அவனை அறியாமல் மூடிக் கொண்டன.
தூக்கத்தில் அவன் கால்கள் நடக்கவில்லை. நகரங்கள் தெரியவில்லை. கனவுகள் இல்லை. அவனும் இல்லை.
– ஆர். கே. ஜி
