சென்னை – கனவுகளின் நகரம்
சில நாட்கள் முன் அசோகமித்திரன் எழுதி, கவிதா பதிப்பகம் வெளியிட்ட ‘ஒரு பார்வையில் சென்னை நகரம்’ என்னும் நூலை வாசிக்க நேர்ந்தது. சென்னைக் குறித்த தன் நினைவுகளை, இயல்பான மொழியில் அசோகமித்திரன் இந்நூலில் பகிர்ந்துள்ளார். வரலாறு, நினைவுகளின் தொகுப்பு என்ற அளவில், அசாத்தியமாகத் தீணிப் போடக் கூடிய நூல் இது.
இந்நூலை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் படித்தது முதல் மனதில் ஓடிக் கொண்டிருக்க, இந்நேரத்தில் தான், கடந்த இரு நாட்கள் சென்னையின் பிராட்வேவில் (Broadway) செலவிட நேர்ந்தது.
இன்று, திருவள்ளூர், காஞ்சிபுரத்தை தொட்டுக் கொண்டிருக்கின்றன சென்னையின் பிரம்மாண்ட எல்லைக் கோடுகள்..
1700 களில் சென்னை, பிளாக் டவுன் (Black Town), வைட் டவுன் (White Town) என்னும் இரு பிளவாக பிரிட்டிஷாரால் பகுக்கப்பட்ட சிறிய நகரம்.
வைட் டவுன், இன்றைய புனித ஜார்ஜ் கோட்டை.. உயர் நீதி மன்றம் அமைந்திருக்கும் என். எஸ். சி. போஸ் ரோட் (NSC Bose Road), பழைய சீனா பஜார் ரோட் (China Bazaar Road) என்று அழைக்கப்பட்டது.
ராஜாஜி சாலை – பழைய பீச் சாலை (Beach Road), வ. ஊ. சி சாலை – வால்டாக்ஸ் ரோட் (Walltax Road) இரண்டையும் நேர்வாட்டாகப் பழைய சீன பஜார் சாலை இணைத்தது.
இன்றுள்ளது போலவே, குறுக்கலாகப் பல சந்துக்களும், தெருக்களும் என். எஸ். சி. போஸ் ரோட்டில் சங்கமித்தன
தெருக்களின் பெயர்களை வைத்தே 1750ல் இருந்த சென்னையின் பன்மையைச் சொல்ல முடியும் .
அரண்மனைக் காரத் தெரு – ஆர்மேனிய வணிகர்களுக்கானத் தெரு
பவழக்காரத் தெரு – பவழம் விற்பவர்களுக்கானத் தெரு
செம்புதாஸ் தெரு – உலோகங்களுக்கானத் தெரு
பழைய சீன பஜாரோடு இணையும் பிராட்வே சாலையின் பெயரில் தான், இன்றையப் பேருந்து நிலையம் பெயரிடப்பட்டது. பழைய வெஸ்லி தேவாலயம் (Wesleyan Church) பிராட்வே சாலையில் அமைந்துள்ளது.
தி. நகர், கோயம்பேடு இரண்டின் எழுச்சியும், பிராட்வேவின் சந்தைகளை ஒரே ஈடாக அமுக்கின. பூ, காய், பழ வியாபாரம் அனைத்தும் கோயம்பேட்டை சார்ந்து தான் இயங்குகிறது.
ஆனால் இன்றும் Gem & co (பேனாத் தயாரிக்கும் நிறுவனம்), மான் மார்க் என்னும் Stag Brand (குடைகள் தயாரிக்கும் இப்ராஹிம் நிறுவனம்) போன்ற பிராட்வேக்கு உரித்தான சில எஞ்சியுள்ளன.
பிராட்வே குஜராத்தி, மார்வாடிகளின் பேட்டை. Zomato மற்றும் Swiggy கும்பலுக்கு ஏற்றார்ப் போல், காக்கடா ராம்பிரசாத், சீனா பாய் டிபன் சென்டர், நாவல்டி டீ ஹவுஸ் போன்றப் பல பிரபலமான சிற்றுண்டி ஹோட்டல்கள் ஏராளம் காணக் கிடைக்கின்றன .
1750 ஆரம்பித்து ஒரு நூற்றாண்டு செட்டிகளின் காலம் எனத் தயங்காமல் சொல்லலாம். சென்னை நகரின் வளர்ச்சியில் இவர்களின் பங்கு கணிசமானதாகத் தோன்றுகிறது. குறிப்பாக, பிராட்வேவில் அமைந்திருக்கும் கச்சாலீஸ்வரர் சிவன் கோவில், இவர்களின் கொடை. ஆர்ய வைஸ்யர்கள் வழி வரும் செட்டிகளின் குரு முஞ்சுகேஸ்வர் என்பவரின் சிற்பம் இக்கோவிலில் அரிதாகக் காணக் கிடைக்கிறது .
அரண்மனைக்காரத் தெருவில் (Armanian Street) அமைந்திருக்கும் ஆர்மேனிர்கள் எழுப்பிய தேவாலயம் 1712 ஆண்டில் கட்டப்பட்டது.
மேரி, குழந்தை ஏசுவை சுமந்து சுவர்க்க ஆரோகணம் செய்வது போன்ற அழகியப் படிமம் ஒன்றைக் கொண்டுள்ளது. தேவாலயம் சுற்றிலும் ஆர்மேனிய வர்த்தகர்கள் புதைக்கட்ட கல்லறைகள். அவற்றின் மேல் நடப்பதே ஒரு வித சங்கடத்தை தந்தது. எல்லாக் கல்லறைகளிலும் ‘Skulls and Bones’ என்னும் மண்டையோட்டு சித்திரங்கள் தீட்டப்பட்டிருப்பதைக் காண முடிந்தது .
ஆர்மேனிய தேவாலயத்தின் இன்றையப் பாதுகாவலர் ‘ஜுடு ( Jude ), 1750 களில், அதிகக் கட்டிடங்கள் இல்லாததால், தேவாலயத்தின் வாயிலிருந்து கடல் தெரிந்திருக்கக் கூடும் எனக் குறிப்பிட்டார். இது திருவல்லிகேணிக்கும் பொருந்தக் கூடும். ஜுடு இதை சொன்னவுடன், 1700களின் சென்னை என் முன் விரிந்தது.
பறவைக் கோணத்தில், ஒரு பக்கம் கடல், மறு பக்கம் எழும்பூர் நதி , கோட்டை, பிரதான சாலைகளுடன், சந்தைகள், மக்கள் சந்தடி எனத் தீவிரமாகக் இயங்கிய ஒரு நகரமாக சென்னையைக் காண முடிந்தது.
உலகில் கடலைப் பார்த்திருக்கும் நகரங்கள் யாவும் பலரின் கனவுகளால் பிறந்தவை. அலைகளை சலிக்காமல் பார்க்கும் வல்லமைப் பொருந்தியவை.
சென்னை அவ்வகையில் கனவுகளின் நகரம்.
– ஆர். கே. ஜி