எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடல் அகம் சார்ந்தப் பாடல்களைத் தன்னுள் கொண்டது .
13 புலவர்களால் பாடப்பட்டது பரிபாடல்.
தெய்வங்களைக் கருப் பொருளாகக் கொண்ட அகப் பாடல்கள் பரிபாடலில் காணப்படுகின்றன.
பாடியவர்: குன்றம் பூதனார்
பண்: பாலை யாழ்
இரு நிலம் துளங்காமை வட வயின் நிவந்து ஓங்கி
அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலைகாக்கும்
உருமுச் சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட
எரி மலர்த் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி
விரி சடைப் பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப
தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு, மதி ஆரல் பிறந்தோய்!
அசையாத அகன்ற நிலங்களைக் கொண்டதும், பெரிதாக வளர்ந்ததும், தெய்வங்களின் தலைவனான இந்திரனால் காக்கப்பட்டதும், இடி உருமும் உச்சிகளைக் கொண்டதுமான வட மலையான இமயத்தில், தழல் வண்ணத் தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் கொண்டு வந்த ஆர்ப்பரிக்கும் கங்கையை, சடையில் முடித்து, பழுத்த மலர்கள் மெலிதாகத் தரையில் வீழ்வதுப் போல், அதன் வேகத்தைத் தடுத்த ”ஜலதாரி“ என்றழைக்கப்படுபவனும், கருநீலக் கண்டத்தை உடையவனுமான சிவனின் புதல்வனாகிய முருகனே!!
நீ மை இரு நூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று
ஐ இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள் மலர் உண்கண்
மணி மழை தலைஇ என, மா வேனில் கார் ஏற்று
தணி மழை தலையின்று தண் பரங்குன்று
ஆயிரம் கண்கள் உடைய, இந்திரனின் மகளான வள்ளியின் தோள்களைப் பற்றிய நாளில், மைத் தீட்டிய அவள் கண்களிலிருந்து, மழைத் துளிகள் போன்ற நீர்த் துளிகள் வீழ்ந்தன.
அவளைத் தணிக்க, தகாத வேனில் காலத்தில், பெரும் கார்கால மழை திருப்பரங்குன்றம் என்னும் அக்குன்றத்தில் பொழிந்தது.
நான்மறை விரித்து, நல் இசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர்! கேண்மின் சிறந்தது!
காதற் காமம், காமத்துச் சிறந்தது;
விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி
புலத்தலின் சிறந்தது, கற்பே; அது தான்
இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடாப்
பரத்தை உள்ளதுவே; பண்புறு கழறல்
“நான்கு பொருள்களையும் (வேதங்களையும்) நன்றாகக் கற்றுணர்ந்த வாய்மைப் பொருந்திய புலவர்களே, கேளுங்கள்…
காதல் காமமே (களவுக் காதல்) காமத்துள் சிறந்தது. அதன் பின் வரும் இரு உடல் கூடும் கூடல் அதனினும் சிறந்தது.
பரத்தையிடம் சேர்ந்தப் பின் தலைவன் தலையிடத் தே வரும் ஊடலும், அதன் பின் தலைவன் இரந்து தலைவி ஈதலும், கற்பின் சிறப்பாகும்.
ஊடலின் பின், தலைவன் தலைவிக் கூடுவதை சுணங்குறை என்பர்.”
தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்புற
நாள் அணிந்து, உவக்கும் சுணங்கறையதுவே
கேள் அணங்குற மனைக் கிளந்துள சுணங்கறை
சுணங்கறைப் பயனும் ஊடலுள்ளதுவே
அதனால், அகறல் அறியா அணியிழை நல்லார்
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர்; இத்
தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய் வந்திலார்
இதைத் தாளாதப் பரத்தை, உறவும் சுற்றத்தாரும் பயப்படும் படி, இல்லம் புகுந்து அவர்களின் கூடலைப் பிரிப்பாள். இதை அறிந்த களவில் உள்ள நல்ல அணிகள் அணிந்தப் பெண்கள், முனிந்து கோபப்படாமல் பொறுமைக் காப்பர்.
குன்றின் இந்த ஒழுக்கத்தை, தமிழ் வழி அல்லாதவர் அறிய வழியில்லை!”
ஊழ் ஆரத்து தேய் கரை நூக்கி, புனல் தந்த
காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின்
கேழ் ஆரம் பொற்ப வருவானைத் தொழாஅ
வாழிய மாயா! நின் தவறு இலை; எம் போலும்
கேழ் இலார் மாண் நலம் உண்கோ திரு உடையார்
மென்தோள் மேல் அல்கி நல்கலம் இன்று?
வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனிப்
பெய்ய உழக்கும் மழைக் கா; மற்று ஐய!
வைகையின் வெள்ளம் கரைகளைத் தேய்த்து, சந்தன மரங்களை வீழ்த்திக் கொண்டிருந்தது.
மாலை, மணியாரம் அணிந்து வந்த முருகனைத் தொழுத தேவயானை
“மாயனே… உன் பால் தவறில்லை.
என் போன்ற மெல்லியத் தோள்களையும், கூரியப் பற்களையும் உடையப் பெண்களை நீ உய்ப்பதில்லை. மழை எதிர்ப்பார்த்திருக்கும் கானல் போலத் தவிக்க விடுதையே வழக்கமாக வைத்துள்ளாய். ”
கரையா வெந்நோக்கத்தான் கை சுட்டி, பெண்டின்
இகலின் இகந்தாளை, அவ் வேள் தலைக் கண்ணி
திருந்து அடி தோயத் திறை கொடுப்பானை
வருந்தல் எனஅவற்கு மார்பு அளிப்பாளை
குறுகல் என்று ஒள்ளிழை கோதை கோலாக
இறுகிறுக யாத்துப் புடைப்ப
வள்ளிக்காகத் தன்னை விட்டுச் சென்றதால், வெந்திருந்த தேவயானையின் மனதைத் தணிக்க, அவன் சூடியிருந்த மாலைகள் அவள் கால்களை வருடும் படி, தன் சிரசை அவள் அடியில் பொருத்தினான்.
இதைக் கண்ட வள்ளி, மார்புக் கொடுத்த தேவயானையைக் கடிந்து, அவள் அருகில் போகாதே என சொல்லிக் கொண்டே, மாலைகளைக் கோலாக்கி முருகனை அடித்தாள்.
கயிறாக முடிந்து, முருகனை இறுக அணைத்தாள்.
இறுக இறுக அவனைத் தன் கட்டுக்குள் கொண்டு வர முனைந்தாள்.
ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல
இருவர் வான் கிளி ஏற்பில் மழலை
செறி கொண்டை மேல் வண்டு சென்று பாய்ந்தன்றே
வெறி கொண்டான் குன்றத்து வண்டு!
ஒருவரின் மயில் ஒருவரோடு சண்டையிட, கிளிகளும் சண்டையிட்டன.
இவைகளுடன், வள்ளி வாழும் திருப்பரங்குன்றத்தின் வண்டுகள், தேவையானை சூடியப் பூக்களில் உழலும் வண்டுகளோடு சண்டையிடத் தொடங்கின.
நிச்சயம், காளிதாசரின் குமார சம்பவத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாதது இப்பாடல்கள்.
ஆதரவின்றி, கொட்டும் மழையில் தனித்து நின்றிருக்கும் வள்ளிக்கு இரங்காமல் கவிதைகளைக் கடக்க முடியவில்லை.
புலவனோ, எதற்கும் அசராமல் முடிக்கிறான்…
”காதற் காமம், காமத்துச் சிறந்தது.”
– ஆர். கே. ஜி
இலவச இணைப்பு 😉
டி. கே. பி. யின் குரலில் ..”பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்”
“வீரவேல் முருகன் மீண்டும் வருவான்
வள்ளி மணாளன் என்னை மறவான்
பேரருளாளன் எனக்கருள்வானெனும்
பெருமிதத்தால் மெய் மறந்தேன்”