இரவின் கரப்பான்கள் – கவிதை

இரவின் கரப்பான்கள்

IMG_0782csm.jpg

கவிஞன் வாழும் காலங்களில்

அவன் கவிதைகளில்

அவன் வாழ்க்கையில்

எதை எதையோ தேடி

அவன் சொல்லை நிசப்தித்து

தோல்வியில்

விரக்தியில்

அவனை உடைத்தெறிகிறோம்

 

உண்மையில்

இறந்தப் பின்னே

கவிஞன்

நம்முடன்

பேசத் தொடங்குகிறான்

அந்தரங்கமாக

 

அவன் வாக்கால்

நாம் முடிந்த வரை

நிசப்தித்த

சொற்களெல்லாம்

முகத்தில் விட்டெறிகிறான்

 

அப்படி தான்

நான் சமீபத்தில்

படித்த

அவன் எழுதிய

”இரவின் கரப்பான்கள்”

என்னும் கவிதை

 

இரவுக்கென்றே சில மனிதர்கள்

இவர்கள்

பகல் வெளிச்சத்தில்

நம் கண்களுக்கு

தெரிவதில்லை

 

கரப்பான்கள் போல

தண்டவாளங்களை

ஒட்டிய

குப்பைக் கழிவுகளில்

கிளம்பி

இரவின் தனிமையில்

தெருக்களில்

சப்தமின்றி உலாவுவார்கள்

வெள்ளைப் பனி

போர்த்தியிருக்கும்

டிராம் ஓடாத

தெருக்களில்

இலக்கின்றி நடப்பார்கள்

 

அப்படிப்பட்ட

பிச்சைக்காரனைத் தான்

அவன்

இரவில் எதிர்கொண்டான்

 

எல்லா பிச்சைக்காரர்களைப்

போலவும்

அவனை வழிமறித்து

பணம் கேட்டான்

 

நாற்பது வயது

பரட்டை தாடி

நீண்ட நாள்

துவைக்காத

ஜீன்ஸ்

பழுப்பு நிற

சருமம்

என

அச்சு அசலான

பிச்சைக்காரன்

 

பிச்சைக் கேட்பதில்

போலி பவ்யங்கள்

அவனிடம் இல்லை

 

அப்படி தான்

தெருவின் சந்தியில்

சில்லறைக்கு

அவனிடம்

கைகளை நீட்டினான்

 

எவ்வளவு தொடர்ந்தும்

கெஞ்சியும்

அவன்

அலட்சியமாக

பிச்சைக்காரனை

கடந்து சென்றான்

 

இரண்டு அடிகள்

வைத்தப் பின்

அவனுக்கு

தர்ம சங்கடம்

 

போகட்டும்

என்று சில்லறைகளை

குவித்து

பிச்சைக்காரனைத்

தேடி போய்

காசுகளை

நீட்டினான்

 

பிச்சைக்காரன்

ஏற்கவில்லை

முகத்தை சுருக்கிக் கொண்டு

நமட்டலாக சிரித்து

அவ்விடத்தை விட்டு

அகன்றான்

 

அந்த ஒரு கணம்

அவனைக் காட்டிலும்

பிச்சைக்காரன்

தனவானாகத்

தோன்றினான்

சில்லறைகளை

மறுக்கும் அளவிற்கு

 

பிச்சைக்காரன்

கொல்ல முடியாத கரப்பான் போல

அவன் முன்

பெருமிதமாக  நடக்கத் தொடங்கினான்

 

உண்மையில்,

பெயர் தெரியாத

பிச்சைக்காரனிடம்

தோற்றதை

கவிதையாக்க

அவனுக்குத்

தேவையே இல்லை

 

இருந்தும் செய்தான்

 

காரணம்

நாம் தோற்பது

எளிமையுடன் தான்

என அவன்

உணர்ந்திருந்தான்

சுய மீட்சிக்காக

கவிதையை எழுதினான்

 

பிச்சைக்காரனிடம்

தோற்றவன்

புத்தக அட்டையில்

டைப்ரயிட்டர் கிடந்த

மேசையின் முன்

கம்பீரமாக

சிகாருடன்

நிற்கும்

புகைப்படமாக

உறைந்து விட்டான்!

– ஆர். கே. ஜி.

file-20170516-11929-95xr0i.jpg

Published by ராம் கார்த்திக் கணேசன்(Ram Karthik)

எழுத்தாளர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: