போகி
கந்தல் துணியை
உடலில் சுற்றிக் கொண்டு
நடந்து போகும் அவர்களை
கிராமங்களின் தெருக்கள்
காலம் காலமாக
அமைதியாக
யாருக்கும் சொல்லாமல்
தம்முள்ளே
அடைக்காத்து வந்துள்ளன
மாலை ஒளியுடன் கூட
இருள் பரப்பும் பஞ்சனையில்
சைக்கிள்களைப் உருட்டியப்படி
அமைதியாக
இலக்கற்ற
அந்த மனிதர்களின் பின்
கிராம ஜனம் தொடர்வதை
சிறு வயதில் பார்த்த ஞாபகம்
அப்படித் தான் பேய் உடல் பூண்ட
அந்த சந்நியாசியைப் பார்த்தேன்
கிராமத்தின் எல்லையிலுள்ள
பாழ் வீட்டின் இடிபாடுகளுக்குள்
கோணிப் பையில் உடலை சுருட்டிக் கொண்டு
தண்டம் கருங்கல் சுவற்றில் சாய்ந்திருக்க
ஏகாந்தமாக உறங்கிக் கொண்டிருந்தான்
சுற்றி சனம் அமைதியாக அமர்ந்திருந்தது
சிறு தூக்கம் முடிந்தப் பின்
கோணியின் முடிச்சிலிருந்து
ஆட்டின் தலைப் போன்ற ஒரு முகம் வெளியே வந்தது
நெற்றி முழுதும் காய்ந்தத் திருநீற்றின் வாசம்
மண்ணில் புரண்டது போன்று
ஒட்டிக் கிடந்த
சாம்பல் நிற தாடி
அலட்டிக் கொள்ளாமல் எழுந்து
தண்டத்தைக் கையில் ஏந்தி
வீட்டின் இடிபாடுகளை அலட்சியமாகப் பார்த்தான்
ஏதோ எனக்கே சொல்வது போல
அவன் வாக்கியம் அமைந்தது
” நம்ம சுத்திக் கட்டின வீட்ட இடிச்சா
விஸ்தாரம் தான் ”
பின்
புறத்தில் ஓடும்
புழையை நோக்கி நடந்தான்
சிறிது நேரம் கழித்து
அவன்
நதியோடு அந்தரங்கமாக
பேசிக் கொண்டிருந்ததை
எட்டிப் பார்த்து ரசித்தேன்
துறவின் வழி
சிற்றில்களை சிதைத்து
வானின் கீழ்
போகியாக வாழும்
அவனை
அந்நிகழ்வின் பின்
சந்தித்ததாக நினைவில்லை
இன்று
கண்ணாடி சன்னல்களின் வழி
கொன்றைப் பூக்கள்
காற்றில் ஆட
பிரபஞ்சத்தின்
ஆனந்தக் கூத்தைத்
தனிமையில்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
அருவமானத அக்காற்றினை
தரிசிக்க முடியாமல்
கண்கள் சொக்கிப் போகின்றன
– ஆர். கே. ஜி
சந்நியாச சூக்தம்
न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्व-मानशुः ।
na karmaNA na prajayA dhanena tyAgenaike amRRitatva-mAnashuH
Neither by actions, nor by aquiring progeny and wealth, but by renunciation alone is immortality attained.