இயர்போன் ஒலிகள் – ஒற்றைக் கால் கலி 9

இயர்போன் ஒலிகள் – ஒற்றைக் கால் கலி 9

Related image

ஒன்றை ஒன்று

தழுவி உதைத்து

காதின் குட்டிக் குழியில்

குருளைகள் அலமருவது போல்

இயர்போனில்

எனக்கான ஒலிகள்

ஒலித்துக் கொண்டிருந்தன

 

இயர்போனை  கழற்றினேன்

 

காபி தோட்டத்தின் நெடி

எப்பொழுதும் போலவே

காலைப் பொழுதை

வரவேற்றது

 

கேட் வாசலில்

கந்தசாமி

துயில் களையாமல்

சலாம் போட்டான்

 

காபி தோட்டங்கள்

1860ல்

சீமைக் காரனிடமிருந்து

தாத்தன்

பெற்றது

 

என் கொழுத்த வாழ்க்கையில்

காதல், தேடல், பசி

எந்த அடிப்படை உணர்வும்

எக்காலத்திலும் நான் தொட்டதில்லை

 

நடக்க முடியாத மனம்

செடியாகி

ஓரிடத்தில் நின்று

கிளை விரித்து

பூப்பது போன்று

ஒரு வாழ்க்கை

 

ஏற்காடு மலையின் முகடு

அவக்கேடோ தோட்டம்

அலங்கார செடிகள்

பார்ஸல் டிரக்

மொழு மொழு டீனொ

எஸ்டேட் கந்தசாமி

நான் நான் நான்

அவ்வளவே

 

காலையில்

கிளியூர் அருவி வரை நடப்பது

என் பதின்களில் நான்

வளர்த்து கொண்டது

 

அப்படி

மலைகளின் நிசப்தத்தில்

அருவியின் மாட்டு

மாலை சரடாக வீழ்ந்த

கூந்தல் பனை ஒன்றில்

பூக்கள்

வெடித்து

காயாகும்

ஆரவாரத்தை

விசேஷமற்ற

ஓர் காலைப் பொழுதில் கேட்டேன்

 

அன்றிலிருந்து

பேசா மரங்கள்

நோக்கி போவது பழக்கம்

 

ஜூலை மாத மந்தத்தில்

நீரற்ற கிளியூர் அருவி

கரும் பாறைகளை திரந்து

காட்டியது

 

வரண்ட படிமங்களைக் கடக்க

எஸ்டேட்டில்

எங்களின் தனிப்பட்ட

குளம் நோக்கி நடந்தேன்

 

பெரும் அருவிக்கு மாறாக

புனல் குட்டி

நிறைவாக இருந்தது

 

கோரை புற்கள் சூழ்ந்து

காலப் பிரக்ஞையற்று

அதில்

ஆம்பல்கள்

அமைதியாய் மிதந்து கொண்டிருந்தது

 

நீரின் முன் நிற்க

அக்கணம்

மேகமாடும் மலை

அல்லிக் குன்றாக

எனக்குத் தோன்றியது

 

இருள் முறித்தப் பகலில்

புனலின் மாட்டு

நின்றிருக்கும்

வேளிர் வள்ளலாய்

குன்று கொண்டோனாய்

நான்

 

உள்ளுணர்வு

இப்படி தான்

சத்திய

வாக்கியங்களால்

குழப்பும்

 

நிச்சயம் ஏதோ ஒரு

தொல் குடியின்

கடைக் காய் நான்

மலைச் சூழல்

என்னை

தீர்கமாக நம்ப வைத்தது

 

இருந்தேன்

இருக்கிறேன்

இருப்பேன்

என்ற தரிசனம்

கலியில்

ஒரு கணத்தில்

நான் அடைந்தது

 

காலம்

தர்ம ரட்சனைக்கு

மழை மேகங்களை சுமந்து

என்னை விட்டு

எதிர் மலை நோக்கி நகர்ந்தது

 

மீண்டும் மீண்டும்

பிறந்து சாவேன்

எனும்

பதைபதைப்பில்

இயர்போனை மீண்டும்

காதில் பொருத்தினேன்

 

நுட்பமான அவ்வொலிகளை

நான் மட்டுமே கேட்டேன்

அவை எனக்கான ஒலிகள்

 

காலத்தின் சாட்சியாய்

நீர் அசைவின்றி நின்றது

ஆம்பல் பூ ஒன்று தன்னை சாய்த்து

நயமாக

காற்றுடன் ஒன்றி அசைந்தது

– ஆர். கே. ஜி 

Published by ராம் கார்த்திக் கணேசன்(Ram Karthik)

எழுத்தாளர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: