
அனைத்திற்கும் சாட்சியாக
ஒருத்தி இருக்கத் தான் செய்கிறாள்
அவளே
ஈசன் எரி ஆடும் கணங்களில்
மஹா தாண்டவ சாக்ஷிணி
அனைத்திற்கும் சாட்சி எனில்
எறும்பின் கடிக்கும்
ஊழிக்கும் அஃதே
வண்ணம் பூசாத
வெள்ளைத் தாளுக்கும்
பார்வையின் புணர்வுக்கும் பிறந்தவள்
அருவம் அவள்
வண்ணம் தீட்டாத வரை
உருவம் வரைந்தவை அழியும் வரை
அனைத்திற்க்கும் சாட்சி ஆவதால்
படைப்பு, காப்பு, இறப்பு
முத்தொழிலும் பரிட்சயம்
எங்கும் நிறைந்தவள்
நிறைந்தவள் எனில் முடிவற்றவள்
முடிவற்றது காமம்
முடிவற்றது அன்பும்
சம்மந்தமில்லாத
X & Y
அனைத்தையும் தனதாக்கி
ஒரு புறம் முத்தமிட்டும்
மறு புறம் அளித்தும்
இச்சைக்கு பின்னால்
பொருளாக முன்னால்
தன்னைத் தானே
பார்த்து சிரிக்கும்
வினோதினி
எண் இறந்து
ஒன்றே எஞ்சுவதால்
அத்வைதி
ஆதி அந்தம்
சொல்ல முடியாத முடிவிலி
நீலி காளி Infinity
– ஆர். கே. ஜி
