ஒன்றையே நம்புதல்
ஒன்றையே தொழுதல்
அந்த ஒன்றுக்காகவே
வாழ்தலும் சாதலும்
எவனுக்கோ சொந்தமான வீட்டில்
தோழியாக சில நாள்
இருந்து
கூடி
அவனை உளமாற முத்தமிட்டு
பிரிவது இயல்பே
என சொல்லிப் பிரிந்து
இன்னொருவன் வீட்டில்
தெரியாத அவனையும்
தெரிந்தது போக
தோழியாகக்
கூடி முத்தமிட்டு
வீடுகள் பலதில்
உறங்கியும்
அடையாளமற்ற நான்
அனைத்தையும் நம்புபவள்
பலதின் நியாயங்களை ஏற்பவள்
சுருக்கமாக
வேசி
என்னிடம்
அளவுக்கு மீறிய நியாயங்கள்
இருப்பதால்
மீண்டும் மீண்டும்
ஒதுக்கப்படுகிறேன்
பெரிய சித்தாந்தி
எனத் தன்னை சொல்லிக் கொண்டு
மீசை முறுக்கி
என் முன் நின்றால்
அவனை
அம்மனமாக்கி
முத்தமிடுவேன்
எவன் வந்தாலும்
ஆறத் தழுவி
முத்தமிடும் நான்
லோகத்தின் அன்னை
எனும்
வெற்று
கூற்றுகளை எதிர்ப்பார்காதீர்கள்
நான் வேசி
உங்களைக் காட்டிலும்
நன்றாக அறிவேன் இதை
தூயம் பேசும் பரதேசிகளின் மேல்
சாயம் பூசுவது
என் அளவில்
காதல்
காமமும் கூட
என்னை எனக்கே
அறிமுகம் செய்யும்
மகா வாக்கியங்களை
எக்காலத்திலும்
நான் ஏற்றதில்லை
ஏற்கப் போவதுமில்லை
எங்கோத் தொலைவில் நின்றப்படி
நானும் என்னைப்
பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்
பார்த்துப் பார்ததுக்
கசிந்த அமுதம்
உடம்பின் நுணுக்கெல்லாம் தோய
சுயத்தின் நினைவின்றி
மூச்சடங்கி
ஒருவனை மட்டுமே எண்ணி
அவ்வொன்றை மட்டுமேத் துதித்து
தாபத்தில் சாகும்
சிருங்காரத்தை
முற்றிலும் நான் வெறுக்கிறேன்
எவ்வளவுக் கூடினாலும்
அடையாளங்கள் மறுக்கும்
பன்மையை நம்பும்
அந்த ஆடவனுக்காக
மட்டுமே
உடலில் ஆடைகளின்றி
காத்திருக்கிறேன்
இனி
அவன்
என்னை
முத்தமிடுவானாக
– ஆர்.கே. ஜி