அர்த்தநாரி

உலகில்
அனைத்தும் முழுமையான வாசகங்கள்
நான் மட்டும்
முழுதாக எழுதப்படாதவள்
பாதி
அர்த்தநாரி
அபத்த
வாக்கியங்களால்
வெறுத்துப் போய்
சுழுன்று சுழன்றுப்
பித்தாக
ஆடிக் களித்த
பேய் ஆட்டத்தில்
அனைத்தும்
ஒரு நாள் மயங்கியது
காணும் யாவும் ஒளித் துகளாய்
அத்தனையும் அவன் நடனமாய்
மயங்கிய அந்தப் பித்த நிலையில்
பிரம்மாண்டமே என்னோடு ஆடியது
அன்று முதல்
கேட்ட அத்தனை வசைகளும்
நிசப்தமாயின
அடையாளங்கள் அழிந்த
இறப்பற்ற வெளியில்
முழுதாய் கரைத்துக்
கொண்டேன் என்னை
யதார்த்தத்தின் பாரங்கள் அறுந்து
பித்தில் ஆடிக் கூத்தாடிய
மயக்க நிலைகள்
இன்னும்
அர்த்தமாய்
ஆழமாய் தோன்றின
ஓயாத ஆடலில்
ஆணும்
பெண்ணுமாகிய
அர்த்தநாரி
என்னும் நான்
பூர்ணத்தின் ஸ்ருஷ்டி
– ஆர். கே. ஜி