மத்தகம்
சில மனிதர்கள்
கண்ணாடியாக
மாறி விடுகிறார்கள்
சந்தோஷத்தில்
அப்படியே
அவர்கள் முன்
நின்று விடுதிறோம்
கால பாரமின்றி
அப்படித் தான்
எனக்கு அமைந்தான்
அவன்
எழுதிக் குவித்த
என் ஞானாசிரியன்
மூப்பினால்
மெத்தையில்
சுருண்டுக் கிடந்தான்
மார் நிமிர
சாகக் கற்றுக் கொடுத்தவன்
எழ முடியாமல்
மூச்சிறைக்கும்
யானையைப் போல்
தோன்றினான்
அக் கடைசி சந்திப்பில்
விம்மாமல் விலகினேன்
சில நாட்கள் கழித்து
அவன் இறந்த
செய்தி கிட்டியது
அடையாளம் போன
அனாதை வாசகனாக
உணரத் தொடங்கினேன்
அலமாரியில்
மீளாத் துயில்
கொண்டு விட்ட
அவன் எழுதிய
மனதிற்கு நெருக்கமான
புத்தகத்தை எடுத்தேன்
அபாரமான
அவன் எழுதிய
“சத்ய காமன்”
என்னும் நாவலிற்கான முன்னுரை
“என் வார்த்தைகளை
எக்காலத்திற்குமான
வேதங்கள் ஆக்காதீர்கள்
அவை
பிறந்தவுடன்
சாகத் துணிந்த
சத்ய சிசுக்கள்.”
வரிகளை
வாசிக்க
வாசிக்க
செத்துக் கிடக்கும்
அந்த
ஆண் யானையின்
மத்தகத்தை
தடவிக் கொடுப்பது போல்
உணரத் தொடங்கினேன்
– ஆர். கே. ஜி