மாய அறை
பிரம்மாண்டமாய்
பறந்து விரிந்த
மாய அறையில்
என் வாழ்க்கை
சுவரில்லா வீட்டில்
ஆகாய வேனியாகத் தொங்கும்
பளிங்கு ஜன்னல்களின் வழி
ஏதேதோ விசித்திரக் காட்சிகளைக்
என் கண் கடந்து போகிறது
வெயில் பட்டு
சுடு மண்ணில் வேகும் புழுப் போல
அறையின் மாயைகளால்
நெளிகிறேன் நான்
இந்த கணம்
என் நிழல் கடந்து
அறைக்குள் சொந்தம் கொண்டாட
ஒன்றும் இல்லை
என் அறை
உரிமையாளன் அற்ற வீட்டின்
ஒரு சிறு அங்கம் என்பதை அறிவேன்
இதைக் கடந்து
அறையின் தன்மையை
ஒருபோதும் கணிக்கவே முடியவில்லை
அறையின் சுவர்களைப்
பல முறை அடித்தும்
ஆத்திரத்தில் கத்தியும் முனங்கியும்
அறையிடமிருந்து
அசைவோ
எதிரொலியோ
சிறிதும் இல்லை
சுவறற்ற சிறையில்
அடைந்து சாகும்
போக்கற்ற குற்றவாளியாகத் தான்
அறைக்குள் நகர வேண்டியதாயிற்று
அறை
தண்ணீர் கொப்பளம் போல
வட்டமாகச் சுற்றியுள்ளதா
சுதரமாக அளந்து செய்யப்பட்டதா
போன்றக் கேள்விகள்
அவ்வப்பொழுது எழுந்தடங்கும்
இதெல்லாம் போக
அடுத்த அறைகள் பற்றிய யோசனைகள் வேறு
ஒரு அறை
வண்ணங்களால் ஆன ஒன்று
அதன் மத்தியில்
என் பால்யத் தோழி
தன் மெலிந்தக் கைகளால்
தலை மயிரைக் கோதியப்படி
சிரித்துக் கொண்டு நிற்பாள்
வெட்கி கூனி
நானும் நிற்பேன்
ஒரு அறை
வியர்வை நெடிகளால் ஆனது
பணம் உயர்வு கடமை போன்ற
வெத்துக் கூச்சல்கள் அதில் எழும்
சுருக்கமாக
சப்தங்களின் தப்பாட்டம்
ஒரு அறை முழுவதும்
புத்தகங்கள்
வாக்கியங்கள்
கண் கூசிக் குத்தும் ஞான ஒளி
அவை அடுக்கிய மேஜையில்
விழுந்துக் கொண்டே இருக்கும்
நான்காம் அறை
இருள் என்னும் புலி
கவ்வித் திண்ற மாமிசம்
குறிப்பாக சொல்ல
அந்த அறையில் ஒன்றும் இல்லை
வீட்டின் முதல் அறையாகவும்
கடைசி அறையாகவும் அது தோன்றியது
எதிர் எதிரே வைத்த இரண்டு கண்ணாடிகளுக்குள்
முடிவற்ற உருவங்கள் எழுவதுப் போல
அறைகள் எனக்குள் முளைக்கத் தொடங்கின
ஒவ்வொரு அறையையும் இடித்து
மணல்களைக் குவிக்க
அறைகள் எழுந்துக் கொண்டே தான் இருந்தன
இந்த அறை
எனதென நம்பி
உறங்கத் தொடங்கி விட்டேன்
துயிலில்
நான்கு அறைகள் கொண்ட
என் வீட்டின் கூரைகளில்
நிலவின் கதிர்
உரக்கப் பேசாமல்
விழந்து கொண்டிருந்ததைக்
கனவில் காண முடிந்தது
நம்பத் தொடங்கியப் பின்
விழிப்பைப் பற்றிய யோசனைகளே இல்லை
என் அறைக்குள் வாழ்ந்து
அமைதியாக சாகும் விந்தையைக்
கற்றுக் கொண்டு விட்டேன்
இருந்தும்
அந்தரங்கமாக
அறைகள்
தமக்குள் பேசிக் கொண்டு
என்னை அன்னியமாக்கி எறிந்திடுமோ
என்ற பயத்தால்
நடுங்கத் தொடங்கினேன்
– ஆர். கே. ஜி