இன்றைக்கும் நாளைக்கும்
என்
சிந்தனை மட்டுமே சரடாய்
சம்மந்தமில்லாத மனிதர்கள்
சம்மந்தமில்லாத சித்தாந்தங்கள்
சம்மந்தமில்லாத நிகழ்வுகள்
ஒரே ஈடாக ஒட்டியோ
அல்லது
சுத்தமாக எதிலும் ஓட்டாமலோ
எவ்வளவு நாள் தான்
விதையும் தெரியாமல்
பழமும் சுவைக்காமல்
வெட்ட வெளியில் மரமாய் நிற்பது
என் வாழ்வைக் கதையாக்கத் தான்
இத்தனையும் என் மீதுப் பூசிக் கொள்கிறேனா?
அவர் இதை நம்பினார்
அவர் இதை எழுதினார்
உண்மையில்
யார் சொல்லி இந்தக்
கூத்தை ஆடிக் கொண்டிருக்கிறேன்?
சாரமாக என் வாழ்வைத் தொகுத்து
யாருக்கு சொல்லப் போகிறேன்?
எவ்வளவு ஆழமாகக் கிண்டினாலும்
வானத்தில் அன்னமாய் பறந்தாலும்
அடி முடி
பிறப்பு இறப்பு
அவ்வளவே
சன்னியாசி ஒருவர்
அடுத்த சந்நிதானத்தைத்
தேர்வு செய்கிறாராம்
அவரை நம்பிய நிஜத்தைக் கடத்த
ஒரு வீட்டு அம்மணி
அன்புடன் தன் மகனைப்
பார்த்துக் கொண்டிருக்கிறாள்
அப்பன் செத்தப்பின் அவன் பிரதியாவான் என்று
காதலி
சதா
கழுத்து மாலையை உருட்டிக் கொண்டிருக்கிறாள்
எந்நேரத்திலும் அவளைப் பிரிவேன் என்று
தொடர்ச்சிக்காகக் கதைகளைப் புனைகிறோம்
சப்பையானத் தொடர்பில்லாத
வாழ்வின் சிறியத் தருணத்திற்கும்
அர்த்தம் சேர்க்க
நாம் நம்ப மறுக்கும் உண்மை
பிரிவு இயல்பானது
எந்த வகைத் தொடர்ச்சியும்
செயற்கையானது
வாழ்வு
தொடர்ச்சியற்ற
கோர்வையான நினைவுகளற்ற
அங்கங்கே ஆடி முடிக்கும்
விளையாட்டாக மாறுமாயின்
பிரம்மன் உருட்டும்
முதல் தாய வீச்சாகும்
அத்தனைக் கோடி
நிகழ்வுகளும்
ஒருவனுக்கு ஒரு நிஜம்
ஊருக்கு ஒரு நிஜம்
யுகத்திற்கு ஒரு நிஜம்
என நாம்
கடத்தி வந்த அத்தனை நிஜங்களும்
உணர்வுகளும்
வரலாறுகளும்
கோட்பாடுகளும்
எதிர் திசையில் கிடக்கும்
மைல் கல் போல
தூரங்களை மட்டும் சொல்லி
அசையாமல்
பொருளற்றுப் போகும்
ஏதோ ஒரு மதியப் பொழுதில்
அம்மணமாக
அல்லி மலர்ந்தக் குளத்தில்
சுயம் பற்றிய அக்கறையின்றி
தெள்ளிய நீரில் முங்கி
அவன் இருக்கும் திசையைப் பார்த்து
கும்மிட்டப் பொழுது தான்
இதை உணர்ந்தேன்
என்னை நம்பி நிஜம் இல்லை
நிஜங்களை நம்பி நானும் இல்லை
உண்மையின் முத்தத்திற்கு
காத்துக் கிடக்கும்
அவன் அல்ல நான்
இனி
– ஆர். கே. ஜி