
அக்னியே
உன் தாகத்திற்கான
நீர்
நான்
எக்காலத்திலும்
யோகத்தில் அமர்ந்தப் பெண்கள்
கண்களை மூடியதில்லை
சஞ்சலம்
பெரும்பாலும் ஆண்களுக்கே
இறப்பை ஏற்றுக் கொள் என்றான்
எளிமையாக
நூறு முறை இறந்தவன் போல
நான் மலையின் உச்சியில் அமர்ந்து
விடியல்களைப் பார்த்து கொண்டிருக்கிறேன்
வண்ணங்களின்
அசரீரியைக் கேட்டப்படி
மரங்கள் பறக்க விரும்புவதில்லை
மனிதன் மட்டும் விசித்திரன்
அவள் மனதைப் போல
மண்ணின் கீழ்
இயங்குகின்றன
எத்தனையோ
ரகசிய உலகங்கள்
சப்தமின்றி
அவள் கொடுத்தக் கங்கினை
அணைக்காமல்
இன்றும்
சுமந்து கொண்டிருக்கிறேன்
என் முன்
அவள்
காதலியாய்
மனைவியாய்
அம்மையாய்
கிழவியாய்
பிணமாய்
மாறியப் பின்னும்
நான்
எழுதிக் குவித்த சொற்களை
மீண்டும் படிக்க விரும்புவதில்லை
அவை எனக்கானவை அல்ல
என்னிடமிருந்து வந்தவை
எங்கெங்கோ
பேரின்றித் திரியும் பொழுது
அடையாளம் தேவையாகிறது
ஒரு இடத்தில் நின்று விட்டால்
அடையாளம் பாரமாகிறது
சுவாசம்
சில காலங்கள் தான்
இருந்தும் யுகங்கள் வாழ்ந்தது
போன்ற பிரமை
குப்பைத் தொட்டிக்கருகில்
போடப்பட்ட
நாயின் பிரேதம்
அசைவுகள் அடங்கிப் போகும்
பிரபஞ்சத்தின் முடிவை சொல்லியது
சத்யம் என்பது
கவித்துவமானப் பொய்
– ஆர். கே. ஜி