கூத்தன்
என் நினைவின் முனையில் அம்மா தான் நிற்கிறாள்.
அவளது 27ஆம் வயதில் நான் பிறந்தேன். பிறந்தது முதல் என் கண்கள் அவளை மட்டுமேப் பார்க்கப் பழகியிருந்தன.
என் தகப்பன் வாசுதேவன் நம்பி. அதிகப் படியானக் கோபம், நமட்டலானக் கேள்விகள் போக, சாக்கியர் கூத்து என்று சொல்லப்படும் கேரளத்தை சேர்ந்தக் கலையின் ஆளுமை அவன். திருச்சூரை சேர்ந்த கேரளக் குடும்பத்தில் தான் நான் பிறந்தேன். ‘ Theoretical’ என்ற சொல்லிற்கு ஏற்ப, இந்தச் செய்திக் குறிப்புக்குத் தான். இரண்டாம் வயது முதல் சென்னை.
அம்மா அவள் கூத்துக் காலங்களைக் குறித்துப் பல முறை என்னிடம் பேசியிருக்கிறாள்.
“மேடையின் முன்னால் செங்குத்தானக் குத்து விளக்கில் தீபம் எரிந்து கொண்டிருக்கும். யாரோ அளவிட்டு எண்ணை விட்டதுப் போல, நிதானமாக சலனமின்றி எரிந்து கொண்டிருக்கும்.
பெரியக் கூட்டம் என்று சொல்ல முடியாது. பிளாஸ்டிக் இருக்கைகள் சிமெண்ட் தரையில் கீரும் சப்தம், கூட்டம் சேர்ந்ததுப் போன்ற அமளி செய்யும். விளக்கிலிருந்து நேர்க் கோடிட்டப்படி, சுவற்றோடு ஒட்டிக் கொண்டு கண்ணன் நம்பி தெரிவார். அவர் தொப்பையில் முழவின் வளைந்த முனைக் குழந்தையைப் போல் அமரும். நெற்றி நிரம்ப சந்தனம் பூசி, குழந்தையைத் தூங்க வைப்பதுப் போல், வலிக்காமல் முழவின் முதுகைத் தட்டிக் கொண்டிருப்பார். அவருக்கு இடது புறமாக, நம்பி வம்சத்தில் பிறந்த நான் செப்புத் தாளங்களோடு நின்றிருப்பேன். பல முறை, நான் போடும் எளியத் தாளத்திற்கேற்ப, முழவின் லயத்தை மாற்றி, கண்ணன் நம்பி என்னை அங்கீகரிப்பார்.
அன்று
இராவணன் கைலையைத் தூக்கும் படலம்.
கண்களில் கருஞ்சாந்துப் பூசி, முகம் முழுவதும் அரிசி மாவினால் இழுக்கப்படடக் கோடுகள். ஒரு காதில் வெற்றிலை, மற்றொன்றில் சிகப்பு குண்டலம். கோமாளிப் போன்று, கன்னத்திலும், மூக்கிலும் மஞ்சளும் குங்குமமும் குழைத்தப் பொட்டுகள். மார்பின் சுவரெங்கும் வெள்ளை மாவினைப் பூசிக் கொண்டு, நாலைந்து இடங்களில் சிதறி விட்ட சிவந்த மஞ்சள் பொட்டுகள்.
தங்கக் கிரீடம் அணிந்து கொண்டு, கைக்காப்புடன் இயல்பாகவே இராவணன் போன்றத் தோற்றம் அளித்தான் வாசு. மேடையின் மத்தியில் வந்தவுடன், அந்நேரம் வரைக் காற்று வாங்கிக் கொண்டிருந்த மேடை நிரம்பியது. மடிப்புகள் கொண்டத் தன் பட்டு வேட்டியை சரி செய்தப் படி, விளக்கின் பின்னால் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
கண்களைப் புருவ மத்தியில் குவித்துக் கொண்டு தியானிக்க எத்தனித்தான்.
மெதுவாக கண்ணன் நம்பி முழவைத் தட்டினார்.
சபையில் அமர்ந்திருந்தப் பார்வையாளர்களை நோக்கி, கண்களை அங்கும் இங்குமாகத் திருப்பத் தொடங்கினான். சபையை அளக்கிறான் எனத் தம்முள் சொல்லிக் கொண்டு சிரிக்கத் தொடங்கினர்.
குரங்கு சேட்டைகள் செய்து கொண்டிருந்தவன், முக்காலியை விட்டு எழுந்தான். குழம்பியிருந்தவன் போல பாவனைகள் செய்தான்.
“அளகாபுரியின் செல்வங்களைக் கொண்டு வந்த என்னால் இந்த மலையைக் கடக்க முடியவில்லை. இத்தனை உயர்வான மலை, போய் வருபவருக்கு எத்தனை இடைஞ்சல் செய்து கொண்டிருக்கிறது. யாரப்பா இந்த மலைக்கு சொந்தக்காரர்?? நிச்சயம் இயற்கையால் இந்த சிருஷ்டி சாத்தியப் பட்டிருக்காது.”
“சிவனின் கைலாயம் இராவணா இது.”
நந்தியின் வசனங்களைக் கண்ணன் நம்பி பேசினார்.
“இது என்ன அசரீரி!”
“ஐயோ இராவணா. கண்ணைத் திறந்து பார். உன் முன் முழுமையாக ஆறடிக்கு நிற்கும் சரீரி தான். நந்தி பேசுகிறேன்”
“ஓ நந்தியா … சரி ஏன் நந்தி மாதிரி நிற்கிறாய் என் முன் ?”
“இராவணா … நீ தடுப்பதாக நினைப்பது அனைவரும் வணங்கும் கைலாயம்.”
“இருக்கட்டும். என் வழியில் வரக் கூடியத் தகுதி, கைலாயத்திற்கு வந்து விட்டதாக எண்ணுகிறாயா?”
“சிவ. சிவ. ஏன் இப்படி நீசனாய் பேசுகிறாய்.”
“நீசன் … ஈசன்… சப்த மாத்திரை சரியாக விழுகிறது.”
“இனி என்ன நடக்குமோ! ”
கண்ணன் நம்பி கவலைக் குரலில் பேசி முடித்தார்.
“இங்கு விதூஷகன் ஒருவன் தான். நானே நடித்துக் காட்டுகிறேன்.
உட்கார்ந்து வேடிக்கையைப் பார்.”
வாசு மலையைத் தன் இருபது கைகளால் தூக்க முயன்றான்.
மலையை அப்படியேத் தூக்க லாவகமாக இல்லாததால், குந்தியிட்டு அமர்ந்தான். மலையின் பாரம் உணர்ந்தவன், தலையை நீவத் தொடங்கினான். சொல்ல முடியாத வலியில் விம்மத் தொடங்கினான்
ஈசன் தன் காலின் கட்டை விரலால் இராவணனின் சிரம் மேல் அழுத்தம் தர, வலியில் முனகினான்.
“மீண்டும் இந்த சரீரி தான். ஈசன் உமாவுடன் கைலாயத்தில் சல்லாபம் செய்யும் பொழுது, கட்டிலைத் தூக்குவதுப் போல் மலையைத் தூக்கிக் கொண்டிருக்கிறாய். இந்தக் குரங்கு சேட்டைகளை உன்னை எவன் செய்யச் சொன்னது.”
“எல்லாம் செய்யும் ஈசன் தான் இதையும் செய்கிறான் .”
“இப்படிப் பேசிப் பேசி தான் சிக்கிக் கிடக்கிறாய். சரி நான் கிளம்புகிறேன்.”
” நந்தி தேவரே … ஏற்றி விட்டு இறக்காமல் போனால் எப்படி?”
” சரி … ஒரு பாட்டு பாடு.”
“பாட்டா … சமீபமாக வந்த எந்த மலையாள சினிமாவும் சரி இல்லையே.”
“மூடனே … சாம கானத்தைப் பாடு.”
“தெரிந்து தான் சொல்கிறீர்களா … நான் மலையைத் தூக்கி நிற்கிறேன். ஈசன் வேறு சல்லாபத்தை முடிக்காமல் பாதியில் நின்றிருக்கிறார். வேளைக் கெட்ட வேளையில் என்ன சாம கானம்.”
“எந்நேரம் பாடினாலும் ஈசனுக்குப் பிடிக்கும்.”
“பாவம் உமா.”
“சரி நான் கிளம்புகிறேன்.”
“சரி சரி … பாடுகிறேன்.”
தரையில் அமர்ந்தப் படி, சாம கானம் பாடினான் வாசு. அவன் சாரீரம் அன்று போல் என்றும் ஒலித்ததில்லை.
கொச்சி பைன் ஆர்ட் கிளப். இடம் கூட அப்படியேப் புகைப்படமாக மனதில் நிற்கிறது.
அவன் பாட்டால் குளிர்ந்து, ஈசன் தன் கட்டை விரலை விடுவித்து அவன் முன் காட்சித் தந்தான். உமா சமேதனாக.
இராவணன் சிவனை வணங்கி விட்டு …
“ஈசா …
உன்னைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
பாம்போடு சுற்றுகிறாய்.
மண்டை ஓட்டைக் கொண்டு சாப்பிடுகிறாய்.
சுடுகாட்டில் அலைகிறாய்
பஸ்மத்தைப் பூசி நிற்கிறாய்
காய்ந்த மாலைகள் வேறு
எதையுமே சாதாரணமாக செய்ய மாட்டாயா?”
கண்ணன் நம்பி சிவனின் குரலோடு, “உன் வாய் மூடும் வரை உன்னை அழுத்த வேண்டும் என நினைக்கிறேன். ஏதோ சாம கானம் பாடியதால் அனுக்ரஹித்து விடுகிறேன்.”
“மறந்து விட்டேன். கண்ட நேரத்தில் சாம கானம் வேறு.”
மார்பில் தவழும் பூணலை இருமுறை இழுத்துக் கொண்டு, கோமாளி சேட்டைகளுடன் சபையைப் பார்த்து வணங்கினான் வாசு .
ஒப்பனை அறையில், வெள்ளை வேட்டித் திரையின் பின்னால் ஒரு பொந்தில் என் புடவையை மாற்றிக் கொண்டிருந்தேன். வாசுவின் ஒலிக் கேட்டது.
அவன் அலங்காரத்தைத் தென்னை எண்ணெய் வைத்து விலக்கத் தொடங்கினான். நான் திரையின் பின்னால் நின்று, மறைவாகப் பார்ப்பது தெரிந்து, அசுரனைப் போல் சிரித்து மிரட்டினான் .
நானும் இராவணன் மலையைத் தூக்க, பயந்து நின்ற உமாவாக, கைகளால் முகத்தை மூடிக் கொண்டேன்.
அலங்காரம் முழுவதும் கலைந்தப் பின், வாசு என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.
அவ்வளவு தான்.
இராவணன் எனக்கு சிவனாக மாறினான்.”
உண்மையில் அம்மாவின் கண்கள் தான் அனைத்தையும் நடித்துக் காட்டின.
– ஆர். கே. ஜி.