எளியவரின் இடக்கை

எளியவரின் இடக்கை

Image result for இடக்கை

இலக்கியம் ‘காலம்’ என்கிற அளவைக் கொண்டு, காலமற்ற ஓர் இலக்கை அடைகிறது. இக்கருத்தை திண்மையோடு ஏற்று எழுதப்பட்ட வரலாற்றுப் புனைவுகள் இன்று தமிழில் வேறு எந்த இந்திய மொழியிலும் இல்லாத வகையில் மிகுதியாகக் கிடைக்கின்றன.

வரலாற்றுப் புனைவுகளின் வழி நாம் அடைவதென்ன? வரலாற்றைப் பிரதி எடுப்பதே இலக்கியத்தின் நோக்கமா?

வரலாறு தரும் இடைவெளிகளேப் புனைவின் களமாக மாறி விடுகின்றன. வரலாறு சப்த மயமானது. ஒலிப்பெருக்கிப் போல ஓயாதுப் பேசிக்கொண்டே இருக்கக் கூடியது. புனைவு சப்தமற்றது. ஆளற்ற வீட்டில் நுழையும் சர்பம் போல, வரலாறு தரும் இடைவெளிகளில் நுழையக் கூடியது.

புனைவுகள் கால ஏட்டில் நடந்தவற்றை சொல்ல வந்தவை அல்ல. அதன் நோக்கம் ஒரு ‘இணை’ வரலாற்றை உருவாக்குவது அல்ல. இந்த அடிப்படைப் பலருக்கு சேரவில்லை.

உண்மையில், வரலாறு மனிதர்கள் ஆடி முடித்தக் கூத்து. இக்கூத்தின் நாடகத் தன்மை இலக்கியத்திற்கு விதையாகுமே அன்றி, நுண் தகவலும் குறிப்புகளும் அல்ல. அவ்வகையில் எஸ். ராமகிருஷ்ணனின் ‘இடக்கை’, வரலாற்றுப் புனைவுகளில் ஓர் முக்கியப் படைப்பு.

மேலோட்டமாக ஔரங்கசீப் என்னும் பேரரசனின் கொடூரங்களை மட்டுமேத் தொட்டு, ஒற்றை சார்புடையப் படைப்பாக மாறாமல், நாவல்களுக்கே உரிய நடு நிலைத்தன்மைக் கொண்டுள்ளது. சாமானியனின் கையாலாகத்தனத்தை அரசனின் கொடும் செயலுக்கு சமமாக வைக்கிறது.

“அவனைப் பிடித்து மரத்தில் கட்டி வைத்து விளக்கு எண்ணெயும் கற்பூரத்தையும் கொட்டி நெருப்பு வைத்தார்கள். புறா விற்கும் கிழவன் என் கண்முன்னே எரிந்தான். ஆச்சரியம், அவன் வேதனையில் அலறவில்லை. துடிக்கவில்லை. மழைக்குள் நிற்பவனைப் போல ஒடுங்கிப் போய் நின்றிருந்தான்.

அவன் கண்கள் அந்தக் கூட்டத்தில் என்னை மட்டுமே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. நான் எரிந்து கொண்டிருந்தவன் மீது ஒரு கட்டையை வீசி அடித்தேன். அவனது எலும்பு முறிந்து விழுந்தது. அவன் கண்முன்னே எரிந்து விழுந்தான்.”

ஔரங்கசீப்பின் சேவகியான அஜ்வா என்னும் அரவாணியில் தொடங்கி, காலா சிறையில் அவதிக்குள்ளாகும் தூமகேது, பிஷாடன் என்னும் குறுநில மன்னன் வளர்க்கும் குரங்கான அநாம்  வரையில், விதிக்கப்பட்ட தண்டனைகளுக்கும், கொடூரங்களுக்கும் ஒரு சிறு எதிர் வினைக் கூட ஆற்றாமல் மாள்கிறார்கள் நாவலில் வரும் கதை மாந்தர்கள்.

இக் கருத்தை, ‘இரண்டு புழுக்கள்’ என்னும் அத்தியாயத்தில் குறிப்பாக உணர்கிறோம். காசி ராஜனின் மனைவி உலா செல்கையில், ஆண்புழு ஒன்றின் மேல் தேரை ஏற்றிவிடுகிறாள். இதைத் தொடர்ந்து, பெண் புழு காசி நகர் வரை நீதி கேட்டு செல்கிறது.  ராஜாவும், ராஜ ரிஷியான அத்ரியும், ஏன் கங்கையும் கூட ராணிக்காக நீதியை வளைக்க முயல்கிறார்கள். கடைசியில் தன் ஆன்ம பலத்தால் பெண் புழு நீதியை நாட்டி வெல்கிறது. ஆனால், ராணிக்கு எந்த தண்டனையும் வழங்காது, அவளை மன்னித்துத் தன் இருப்பிற்குத் திரும்புகிறது.

ஏதோ ஒரு வகையில், அன்பே நீதிக்கானத் தேடலை விதைக்கிறது என நாம் உணர்வதில்லை.

ஒடுக்கப்படும் குரலற்றவர்களைக் காட்டிலும், ஔரங்கசீப் எதிர்கொள்ளும் முதுமையின் தனிமையும்,  துயரும் நம் பரிவைத் தூண்டுகின்றன.

“என் பணப்பை அஜ்யாவிடமுள்ளது. அதில் நான் தொப்பிகள் தைத்துக் கிடைத்த நான்கு ரூபாயும் இரண்டு அணாக்களும் உள்ளன. அந்தப் பணத்தில்தான் இறந்த என் உடலை மூடும் சவத்துணி வாங்கப்பட வேண்டும். இது எனது இறுதி விருப்பம்.

இது போலவே என்னுடைய கைகளால் பிரதி எடுக்கப்பட்ட குர் ஆனின் பிரதிகளை விற்று நான் முந்நூற்று ஐந்து ரூபாயைப் சன்மானமாகப் பெற்றுள்ளேன். அந்தப் பணமும் அஜ்யாவிடமுள்ளது. இந்தப் பணத்தில் ஏழை இஸ்லாமியர்களுக்கு உணவு வழங்கப்பட வேண்டும் என்பதும் என் விருப்பம்.”

காலக் குழந்தை, தன் கைகளில் சுழற்றி விளையாடும் பந்துகளைப் போலத்தான் அதிகாரம் சுழல்கிறது. பாரதப் பேரரசுகள், முகலாயப் பேரரசுகள், சிற்றரசர்கள், கிழக்கு இந்தியக் கம்பெனி என அதிகாரத்தின் கால அட்டவனையை இந்நாவல் தருகிறது. வரலாறு அளிக்கும் ஒற்றைப் படையான ஆளுமையின் சித்தரிங்களைக் கடந்து, அவற்றின் பின் உள்ள அகங்களைத் தொட இத்தகு முயற்சிகள் நமக்கு முனைப்பைத் தருகின்றன.

“தூமகேது தன் முன் நிற்பவன் தலையைத் தனது வாளால் துண்டித்தான். அவன் தலைமயிரைப் பிடித்துத் தூக்கினான். இவ்வளவு நேரம் தன்னோடு பேசிக்கொண்டிருந்தது இந்தத் தலைதானா? அவன் அசூயையை அடக்கிக்கொண்டு தலையை கையில் ஏந்தியபடியே நின்றான்.

கும்பல் அவனை நோக்கி வந்தது. அவன் கையில் இருந்த தலையைப் பார்த்ததும் உற்சாகமாகியது. அந்த கும்பலை வழி நடத்தியவன் தலையைத் தனது ஈட்டியால் குத்தி வீசி எறிந்தான். அது ஒரு வீட்டின் கூரையில் போய் விழுந்தது. பின்பு அவன் தூமகேதுவைக் கட்டி அணைத்துக்கொண்டு சொன்னான். “ஒரு உயிருக்கு நான்கு உயிர் ஈடாகப் பெற வேண்டும். அந்த நாய்களைக் கொன்று குவியுங்கள்.” அவர்கள் பின்னால் மௌனமாக தூமகேது போய்க் கொண்டிருந்தான்.”

தூமகேது, மதுரா நகர் கலவரத்தில், உயிர் பிழைப்பதற்காகத் தன் அடையாளத்தை ஒரு கணத்தில் திரிக்கிறான். நீதியின் சாரமற்ற, முதுகெலும்பற்றக் குரல்களேப் பேரரசர்களை  உருவாக்குகின்றன.

“உன் காலடியில் கிடக்கும் மணல் இங்கே எப்படி வந்து சேர்ந்தது? யாராவது இங்கே கொண்டு வந்து கொட்டி விட்டுப் போனார்களா? இந்த மணல் தன் விதியின் புதிர்ப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பயணத்தில் இன்று உன் காலடியில் கிடக்கிறது. நாளை உன் கண்ணிற்குள் விழக் கூடும். அடுத்த நாள் அது குதிரையின் பிடறியில் ஏறி வேறு தேசம் செல்லக்கூடும். முடிவில்லாத பயணம் மட்டுமே நிஜமானது.”

இரை உண்ட நாகம் போல, நிலம் காட்சிகள் யாவற்றுக்கும் சாட்சியாகக் கிடக்கிறது. நிஷ்டையில் அமர்ந்த ஓர் ஞானாசிரியனின் சிருஷ்டி இடக்கை.

Image result for Sramakrishnan

–  ஆர்.கே. ஜி.

(விகடகவி இணைய இதழில் வெளிவந்தது)

 

Published by ராம் கார்த்திக் கணேசன்(Ram Karthik)

எழுத்தாளர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: