சலூன் – கவிதை

சலூன்

செய்வதற்கு ஒன்றுமில்லை என்றால்
முடிவெட்டக் கிளம்பி விடுவேன்
இப்பொழுதெல்லாம்
அடிக்கடி செல்லும் நெருக்கடிக் காலம் வேறு

“வெட்ட ஒன்னுமே இல்லையே சார்”
நாவிதனும் புலம்பத் தொடங்கிவிட்டான்
“வெள்ள முடியாப் பார்த்து பொறுக்கி எடப்பா”
பதிலில்லாமல் சமாளித்தேன்

சலூனில் கண்கள் எதன் எதன் மீதோ வழுக்கி விழும்
அப்படி தான் அன்றும்..

“முடிவெட்டவே மத்ராஸ் வரைக்கும் வந்தேன்”
தன்னை அறிமுகம் செய்தபடி நுழைந்தான்
ஐம்பதைக் கடந்த அவன்
அவன் தலை முடி அடர்த்தியாக
வெளி நாட்டுக்காரனின் வெளுப்புடன் காட்சி தந்தது

“ஐயோ இந்த ஆளா” என்பது போல் முழித்தான் நாவிதன்..

அவன் சிதறிக் கிடந்த நாளிதழ்களை அகற்றி
மொத்த மேசையும் ஆக்கரமித்து அமர்ந்தான்

“நேத்து தான் சிக்காகோலேந்து இறங்கினேன்
அங்கேயும் நல்ல வெயில்
ஒட்ட வெட்டிடு சரியா?”

“சரிங்க”

“முன்ன மாதிரிலாம் இல்ல.
ஆவக்கா நார்த்தாங்காய் லேந்து
எல்லாம் கிடைக்குது
முந்தா நேத்திக்கு மாமி
வேப்பம்பூ ரஸம் வெச்சாப் பாரு…”

“எப்படி சார்? அதுலாமாக் கிடைக்கும்?”

“ஏன்பா‌ நீ வேற
சாம்பார் பொடிலேந்து எல்லாம் ஆறு
மாதம் முன்னாடியே எடுத்துண்டுப் போயிடுவோம்
அளவா கொஞ்சம் கொஞ்சமா டானிக் மாதிரி சாப்பிட வேண்டியது தான்

ஆனா
கருமம் சரியா முடிவெட்டத் தான்
ஆள் இல்லை
மத்ராஸ் வரதுக்குள்ள
மயிர் ஜடை ஆகிடறது”

“அமேரிக்கால ஒரு நல்ல சலூன்
கூடவா இல்லை”
நாவிதன் தனக்குள்
முனகிக் கொண்டான்

கிராக்கி என்பதால் வாயைத் திறக்க முடியவில்லை

“இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு.
பாட்டெரி, மருந்து, சுண்டக்காப் பொடி, டவல், பெண்டாட்டிக்கு நாலு பிரா … அவ்வளோ இருக்கு வாங்க”

அடுக்கிக் கொண்டேப் போனான்

முடியைத் திருத்திக் கொண்டிருந்த நாவிதன்
நமட்டலாக என்னைப் பார்த்து சிரித்தான்

“சத் சங்கத்துக்கெல்லாம் கோவில் இருக்கு.
சிவன் கோயில் டிரஸ்டி வேற. எல்லாப் பொறுப்பும் என் தலையல தான்.
மறந்துட்டேன் பாரு…
நாளைக்கு கற்பகாம்பாள சுத்தனும்
அப்படியே அவளக் கண்ணுலத்
தூக்கி வெச்சேன்னா
அடுத்தப் பிரயாணம் வரை
இறக்கவே மாட்டேன்”

“ஏன் சார்…
உனக்குத் தேவையான சாமான்லேந்து
சாமி வரைக்கும் இங்க தான் இருக்கு
அப்படியாவது அமெரிக்கால‌
காலத்தத் தள்ளனுமா?”

நாவிதன் அடக்க முடியாமல் இம்முறைக் கொட்டி விட்டான்

“காசுனு சொல்ல மாட்டேன்
அம்பத தாண்டியாச்சு
இனிமே என்ன…
எவ்வளவு பிடிச்சாலும்
நம்ம ஊரப் பார்த்தா பயமா இருக்குடா
வரத் தோனல
அங்க ஒழுங்கா டாக்ஸ் கட்டறேன்
மாசத்துல பத்து பங்கு தர்மக் காரியத்துக்கு வேற.
நிம்மதியா இருக்கு”

“அப்ப என்ன இழவுக்குடா விம்மற”
அவன் பேசியதைக் கேட்டு
உள்ளுக்குள்
தூற்றாமல் இருக்க முடியவில்லை

அவனும்
சொல்லி வைத்தபடி
“போன வருஷம் தான் அப்பா தவறினார்.
சிகாகோலேந்து பிரேதத்த மத்ராஸுக்கு எடுத்து வந்து
திருவையாறுல தகனம் பண்ணி
காவிரி கரையிலக்
காரியமெல்லாம் முடிச்சோம்”
கலங்கமற்றக் குரலில் முற்று வைத்தான்

முடியைத் திருத்தி முடித்த பின்
நாவிதன் என்னை எழுப்பி விட
என் இடத்தில் அவன் அமர்ந்தான்

“மூனு மாசம் கழிச்சு மத்ராஸ் வருவேன்
அது வரைக்கும் தாங்கற மாதிரி முடிய வெட்டு”

அவன் சலூன் விட்டு
வரும் வரை
வாசலில் காத்துக் கொண்டிருந்தேன்

வந்த வேலை முடிந்து
படிய வாரின தலையுடன்
சலூனை விட்டு வெளியேறினான்

‘தர்மம் பண்ணுங்க சாமி’
ஒடிந்தக் கையுடன்
பல நாள் குளிக்காத
பிச்சைக்காரன் ஒருவன்
அவனை வழி மறித்தான்

அவன் குரல் காதில் விழாதது போல்
கடந்து சென்றான்

பிச்சைக்காரன் விடாப்பிடியாக
அவன் செல்லும் திசையைப் பார்த்து

“ஏதாவது கொஞ்சமாவது தர்மம் பண்ணுங்க சாமி”
அடி வயிற்றிலிருந்து கத்தினான்

சில நேரம் கழித்து
அவனிடம் ஒன்றும் தேராது என்பது புரிந்து
பிச்சைக்காரன் தரையில் எச்சிலைத் தூற்றினான்.

– ஆர். கே. ஜி

Published by ராம் கார்த்திக் கணேசன்(Ram Karthik)

எழுத்தாளர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: