ஏர்ப்போர்ட் குறிப்புகள்
எனக்கு ஒரு தனிமைத் தேவைப்படுகிறது
என்னிடமிருந்து
தூயத்தின் மீது எத்தனைக் காதலோ
அழுக்கின் மீதும் அவ்வளவும்
நான் விடுதலையாக
முதலில் சிறையிடப்பட வேண்டும்
கால வெள்ளம்
ஒழுகும் குழாயின் நீர்ப்போல
சொட்டுகிறது
யாருக்கும் பயனின்றி
Hello Bye க்கு நடுவில்
பேசுவதெல்லாம்
மாயா வாதம்
எழுத்துக்கள் வண்ணமாக மாறும்
காலம்
கவிதைகளின் காலம்
உட்கார்ந்து விட்டேன்
உறங்கவில்லை
சந்நியாசியின் கண்
சௌந்தர்யத்தை
மௌனமாகப் பார்க்கும்
பார்த்தப் பின்
அப்பட்டமாக்கிவிடும்
அந்த
லோக யுவதியின் அழகை
என்னுள்
அந்தப் பேரொளியைப்
பொத்தி வைத்துள்ளேன்
அனைக்கவில்லை
மறைத்ததால் என்னவோ
தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை
அது
காதலிலத்தது
சத்தியத்தை
காமம் காதலியுடன்
இப்படிக்கு
சத்ய காமன்
புகார்கள் இல்லை
வருத்தங்கள் உண்டு
என் மேல்
நம்பிக்கைகளின் மேல்
ஏன் இத்தனை இளக்காரம்?
அவர்களிடம்
நீ யார்
என்று கேட்டால்
இந்நாள் வரை
தம்மைப் பற்றி
நம்பியதைத் தான்
கொட்டுவார்கள்
வெட்கமின்றி
ஏகாந்தம் என்பது
ஒன்றை மட்டும் விட்டு
அனைத்தையும் கொன்ற
கொலைகாரனின் சாந்தம்
அனைத்தும் நானே என்பது
அஹங்காரம்
எதிலும் நான் இல்லை என்பது
பாதாளம்
சிலவற்றில் நானும்
பலவற்றில் பிறவும்
என்னும்
குழப்பமே உசிதம்
ஆயிரம் பௌர்ணமிகளைக்
கண்டவர்கள்
கொண்டாடப்படுகிறார்கள்
நானோ
ஆயிரம் நிலவுகளுக்குப்
பாலூட்டும்
அவளைக் காண விரும்புகிறேன்
எல்லாம் பேசி முடித்தப் பின்
பேசுவோம்
என் மரணம்
எவனுக்கோ
ஞானத்தின் ஜனனம்
– ஆர்.கே.ஜி