வார்த்தைகளே
சுவர்க்கத்தின் கோடுகள்
பேசி பேசி
நரகம் ஆக்கும் வரை
பைத்தியக்காரன்
நான்
நீ இல்லாத நேற்றை
மறந்து விட்டேன்
புருவங்கள் காது வரை நீண்டு
கதைப் பேசும்
தனங்களின் பாரம் தாங்காமல்
அவள் இடை ஒடியும்
கால்களின் கீழ்
அமிர்தம் சொட்டும்
என
அவளுடைய
அதி ரூப வர்ணனைகளை
சொல்லிக் கொண்டிருந்தேன்
கைகளால்
என் முதுகைத் தட்டி
‘ஹாட்’ னு சொல்லலாமே
எனத் தட்டையாக முடித்தான்
நண்பன்
வெளிச்சம்
யாவற்றையும் மறைக்க
இரவெனும்
இருண்டப் பலகையில் தான்
நட்சத்திரங்கள் வரையப்பட்டன
உண்மை
தீண்டாத்
திருமேனி
எதுவும் பேசாமல்
ஒரு கணம்
நின்றேன்
பிரம்மத்தின் நிழல்
என் மேல்
ஓசையிலாமல் விழுந்தது
பிறப்பு இறப்பு
மத்தியில்
பித்தனின் ஆட்டம்
பித்தலாட்டம்
சொற்களால்
வரைந்தும்
அழித்தும்
கொண்டிருக்கிறேன்
அவள்
லாவண்யத்தை
– ஆர். கே. ஜி