அனைவருக்கும் ஒரு பை பாஸ் தேவைப்படுகிறது
பழகிப் பழகி
புளித்துப் போன
தான் வாழும் நகரின்
சாலைகளை
தெருக்களை
மனிதர்களை
நொடியில்
தொடாமல் கடக்கும்
ஒரு பை பாஸ்
அனைவருக்கும் தேவைப்படுகிறது
அவனுக்கும் அப்படியே
அவன் அதிகம் சஞ்சரித்தது
ஆற்காட் ரோட்
மெட்ரோ ரயிலின்
போக்குக்கு
குழிகள் தோண்டப்பட்டு
வெட்டுண்ட மரம் போல
ஆற்காட் ரோட்
அனாதையாய்க் கிடந்தது
அத்தனையும் பார்த்துவிட்டது
ஆற்காட் ரோட்
ஆம்புலன்ஸை விடாமல் துரத்தி
அது அமைத்து தரும் பாதையை சாதகமாக்கும்
உச்ச பட்ச சுய நலம் வரை
அத்தனையும்
அலைப்பாயும்
திக்கற்ற ஷேர் ஆட்டோக்கள்
வழி விடாமல்
மொத்த ரோட்டையும் ஆக்கிரமிக்கும் 25 ஜி
குடையின் கீழ்
தலையைக் கவிழ்த்தப்படி
சாலையில்
கவனம் செலுத்தாத
முதியவர்கள்
குற்ற உணர்ச்சியின்றி
காரை உரசி செல்லும்
பரட்டை இளைஞர்கள்
என்னும் பொறுக்கிகள்
முப்பதைக் கடக்காமல்
நிமிர்ந்த முதுகுடன்
இரு சக்கர வாகனங்களை ஓட்டும்
நடு வயதுப் பெண்கள்
அவ்வப்பொழுது
அனுதாபத்தைத் தூண்ட
பிளாட்பாரத்தில்
செருப்புத் தைப்பவனின்
குடைவீட்டின் கீழ் வாழும் பாதசாரிகள்
சில்லறைக்கு கெஞ்சும் அரவாணிகள்
கைத் துண்டான சிறுவன்
வெயிலில் கருத்த கர்பிணி
போதாக் குறைக்கு
இரண்டு புது மால்கள்
நெரிசலைக் கூட்ட
ஒரு நாளும்
ஆற்காட் ரோட்டில்
வேண்டிய வேகத்தை
அவனால்
எட்ட முடியவில்லை
விரக்தியில் நேற்று
சென்னை பை பாஸ் நோக்கி
வண்டியைத் திருப்பினான்
எது நடந்தாலும்
பிரேக்கில் கால் வைக்காமல்
ஓட்டுவது என
முடிவு செய்தான்
கார்
100 கி. மி. ஐ முப்பது வினாடியில் கடந்தது
சாரல் அடிப்பது போல
காரின்
முன் ஜன்னலில்
கரும் சிவப்புத் துளிகள்
விடாமல் தெறித்தன
அத்தனையும்
அவன்
வேகத்தில் சாகடித்தப்
பட்டாம்பூச்சிகள்
சிவப்புக் கம்பளமாய் மாறி
அவைப் பாதையை மறைத்தப் பொழுது தான்
கரைகளை
வைப்பரில் துடைக்க முனைந்தான்
அதீதக் குற்ற உணர்ச்சியில்
ஒரு வழியாக
பை பாஸைக் கடந்தான்
இன்று மீண்டும்
ஆற்காட் ரோட்
காலை முடக்கி
சாலையின் நெரிசலுக்கு
சிறிதும் அசராமல்
கிடக்கும்
மந்தப் பசுவைப் போல
சஞ்சரிக்கத் தொடங்கி விட்டான்
கார் 30 கி. மி. – 40 கி. மி.
என இழுத்துக் கொண்டிருக்க
நேற்று செய்ததின்
வினையாக
ஆற்காட் ரோட்டின் சார்பாக
குடிமகன் ஒருவன்
பாட்டில் கையுடன்
சுய நினைவின்றி
கோபமாக
காரின் முன்
அமைதியாக
சம்மனம் போட்டமர்ந்தான்
– ஆர். கே. ஜி.