நீருக்கென்று ஒரு நிலம் இல்லை
நீர்
குட்டையில் துஞ்சும்
அருவியில் ஆடும்
தேவ கந்தர்விப் போல
வானில்
மறைமுகமாய் சஞ்சரிக்கும்
பச்சை செழிப்புக்கு
மனிசர் கைக்காட்ட
தன்னைக் குற்றம் சொல்வாரோ என
கடன் பட்டு நிற்கும்
நிலத்தைக் கண் கொட்டாமல் காதலித்தும்
வெறுப்பு தான் மிஞ்சும்
தனக்கென்று நிலமில்லாமல்
அனாதையாய் ஓடும்
ஓரிடத்தில் நின்றால் போதும் நீருக்கு
பதைபதைப்பை
வாளியில்
அதன் சலனத்தில் காணலாம்
கடலாகி
அஸ்திகளைப் புனிதமாக்கும்
மழித்த பிக்குனிப் போல்
பரிதி எழ மின்னும்
மூச்சை நாசி வழியே விட்டு
தன்னுள் ஆழ முயலும்
கங்கை யமுனை காவிரி
நாமம் சூட்டி
நகரங்கள் பல வளர்த்தப் பின்னும்
தனக்கென நிலம் இல்லாதது
நீர்
நிறைவின்றி
துயருடன்
போகுமிடமெல்லாம்
அழுதுக் கொண்டுதான் இருக்கும்
ஊழியில்
பல உலக
நிலமெல்லாம் அணைக்கையில்
சேராக் காதல்
பெரும் காமமாகும்
நீரின் சூட்டில் அனைத்தும் பொசுங்கும்
– ஆர். கே. ஜி