நினைத்தாலே இனிக்கும் – துண்டு நினைவுகள்
இளைஞன் ஒருவன், தக்ஷிணேஸ்வரின் (கல்கத்தா) நெருக்கடியானத் தெருக்களில் நடக்கிறான். அவனுக்கு தக்ஷிணேஸ்வர் மண்ணை மிதிப்பது நீண்ட நாள் கனவு. ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், தக்ஷிணேஸ்வர் காளிக்குமான ஆன்ம உறவைப் பல இடங்களில் படித்திருந்ததால், ஏதோ ஒரு விதத்தில் காளி கனிந்து தனக்கும் காட்சித் தருவாள் என்னும் குருட்டு நம்பிக்கையுடன். அதிகமாக எதிர்பார்த்ததால் என்னவோ, காட்சிகள் ஒன்றும் கிட்டாமல் அலுப்பாகக் கோவிலின் தளத்தை சுற்றிக் கொண்டிருந்தான்.
எதிர்க் கரையைக் காண முடியாத அளவிற்கு விரிந்திருந்த கங்கை மட்டும் ஆறுதலாக அமைந்தது. கங்கைக் கரையில் அஸ்தமனத்தைப் பார்த்தப் பின், கல்கத்தா நகர் நோக்கி செல்ல, ஓலாவிற்குக் காத்திருந்தான்.
“இப்போ பேச முடியுமா? நேரம் இருக்கா?”
அவளிடமிருந்து எஸ். எம். எஸ்.
ஒவ்வொருவராகத் தம் கல்யாண செய்தியை சொல்லிக் கொண்டிருந்ததால், அந்த வகையறா செய்தியையே அவளிடமிருந்தும் எதிர்பார்த்தான்.
“சொல்லு. என்ன விஷயம்…”
“இல்ல, இன்னும் உனக்கு என் மேலக் காதல் இருக்கா?”
இந்த மாதிரிக் கேள்வியை, குறிப்பாக அவளிடமிருந்து அவன் எதிர்ப்பார்க்கவில்லை.
“அதெல்லாம் இருக்கு. என்ன இப்போ?”
“அப்போ எனக்கும் ஓகே. எப்படி ப்ரொஸீட் பண்ணலாம்னு சொல்லு.”
“என்ன ப்ரொஸீட். சென்னை வந்த உடனே அப்பா அம்மாக் கிட்டப் பேசறேன். அவ்வளவு தான்.”
வீர வசனம் பேசியப் பின் தான் தெரிந்தது, அவன் பன்னிரண்டு வருடம் காத்திருந்ததற்கான பதில் அது என்று.
“நீ உண்மையா தான சொல்ற?”
“கண்டிப்பா… ஐ. ஆம். ஓகே”

ஓலா டாக்ஸியில் செல்லும் பொழுது, அவனால் மூச்சுக் கூட விட முடியவில்லை. ஓட்டுனரிடம் ஜன்னலை இறக்கச் சொன்னான். கல்கத்தாவின் இரவும், கங்கையின் காற்றும் அவனை இயல்பாக பரவசத்திற்குத் தள்ளியது. பித்து பிடித்தவன் போல சிரிக்கத் தொடங்கினான்.
இக்காட்சியில் குறிப்பிடப் படும் பெண் சரோஜா, என் மனைவி. அவளுக்கு உறுதியாக பதில் சொன்ன ஹீரோ?? நான் தான் சார். (சொல்லிக்க வேண்டியது தான்).
இந்த சினிமாட்டிக்கானத் தருணம், காதல் எப்படி அன்றாட தர்க்கங்களை, சாத்தியங்களை ஒதுக்கி வைத்துத் தனக்கான ஒரு உலகத்தில் ஜீவிக்கிறது என்பதற்கு சாட்சி.
“ஒரு உறவு ல ஒருத்தராவது உறுதியோடு இருக்கணும்.”
நான் ஒரு தலையாக சுற்றிக் கொண்டிருக்கும் காலங்களில், சரோஜாவிடம் சொன்னது. பிறருக்கு, ஏன் சரோஜாவிற்கே Stupid / Baseless ஆகத் தோன்றிய இந்த உறுதி தான், சம்மந்தமில்லாத ஒரு காலத்தில் அலுவகப் பணிக்காக கல்கத்தா சென்றிருந்த நேரத்தில், இரண்டு நொடிகளில் என்னை ஆகப் பெரிய முடிவு ஒன்றைச் செய்ய வைத்தது.
பல வருடங்கள் தொடர்ந்திருக்கிறேன். காதலின் தீவிரத்தை உக்கிரமாக மெசேஜ் மூலம் சொல்லிப் பிழிந்திருக்கிறேன்.
“எனக்குத் தோணல.”
மரியாதையாக ஒவ்வொரு முறையும் என்னைத் தவிர்த்து வந்தாள். காரணம் நட்பைக் காதலோடு நாங்கள் குழப்பியதில்லை. இப்படி தான் Bachelors முடியும் வரைப் போய்க் கொண்டிருந்தது.
Bachelors முடிந்தப் பின் ஒரு வெறுமை. திக்கில்லாமல் போய்க் கொண்டிருந்த என் வாழ்க்கையின் கசப்பை, அவள் மீது திணித்தேன். நட்பை முறியும் படி செய்தேன். அவள் என்னை விரும்பாத வரையில் மீண்டும் பேசுவதாக இல்லை எனச் சொல்லி அவளிடமிருந்து விலகினேன். ஆறு மாத இடைவெளிக்குப் பின், Canadaவிற்கு Masters படிப்பிற்காக செல்வதாக ஆயத்தமானப் பொழுது. சென்னை விமான நிலையத்திலிருந்து, சரோஜாவிற்கு ஒரு மெசேஜ்.
“நான் சென்னையிலிருந்து கிளம்புகிறேன். ரொம்பத் தொலைவான இடத்திற்கு. இனி உன் வாழ்வில் நான் இல்லை…”
இப்படி ஏதேதோ சொல்லி மெசேஜைத் தட்டி விட்டேன். அவளிடம் சொல்லிக்கொள்ளாமல் போவதில் விருப்பமில்லை. அதற்காக ஆரம்பித்து, கடைசியில் வேறு துவணியில் அந்த மெசேஜ் முடிந்தது.
மொன்றியால் (Montreal) அடைந்தவுடன், என் நண்பன் சந்தோஷிடமிருந்து …
“சரோஜா அப்படி அழுதா டா. உடனேக் கூப்பிடு.”
ஒரு பெண்ணை அழ வைக்கும் பொழுது ஆணுக்கு வரக் கூடிய சந்தோஷம் அலாதியானது. சரோஜா எப்படி உணர்கிறாள் என்று சிறிதும் கவலைப் படாமல், போனில் அவள் அழுகையைக் குறித்து அவளிடமே கேலி செய்தேன். இரண்டு நாட்கள் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தாள். பின் என்னைத் தவிர்க்கத் தொடங்கினாள்.
அப்படியே என் வாழ்வை விட்டு, மிகத் தொலைவுக்குப் போனாள். மெதுவாக அவள் முகமும் என் நினைவிலிருந்து அகலத் தொடங்கியது. ஒரு வகையில் நம்மை பாதிக்கும் நினைவுகளுக்கு உருவங்கள் தேவைப்படுவதில்லை. அப்படி தான் சரோஜாவின் நினைவும் அமைந்தது.
தேவதாசாக மாறியக் காலம். Concordia கல்லூரியின் சீனியர் ஒருவர் என் கதையைக் கேட்டு, Montreal Old Port கரையில் கண் கலங்கி அழுத நினைவு. என் நண்பர்களுக்கு என் காதல் கதைகள் இலவச இணைப்பாகக் கிடைத்தன.
2016ல் இந்தியாவிற்குத் திரும்பினேன். 2018ல் மீண்டும் சரோஜா.
5 – 6 வருடங்கள் கழிந்திருந்ததால், பொங்கி எழக் கூடாதென, வாலை மொத்தமாக சுருட்டிக் கொண்டேன். அன்பைக் கொட்டாமல் அமைதியாக இருக்கும் காலங்களில், அடுத்தவர்க்கு செவிக் கொடுக்கும் வாய்ப்பு இயல்பாக அமைந்து விடுகிறது. சரோஜா இன்னும் நெருக்கமானத் தோழியானாள். 2018ன் இறுதிக்குள் தன் காதலை வெளிப்படுத்தினாள்.
இன்றும் அதே வியப்பது தான். அவ்வப்பொழுது கிள்ளிப் பார்த்துக் கொள்வது. நான் ஆசைப்பட்டதெல்லாம், என் பயனுங்களுக்கு ஒருத் துணை மட்டுமே. ஆனால், சரோஜா ஒரு குட்டி ஞானாசிரியை. என் எழுத்தை முதன் முதலில் அங்கீகரித்தத் தோழி சரோஜா. நரசிம்மன், அனிருத் அம்மா மற்றும் என் பெரியப்பா போக.
என்னைக் கடுமையாக விமர்சிப்பதும், வாழ்வைக் குறித்தத் தனித்துவமானக் கருத்துக்களைப் பகிர்வதும் அவள் வழக்கம்.
“Only so much can be done in life Karthik” – சரோஜா Trademark
தனிமைக்கு மட்டுமேப் பழகியிருந்த எனக்கு, புது நட்புகளும், உறவுகளும் அவள் மூலம் கிடைத்துள்ளது.
எங்கள் திருமணம் முடிந்து, இன்றுடன் ஒரு வருட காலம் சரியாக!! கரோனா தட்டுப்பாட்டில், ஏதோ துண்டு நினைவுகளாக சிலவற்றைப் பகிரலாம் எனத் தோன்றியது. என்னால் முடிந்த திருமண நாள் அன்பளிப்பு.
சாஸ்திரா கல்லூரியில் படிக்கும் பொழுது, வைகையில் 2nd கிளாசில் நின்றப் படி எத்தனையோ முறைத் திருச்சியிலிருந்து அவளைக் காணக் கிளம்பியிருக்கிறேன். அதே மன நிலை தான் இன்றும். அதே உற்சாகம்.

முதல் முறையாக அணைக்கையில், சரோஜாவின் முதுகைத் தட்டிக் கொடுத்தேன். ஒரு tight hug கொடுக்கக் கூடத் தெரியாது. அவ்வளவு தான் முடிந்தது. என் தயக்கத்தை உணர்ந்து, என்னை முழுதாக அணைத்தாள்.
அன்று முதல், என் இடைவெளிகளை சரோஜா நிரப்புகிறாள். அந்த இடைவெளிகளைத் தருவதற்கு நானும் பழகிக் கொண்டு விட்டேன்.
டிராமா இருக்கிறது. காதலும் இருக்கிறது.
நினைக்க இனிக்கிறது.
– ஆர். கே. ஜி.
Closure:
மன்மதன் வந்தானா… சங்கதி சொன்னானா …