ஸ்டூடியோ டீரீம்ஸ் – ii
வைத்தியநாத அய்யர், கம்போசிங் ரூம் புகைப்படம் ஒன்றில் கைத் தடியுடன் சுகாசனத்தில் அம்ர்ந்திருந்தார்.
அறுபதைத் தொட்ட தேவராஜனுக்கு, குட்டையான உருவம். அங்கிங்கு வெளுத்த தாடி. நீண்டு வளராத தலை மயிர். பெரும்பாலும் வெண்நிற குர்த்தாவும் வேட்டியும் தான். கழுத்தில் ஸ்படிக மாலை.
கம்போஸிங் நாள் தோறும் காலை ஏழு மணிக்கு தவராமல் நிகழ்த்தப் படும் சடங்காக மாறி விட்டது. ஒரு வித இளக்காரத்துடன் கதை கர்த்தாக்களை அனுகுவான். நாலு மெட்டுக்கள் கேட்காமல் விழும்.
அவன் அறிந்திருந்தான். இசை, உயிராக, முனைப்பில்லாமல், அர்த்தமில்லாமல் பிறந்து, வாழ்ந்து அவனுள் மடிந்து கொண்டிருந்தது. அக்கணங்களில் தேவராஜன் முடிவிலி முன் நிற்கும் சூன்யமாக தன்னை உணர்ந்து கொள்வான்.
இருந்தும், பலருக்கு அவன் ஞானி, மொஸார்ட்.
“அண்ணா. நேற்று ஒரு சின்னப் பையன் வந்தான்ல. மியுசிக் ஸ்கூல்ல படிச்சிருக்கானாம். நல்ல ஞானம். குரலக் கேட்டு பிடிச்சுப் போய், வாய்ப்பு ஒன்னு தரலாம்னு வர சொன்னேன். ஆனா பையன் தோனினப் படி பாடறான். தேவ இல்லாத இடத்துல நீட்டி இறக்கி. அதிகப் பிரசங்கி. கண்டிச்சேன். அவனால அத தாங்க முடியல.
என்ன ஏதோ உசந்த இடத்துல வைச்சிருந்ததாவும், நான் பன்னக் காரியத்தால எல்லாம் போய்விட்டதுனு நேத்து ராத்திரி வீட்டு முன்னாடி கத்திவிட்டுப் போனான்.”
“நீ பன்னது சரி இல்ல தேவராஜா. முதல் பாட்டில நீ என்ன எதிர் பார்க்க முடியும்? காட்டாறு மாதிரி சேறு சகதியோட தான் வரும். நாம தான் பக்குவப்படுத்தனும்.”
பாலு, கம்போஸிங் கண்டக்டர். தேவராஜிடம் நெருக்கமாகப் பேசக் கூடிய சிலரில் ஒருவன். அந்நாளுக்கான கம்போஸிங் நோட்களை புரட்டிக் கொண்டிருந்தான்.
“அப்படி இல்ல அண்ணா. எனக்கும் தெரியும். இங்க பாடி பாடி ஓய வெச்சவன்லாம் இன்னைக்கு ஆடுற ஆட்டத்தப் பார்க்கனும். எத்தன படத்த தூக்கி நிருத்திருப்போம். எவ்வளவு குனி குனிஞ்சிருப்பானுங்க.
என்னம்மோ அந்தப் பையனப் பார்த்தவுடனே பிடிச்சு போச்சு. அவ்வளவு நம்பறான் அவனுக்கு இசை தெரியும்னு. இவ்வளவு வருஷம் கடந்தும், எனக்கு ஒரு நாள் கூட அந்த நம்பிக்கை வரல. அன்னாடம் நாமப் பார்க்கிற ஜால்ரா கூட்டம் மாதிரி இல்லாம, முகத்துக்கு நேராப் பேசறான். அதுவே பெரிய விஷயமா தோனுது.
அவன் உருவம் அப்படியே கண்ணுல இருக்கு. பையன் உடம்புக்கும் மீசைக்கும் சம்மந்தமே இல்ல. அத முருக்கி விட்டு நெஞ்ச நிமிர்த்தி சிகரெட்ட வாய்ல வைச்சுட்டு கேட் முன்னாடி கத்தினான் பாருங்க. கோபமே வரல”
தேவராஜன் அமைதியானான்.
“ஒரு வார்த்த சொன்னான். உன் இசைத் தவிர உலகத்துல எதுவுமே இல்லனு மிதப்புல இருக்க. இத்தன வருஷம் உன் இசை உன்ன நம்ப வச்சு கழுத்தருத்திடுச்சு.”
பாலு, அடையாளத்தில் தேவராஜனின் பிரதி. உயரம் மட்டும் சிறிது அதிகம். புரட்டிக் கொண்டிருந்த நோட்களை ஒதுக்கி விட்டு தேவராஜனின் பக்கம் திரும்பினான்.
“உண்ம தான் இல்ல அண்ணா. எனக்கு என் இசை தவிற ஒன்னுமே தெரியாது. பல காலம் தவிச்சிருக்கேன். இந்த இசை என்னுடையதுன்னு ஒரு சின்ன உரிமைக் கூட கொண்டாட முடியாது. உங்கள போலத்தான், இசை எனக்குள் நிகழும் போது வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். என்னால் உருதியாக சொல்ல முடியும். என் இசைக்கு நான் உரிமையாளன் இல்லை.”
“என்ன தேவா. அப்படினாலும், எல்லாரைக் காட்டிலும் உன்னால இசையை இன்னும் நெருக்கமா…”
“இல்ல அண்ணா. அவனோடப் போலாம்னு இருக்கேன். அவன் நம்பும் இசையை தெரிஞ்சிக்கப் போறேன். ”
அந்த நாளுக்கானக் கம்போஸிங் முடிந்த பின் ஸ்டூடியோ படிக்கட்டுகளில் இறங்கி வந்த தேவராஜனை எதிர் கொண்ட உதவி இயக்குனன் ஒருவன், படிக்கட்டின் ஓரத்திற்கு ஒதுங்கினான். தேவராஜன் படி இறங்கும் வரை அவன் தன் தலையைத் தூக்குவதாக இல்லை.
தேவராஜனுக்கு மரியாதைகள் அத்தனையும் புளித்தாகிவிட்டது. ஒதுங்கியவனை அரையலாம் என்று தோன்றியது.
அவன் தேவராஜனுக்காக நெடு நேரமாகக் காத்திருப்பது தெரிந்தது. தேவராஜன் வந்தவுடன் இருவரும் காரில் ஏறிக் கொண்டான்.
“எங்க போனும்? சொல்லு.”
அவன் எதையும் சொல்லவோ கேட்கவோ விரும்பவில்லை.
சென்னையைக் கடந்து இருபது மைல் தூரத்தில் கார் நின்றது.
ஒற்றை மலை. அடிவாரத்தில் அடர்த்தியான காடும், செம்மண் புழுதியும். ஒற்றைக் கோர்வையாகப் போடப்பட்ட படிக்கட்டுகள்.
அரை தூரத்தில், ஒரு திருப்பத்தின் முனையில், பாதையுடன் ஒட்டிக் கிடந்த அவன் வேண்டிய குகையின் வாயில் தெரிந்தது. குகை வௌவால்களின் கூடாரமாக மாறியிருப்பதை நெடியால் உணர முடிந்தது.
லிங்கம் அற்ற கர்ப துவாரம். மங்கோலிய உருவங்களுடன் துவார பாலகர்கள். சுர சுரப்பான குளிர்ந்த தரை. சுவர் முழுவதும் பொறிக்கப்பட்ட டட்சு எழுத்துக்கள். இவ்வகைப் பல்லவ குகைகள் பெரும்பாலும் காலத்தின் விசித்திரமானக் குரல்களாகக் காணக் கிடைக்கின்றன. பல்லவ கிரந்தம், வட்டெழுத்து, டட்சு என கால வெள்ளம் ஒதுக்கிய கற்களாக.
அவன் அவ்விடத்துடன் மிகவும் பழகியவன் போல, அனாயாசமாக குகைக்குள் நுழைந்து, கால்களை நீட்டி, கைகளால் முதுகை வளைவாகத் தாங்கி குகைக்குள் தன்னைப் பரப்பிக் கொண்டமர்ந்தான். குகையின் சாளரங்கள் வழி தெரியும் வானத்தைப் பார்த்தப் படி, நொடிக்கு ஒரு முறை எதையோ தன்னுள் முனகத் தொடங்கினான்.
தேவராஜனும் அவனைப் பார்த்தப்படி குகையின் வாயிலின் முன் அமர்ந்து கொண்டான்.
மௌனம் கலைந்து, குகை தன் நாவை அசைத்தது போல், அவ்வொலி வாயிலை அடைந்தது.
சிறிது நேரத்தில், குகை முழுதையும் அப்பேர் ஒலி ஆக்கரிமித்துக் கொள்ளத் தொடங்கியது. நிலவேறி, ஒளியில் மலையின் தாவரங்கள் பொலியத் தொடங்கின.
ஒலியின் பின், அவ்வொலியை சுமப்பவன் போல், வீணை ஒன்றை லாவகமாக ஏந்தி குகையின் வாயிலை அடைந்தான் அவன். சடங்காக இடையில் கந்தலை உடுத்திக் கொண்டு, கால்களை சம்மனமிட்டு, வீணையை மடியில் கிடத்தினான்.
நிலவு அரை வட்டமாக, பெண் துயில்வது போல, வானில் மிதந்து கொண்டு அவனை மயக்கத்தில் ஆழ்த்தியது.
வீணையை மீட்டி, இசைக்கத் தொடங்கினான்
அவன் தேவராஜனின் இருப்பை சிறிதும் பொருட்படுத்துவில்லை.
இசை பிரவாகமாக எழுந்தது. தன்னுள் கூடிக் கொண்டு, அலையாக, சுழன்று, தேவராஜனைக் கடந்து வெட்ட வானில் கலந்தது.
தேவராஜனால் அவ்விசையை எதனோடும் பொருத்திப் பார்க்க முடியவில்லை. தன்னை மறந்து விம்மத் தொடங்கினான். அவன் முன் அமர்ந்திருந்தவன் பித்தனாக இசைத்துக் கொண்டிருந்தான். அவ்விசைக்கு பெரிய பொருளோ, இலக்கணமோ இல்லை. ஆனால், சுய சிருஷ்டியாகக் கொண்டாட அத்தனை தகுதியும் அதில் பொருந்தியிருந்தது.
அக்கணம் ஏனோ, வைத்தியநாத அய்யர் தேவராஜனின் நினைவில் எழுந்தார்.
அவன் வீணையை உதறி நகர்ந்தான். பித்தேறியவனாக, குகையின் இருளின் மறைந்தான்.
“உண்மையிலேயே என் இசை என்னை ஏமாத்திடுச்சு பா. மன்னிச்சிடு.”
இருளில் மோஸார்ட் என்ற தேவராஜன் அந்த அன்னியனின் காலில் விழுந்தெழுந்தான். இத்தனை நாள் கரைப் படாத வெள்ளை வேட்டியில் மண் புழுதி முதல் முறையாகப் படிந்தது.
தேவராஜன் அகன்ற பின், அவன் வீணையை அணைத்துக் கொண்டு படிச்சுவற்றில் சாய்ந்தான். பெண்ணை அணைத்துக் கொள்வது போல் வீணையை அணைத்து உறங்கத் தொடங்கினான்.
இந்நிகழ்வின் பின், பல முறை அம்மலையில் இரவின் ஏகாந்தத்தில் வீணையின் நாதம் ஒலிப்பதாக, அத்திசையைக் கடந்த பலர் சொல்லி வைத்தனர்.
சில நாட்களுக்குப் பின், அவ்வொலியும் அடங்கியது. மலை எதுவும் நிகழாதது போல், கள்ளத்தனமாக நின்றது. என்றும் போல், பிறை நிலவு, ஆளற்ற அக்குகையை தன்னிச்சையாக ஒளியூட்டிக் கொண்டிருந்தது.
– ஆர். கே. ஜி.