ஸ்டூடியோ டிரீம்ஸ் – 1

ஸ்டூடியோ டிரீம்ஸ்

jazz-painting-best-of-debra-hurd-original-paintings-and-jazz-art-django-of-jazz-painting.jpg
டேவிட் ஹர்டின் ஓவியம் (David Hurd) 

தேவராஜ் இன்று தமிழ் திரை இசையில் உச்ச நட்சத்திரம். கருப்பு வெள்ளை காலம் தொடங்கி, நாற்பது வருடங்கள். இருண்ட ஸ்டூடியோக்களின் ஒலிகளில் வெளிச்சத்தைக் கண்டு கொண்டான்.

தேவராஜ் அக்காலங்களில் பலரின் கிண்டலுக்கு ஆளாகியிருந்தான். தந்தையுடன் எல்லா இசை அமர்விலும் உடன் இருப்பான். பார்ப்பதற்கு பதினைந்து வயதுள்ளவன் போல் காட்சி அளித்தாலும், அவ்வயதிற்கான எந்த உத்வேகமும் அவனிடமில்லை. அதிகம் பேச விரும்பாத, ஒற்றைக்கால் சஞ்சாரி.

அவன் தந்தை வைத்தியநாத அய்யரின் சவுண்ட் இஞ்சினியர். இசை அமைப்புகள் தொடங்கியவுடன், அவனை ஓரம் கட்டி வெளியேற்றிவிடுவார்கள். இசைப் பதிவுகளை , ஸ்டுடியோ கண்ணாடிகளின் வழி அமைதியாகப் பார்த்து கொண்டு ஜடமாக நிற்பான். கண்ணாடியின் பின் பாவைகளாக, ஸ்டூடியோ மனிதர்கள், நாடகங்களை நிகழ்த்தினர்.

“எவ்வளவு ஜீவனோட எழுதிருக்கேன். ஏன்டா வெறுந்தரையில கல்ல தேக்கர மாதிரி எழவு கொட்டுறீங்க. முண்டங்களா. தலை எழுத்து. கருமாந்திரம்.”

நிந்தைகளை சுவரம் பிசகாமல் வைத்தியநாத அய்யர் கொட்டுவார். வழுக்கைத் தலையில் அவர் பட்டையாக இழுத்த திருநீறு, காயாமல், ஏ.சி. ஸ்டூடியோவை ஒரு நிலையில் வைத்திருக்கும்.

ஏதாவது பிடித்து விட்டால், “கடன்காரன். அழ வச்சுடுவான் போல இருக்கு.”

அதிகம் சாஸ்திரிய இசை தான் பிடிக்கும். வரும். துரத்தல் காட்சிகளோ, செண்டிமெண்ட்டோ கணக்கே இல்லை. படத்திற்கு இரண்டு தோடி, இரண்டு கல்யாணி. 

வைத்தயநாதரின் இசை காலாவதி ஆகிக் கொண்டிருந்த காலம். படங்களைக் கணக்காக முடித்து, சொந்த ஊரான மன்னார்குடியில் ஓய்ந்து விட்டார்.

விசுவாசத்தால், மரியாதை நிமித்தமாக மன்னார்குடி வரை சென்று, சலாம் போடலாம் என மியூசிக் யூனியன் சார்பாக சிலர் கிளம்பினர். தந்தையுடன் தேவராஜனும் சென்றான்.

மன்னார்குடி  கோவிலின் வாசலில் பஸ் நின்றது.  வீடு வரை செல்லாமல், நேராக வைத்தியை கோவிலில் வைத்து பார்த்து விடுவது என முடிவு செய்திருந்தனர்.

பெரிய கோபுரம் கடந்து, குதிரை மண்டபம் அடைந்தனர். மெலிந்த தோற்றத்துடன், வைத்தியநாத அய்யர் மண்டபத்தின் கொடுங்கையின் நிழலில் அமர்ந்திருந்தார். நெற்றியில் திருநீறு அவர்கள் அறிந்த அதே தேசுடன் பொலிந்தது.

“ஸார். வணக்கம்.”

“அடடே வாங்க வாங்க. என்னப்பா நீங்க. ஏன் இவ்வள்வு தூரம். அதான் நம்மக் கணக்குலான்தான் தீர்த்தாச்சேப் பா.””

“என்ன ஸார் இப்படி சொல்றீங்க. உங்களை மறக்க முடியுமா?”

“கஷ்டம் தான். அவ்வளவு படுத்திருக்கேன்னு சொல்லுங்க.”

தேவராஜின் தந்தை முதற்கொண்டு வந்திருந்த பலரும் அசடு வழிந்து சிரித்தனர்.

“எப்படி ஸார் காலம் போறது. கஷ்டமாயில்லையா?”

பிளூட் ரவி குரலைக் கட்டிக் கொண்டு இறுக்கமாகக் கேட்டான்.

“மாமி இருக்காடா. அவள சமாளிக்கவே நேரம் சரியா இருக்கு. மிச்ச நேரத்துல கோவில், குளம்.

என்ன விசேஷம் உங்க பக்கம்?”

“அதே கத தான் ஸார். அதே ஸ்டூடியோ காபி. அதே ஒன்பதுலேந்து இரண்டு அட்டவணை. ஒன்னும் மாறல. ஆனா ஸார். உண்மைய சொல்லனும்னா உங்க இடம் அப்படியே இருக்கு. யாராலும் நிரப்ப முடியல.”

ரவியின் குரல் தழுதழுத்தது.

”ரவி, உலகத்துல நிரப்ப முடியாத இடம் எல்லாம் உலகத்துக்கு பாரம் தான். இசை எல்லா இடத்திலையும் சேரக் கூடியது. ஒரு இடம்னு தனியா அதுக்கு கிடையாது. தொடக்கம் கிடையாது. முடிவும் கிடையாது. சின்ன வட்டத்துல சுருக்காத ப்ளீஸ். ”

இத்தனை நிதானமாக, தத்துவமாகப் பேசக் கூடிய வைத்தியை அவர்கள் இதற்கு முன் அறிந்திருக்கவில்லை.

“நாங்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவு பண்ணிருக்கோம். எங்க பசங்க எல்லாரையும் உங்க கிட்ட பாலப் பாடத்திற்கு அனுப்பலாம்னு. ”

“சினிமாக்காரனுக்கும் சாஸ்திரிய சங்கிதத்துக்கும் என்னய்யா சம்மந்தம்?”

“’ஸார் மன்னிக்கனும். உங்க முதல் ஸ்டுடெண்டை உங்களைக் கேட்காமல் கூடவே அழைச்சுட்டு வந்துட்டோம்.”

தேவராஜனை நோக்கிக் கைக்காட்டி ரவி அசடு வழிந்தான்.

வைத்தி தேவராஜனை தன் தீர்க்கமான கண்களால் வருடினார். அவன் கூச்சத்தால் தவித்தான்.

“நிச்சயம் இவன் மேதை. அடக்கமா இருக்கான்.”

வைத்தியின் முகம் சாந்தத்தில் தோய்ந்தது.

“என் கடைசிக் காலத்த அர்த்தத்தோட கழிக்கப் போறேன்னு நிம்மதியா இருக்கு.”

விஸ்வரூபத்திற்கு பசு ஒன்று மெத்தனமாக அவர்களைக் கடந்து, கருவறை நோக்கி சென்றது.

பட்டர் இன்னும் மெத்தனமாக, விசாலமான தொந்திக் குழி ஆட்டிக் கொண்டு அதன் பின் நடந்தார்.

– ஆர்.கே.ஜி.

Published by ராம் கார்த்திக் கணேசன்(Ram Karthik)

எழுத்தாளர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: