கிருஷ்ண தாண்டவம் – ஒற்றைக் கால் கலி 7

கிருஷ்ண தாண்டவம் 

மலைகளைப் போன்ற

திருக்குடாச்சல அமைப்பில்

சோம்நாத்புரா கோபுரங்கள்

காட்சி தந்தன

 

கோவிலின்

குளிர் தரைகள் 

நுழைந்தவுடன்

கால்களை இதமாக்கின

 

மூன்று திசையில்

கர்ப துவாரங்கள்

மூ மூர்த்தியாக

திருமால்

கேசவன் ஜனார்தனன் வேணுகோபாலன்

 

இடது புறம்

கேசவனாக 

கண்ணன் வேங்குழலுடன்

நின்றிருந்தான்

 

பருத்த கைகள்

மடங்கிய நிலையில்

வேங்குழல் ஏந்தி 

கால்கள் 

ஒன்றை ஒன்று பிணைந்து

உடல் சரிய

மெல்லிய இசையை

இருள் நிசப்திக்கும் கர்ப்ப துவாரத்தில் 

இசைத்துக் கொண்டிருந்தான்

 

ஒளியற்ற அக்கூடத்தில்

சஞ்சரிக்கும்

அவன் இசையே

ஒளியூட்டியது

Krsna.jpg
சென்னகேசவன், சோம்நாத்புரா, கர்நாடகா

ஹொய்சாலக் கலையின் நேர்த்திப் படி

சிற்பம் சுற்றி 

பல நிலைகளாக ஆனிரைகளும்

ஆயர்குடிப் பெண்களும்

சிற்பத்தில் வடிக்கப்பட்டிருந்தனர்

 

சன்னவீரம், பீதாம்பரம்

கண்டை, கழல்

குண்டலங்கள் பொன் கிரீடத்தோடு

இத்தனை வனப்பான

யௌவனக் 

கிருஷ்ணனை

எங்கும்

கண்டதாக நினைவு இல்லை

 

மரபு 

பேசிப் பேசிக் களித்த

துவாபர

கண்ணன்

கலியில் வளர்ந்து விட்டானோ

என்ற பிரமையே 

அச்சிறபம் தந்தது

 

மதம் ஆசாரம் நியமம்

சுயம் தத்துவம் ஞானம்

காஸ்மாஸ் இன்பினிடி குண்டலினி

என 

கர்ம மோட்ச விளையாட்டுகளில்

நினைத்த வழியெல்லாம்

தன்னை புனிதமாக்க எண்ணும்

மனித பாவனைகள் தூற்றி

போலி சாரங்களை

வெறுத்து

துறந்து 

நிகழ்வை ஒருவன்

பசுக்களோடு

இசையோடு 

சுற்றம்சூழப் பெண்களோடு

பித்தனாகக் களித்தான் 

எனில்

கண்ணனே கலியின் புருஷன்

அவன் தத்துவமே கலிக்கு

 

இப்படி

சிறிது நேரம்

கிருஷ்ண தாண்டவம்

என் சிந்தை ஆடியது

 

பாவனைகள் 

தர்மம் போல பாரமானது

அல்ல

கண்ணனின் 

இசைப் போல்

மெலிதானது 

நுண்மையானது

 

இருண்ட கர்ப துவாரத்தில் 

அதிகம் அலட்டாத அவன் இசை

என் செவியில் வீழ்ந்தது போல

இனி வரும் காலங்களிலும்

அனாதியாய்

சிலருக்கு ஒலித்து கொண்டு தான் இருக்கும்

 

கண்ணனின் சன்னதி விட்டு

தயக்கத்துடன்

வெளியேறினேன்

ஒன்றும் தெரியாத

என்னைப் போன்ற 

அற்ப கோஷ்டிகள்

அங்குமிங்கும்

நடமாடிக் கொண்டிருந்தனர்

 

எதையும் அறிய முனையாமல்

மரபு கலை தத்துவம் என 

எதிலும் ஒட்டாமல்

வெகுளியாகத்

தமக்குள் பேசி

புகைப்படம் எடுத்தனர்

 

அவர்களுக்கு பின்னால்

காலங்களை உறையச்

செய்த

மகத்தானக் கற்கள்

வாயை மூடிக் கொண்டு

அமைதியாக நின்றன

– ஆர். கே. ஜி.

Keshav_krishna 4.jpg
Painting by Keshav. Source (Newsminute)

Published by ராம் கார்த்திக் கணேசன்(Ram Karthik)

எழுத்தாளர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: