நடக்க வேண்டிய தூரம் – கவிதை
இக்கணம்
பிரிவு
வஸீகரமாகத் தோன்றுகிறது
எனக்கு
வாழ்வில்
நீண்ட தூரம்
கைவிடாது செல்ல வேண்டும்
என்றக்
கனவுகளோடு தான்
நானும் பலரைப் போலக்
காதலித்து
கைப்பிடித்து
காலங்களை எதிர்ப்பார்த்திருந்தேன்
ஆனால்
எனக்கே வியப்பாக அமைகின்றது
பிரிவின் மேல் தொடங்கியுள்ள இக்காதல்
எப்படி பிரியலாம்
பிரிவிற்கான சூழல்
போன்றவற்றை மட்டுமே
சிலக் காலங்களாக யோசித்து வருகிறேன்
பல யோசனைகள்
மனதுள் வந்து போய்விட்ட்ன
நாங்கள் இருவரும்
அதிகம் நடந்த
பீச் ரோட்டில்
பீச் ஸ்டேஷன்
வாசலில் தொடங்கி
மெரினா வரை
கடைசியாக ஒரு முறை
கைக் குலுக்கி
சிரித்துக் கொண்டோ
அல்லது அசடு வழிந்துக் கொண்டோ
கடற்கரையில்
கூட்டத்தோடு கூட்டமாக
மறைந்து விட வேண்டும்
என்பது
ஒருத் திட்டம்
காபி ஷாப்பில்
அவளுக்குப் பிடித்தப் புத்தகத்தை
பரிசளித்து
யாரும் பார்க்காத நேரத்தில்
முத்தமிட்டு
அதிகம் பேசாமல்
என் தரவு விளக்கங்களைக் கூறி
மௌனமாக
அவளை வழி அனுப்பி விட வேண்டும்
என்பது
இன்னொருத் திட்டம்
எதைச் செய்தாலும்
பிரிவு
கவித்துமாக
சர்ச்சை நாடகத் தன்மை இல்லாமல்
நிகழ வேண்டும்
நாளுக்கு நாள்
பிரிவின் மேல்
அபரீதமான ஒருக் காதல்
வளர்ந்து கொண்டு வருகிறது
உறவில்
சமரசமின்றி
வாழ முடியும்
என்ற நம்பிக்கை
அடியோடுப் போய்விட்டது
மனம் குதூகலமாக
பிரிவின் பின் வரப் போகும்
வசந்தக் காலங்களில்
லயித்திருந்தது
யோசனைகள் தொடர்ந்தன
என்பீல்ட்டில் கடைசி ரைட்?
எப்பொழுதும் போல ஒரு அரைகுறைக் கவிதைக் கிறுக்கல்?
அவளுக்குப் பிடித்த காரமெல் ஷேக் ?
அவளது
கருத்துக்கே விட்டு விடலாம்
என முடிவு செய்து
வீட்டை அடைந்தேன்
வீட்டில்
கைக்குட்டடையை இடையில் சொருகியப் படி
வியர்வைத் துளிர
முடி அங்குமிங்காகத் தோளில் துழாவ
உயிரற்று
நின்றிருந்தாள்
கிழிந்த
அழுக்குக் கம்பளியாக
பார்க்கவே பரிதாபமாக இருந்தாள்
அழகை அசிங்கமாக்கிய நான்
நிச்சயம்
திருடராஷ்டிரனைப் போலக்
குருடன்
கொடுங்கோலன்
திடீரென்று
கோபமாக பீச்சுக்கு போகலாமா என்றாள்
என்னை அறியாமல்
வியர்த்தது
பிரிவின் சூழலை
அவள்
அமைத்துத் தரப்
போகிறாளோ?
பீச் வரை
நீண்ட நாட்களுக்குப் பின்
என்பீல்ட்டில் சென்றோம்
வழி நெடுகிலும்
அவள்
ஒரு சொல்லைக் கூடப் பேசவில்லை
கடற்கரை அடைந்தவுடன்
பைக்கை ஓரமாக நிறுத்தச் சொன்னாள்
பிரிவின் முதல் அடிக்காகக் காத்திருந்தேன்
அவளோ
எதையும் பேசாமல்
வெறித்த முகமாக
கடலைப் பார்க்கத் தொடங்கினாள்
அந்த மௌனத்தை
என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை
தாங்க முடியாமல்
விம்மத் தொடங்கினேன்
என் வாழ்விலே
அவ்வளவு அழுகையை நான் பார்த்ததில்லை
அழுததுமில்லை
விம்மித் தீர்த்தேன்
இத்தனை நேரம் பேசாதவள்
என் சேஷ்டைகளைப் பார்த்துக் குழம்பிப் போனாள்
“என்ன ஆச்சு இப்போ?”
செல்லமாகக் கிள்ளினான்
“ஒன்னும் இல்ல. நாம நடக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு. நாம இதே இடத்துல நிக்க வேண்டாமே ”
அவள் கைகளைக்
குழந்தையைப் போல
விடாமல்
அணைத்துக் கொண்டு நடந்தேன்
அவள் என்னைப் பொருட்டாக
மதியாமல்
கடலைப் பார்த்தப்படி
நடக்கத் தொடங்கினாள்.
– ஆர். கே. ஜி