அஹங்காரி
என் முன்னே அவள் அமர்ந்தாள்
கனமானத் தன்
நீலப் புடவையின் தலைப்பை சரி செய்து
கண்களை திடமாக என் மீது செலுத்தினாள்
கையில் வெள்ளைப் புத்தகமும்
பென்சிலும் எடுத்து
“உலகில் ரொம்ப எளிமையான விஷயம் எது ?”
வினவினாள்.
“பேசுவது.”
சிரித்துக் கொண்டே சொன்னேன்
“அப்போ … பேசுங்க”
“எதப் பத்திப் பேச?”
“உங்களப் பத்தி சொல்லுங்க.”
அவள் கண்கள் எங்கள் ஊர் குளத்தை ஞாபகப் படுத்த
நானும் உற்சாகமாக குதித்தேன்
அவள் கண்கள்
ஏகாந்தமாக என்னுள் எதையோப் பார்க்கத் தொடங்கின
உரிமையாக
நானும் வாய்க்கு வந்ததை அவளிடம் சொல்லத் தொடங்கினேன்
சின்ன வயதில் வெளுத்த தாத்தாவுடன் ஆபிசுக்குப் போன நடைகள்
வைகை எக்ஸ்பிரஸில் அமர்ந்துக் கொண்டு
வேகமாக காவேரிப் பாலத்தைக் கடந்தக் காட்சி
மெர்ச்சண்ட் ஹோட்டலில் டிபன்
அனைவரும் இறங்கியப் பின்
இரயிலில்
தனியாக அமர்ந்து அமைதியை ரசித்தது
ஆங்காங்கேப் பொருக்கி எடுத்த நினைவுகள்
அடுத்த கணம்
கண்ணீர்த் ததும்ப
“எல்லாம் போச்சு. இப்ப அசிங்கமும், வெறுப்பும், கவலையும் தான் மிச்சம் .”
சிரிப்புடன் நான் சொன்னதைக் கடந்தாள்
“ஆமா இவ்வளவுப் பெரிய பிரபஞ்சக் குமுறல்ல
என் சின்ன அழுகை எம்மாத்திரம்!”
இருபதைக் கடக்காத
அவள் உடல் வனப்பு
நன்றாக நெற்றியில் செந்நிறத் திலகமிட்டு
கால்களில் செம்பஞ்சுக் குழம்புப் பூசி
சுருள் முடியில் வெட்சிப் பூச் சூடி
கன்னங்கள் சிவக்க
நான் சொல்வதெல்லாம் கேட்டுக் கொண்டு
மெலிதாகத் தனக்குள் சிரித்துக் கொண்டாள்
எனக்கு மட்டும் எதுவும் சரியில்லை
என்பது போல
ஓயாமல் அவளிடம் புலம்பிக் கொண்டிருந்தேன்
என்ன செய்ய வேண்டும்
எங்கேப் போக வேண்டும்
எதை அடைய வேண்டும்
போன்ற ஆசைகள், தாபங்கள்
அனைத்தையும் சொல்லித் தீர்த்தேன்
இத்தனை நேரம் நான் சொன்னதையெல்லாம் கேட்டிருந்தவள்
அவள் வரைந்துக் கொண்டிருந்தத் தாளை
காண்பித்தாள்
என் முகம்
கண் வரை வரையப் பட்டிருந்தது
என் கையில் தாளைக் கொடுத்து
எதுவும் பேசாமல் நகர்ந்து விட்டாள்
அவள் சொல்ல வந்தது என்ன?
அனைத்தையும் பார்த்ததாக எண்ணி
இழவுக் கொட்டும் என் உலகம்
காட்சியில்
கண்களில் நின்று விட்டதா?
நிச்சயம் பூடகமாக எதையோ
சொல்ல முனைந்தாள் அந்த சுந்தரி
இப்படித் தான்
அஹங்காரி
ஒவ்வொரு முறையும்
அழகால் தன்னை மறைத்துக் கொண்டு
பிரமையில்
ஆழ்த்திக் கொண்டிருந்தாள்
விளையாட்டாக
வேண்டும் அளவிற்கு வரைந்து
அகன்று விடுவாள்
அப்படி விட்டுச் சென்ற
பலப் படிமங்களை சேர்த்தும்
என்னால் என்னைக்
கோர்க்கவே முடியவில்லை
ஒன்று மட்டும் புரிந்தது
அவள் விளையாட்டாக
வரைந்து வீசிப் போட்ட
காகிதத் துண்டுகளே
வானும் வெளியும்
சூரியனும் சந்திரனும்
விசும்பின் துளி விழுந்த
நானும்
– ஆர். கே. ஜி