அன்பின் உக்கிரம்
தென் திசை நோக்கி
தரையில்
உடம்பைக் கிடத்தியிருந்தார்கள்
நன்கு படிந்த தலை
கன்னத்தோடு ஒட்டிய முகம்
முருக்கி விட்ட மீசை
காதில் பொந்தாக
வளர்ந்த மயிர்
காக்கி நிற சட்டை
வெள்ளை வேட்டி
ஆண் என்ற அழகியல்
வர்ணனைகளுக்கு சிறிதும் குறையிலாமல்
உறங்கிக் கொண்டிருந்த
கலி புத்திரனை
கண் கொட்டாமல் பார்த்தனர்
வந்து போனவர்
மகன் துடிப்பாக
வந்தவர்களை
பூத உடலின் அருகில்
அழைத்து சென்று
மரியாதை செலுத்த வழி செய்தான்
“அந்த கால மனுஷன் பா உங்கப்பா
அப்படி வாழ்வதெல்லாம் ரொம்ப சிரமம்
உனக்கு தெரிய வாய்ப்பில்லை
என் பெயர் சாக்கேதராமன்
தமிழ், அவ்வளவு இஷ்டம் எனக்கு
உன் அப்பனுக்கு சொல்லவே வேண்டாம்
உயிர விடுவான்
என் நியாபகம் சரின்னா
1975ல இரண்டு பேரும்
பெரம்பூர் லேந்து திருவள்ளூர் வரை
இரயில்ல பிராயணிப்போம்
அப்படி தான் சிநேகிதம் அமைஞ்சது
இரயில் சிநேகிதம் கடந்து
வெளியில்
ஒரு முறைக் கூட பார்த்தது கிடையாது
நூறு விவரம் தெரிஞ்சாலும்
அலட்டிக்க மாட்டான்
எழுதுவான்னு தெரியும்
ஆனால் இவ்வளவு பெரிய எழுத்தாளன்
ஆவான்னு நினைச்சுக் கூடப் பார்க்கல”
சாக்கேத்
சவமாக உறங்கிக் கொண்டிருந்த
நண்பனின்
தீர்கமானக் கண்களை ஒரு முறை பார்த்தான்
“ஆசைகளே கிடையாது பா அவனுக்கு
அவன் விரும்பியதெல்லாம் எழுச்சி
தன் இனத்தோட வரலாற்ற,
மொழி, இலக்கியம் எல்லாம்
மக்கள் முன்னால உரக்க பேசனும்.
அவங்க உணரனும்
சதா இந்த சிந்தை தான் அவனுக்கு.
காலம் பூராவும்
இதை மட்டுமே
பேசி பேசி நாக்க குழைச்சான்”
சாக்கேத் சொல்வது கேட்டு
மகனுக்கு ஏதோ நெருடலானது
“எல்லாம் மாறனும்
எல்லாரையும் மாற்றனும்
இப்படி சொல்லிட்டு
ஆசை துளி கூட இல்லைனு
வெட்கம் இல்லாம சொல்றீங்க?
எளிமையானவன் என்கிற
பிரமை பாவனை வக்கிரம்
அந்த எளிமையால
பல நூறு
அரக்கனோடு தலைய
வெட்டி எறியனும் என்கிற
ஆத்திரத்தின்
மூடி தான்
உங்களுக்கு
யோக்கியமா இருந்தா
கிடைக்கக் கூடிய பரிசு என்ன தெரியுமா?
அதிக பட்சம் என்னைக்கோ இரயில்ல பார்த்தவன்
நாமப் பேசினத நம்பிக்கிட்டு
சவமா கிடக்கிறப்போ
சலாம் அடிச்சுட்டு போவான்
அவ்வளவு தான்”
நிலைமை சரி இல்லை
என்பதை உணர்ந்து
அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்
கலி புத்திரனின் சொற்களால்
அவன் பிரதியாக நின்றான்
சாக்கேத்
மடங்கியிருந்த குடையை விரித்து
தெருவை நோக்கி நடந்தான்
சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த
போஸ்டர் வாக்கியங்கள்
அவன் சொன்னதோடு பொருந்தின
“சத்யனுக்கு அஞ்சலி”
வாய்ப்பால்
விசையால்
உயிரான ஜடங்களுக்கு
கொள்கைகளின்
அடையாளங்களின் பாரத்தை
சுமக்க வக்கில்லை
எனக் கடிந்து கொண்டு
அவ்விடம் அகன்றான்
அக்கணம்
நிசப்தத்தின் மத்தியில்
தன்னுள் முனகிக் கொண்டிருந்த
சனங்களைக் கடந்து
புறச்சேரி ஈ ஒன்று
தன் சிவந்த கண்களுடன்
வரிசைப் பாராமல்
சத்யனின் அகம் நுழைந்தது
மொழி, இனம் என கணக்கிலா பாவனைகளுக்கு
மெலிந்து நிமிர்ந்திருந்த
கலி புத்திரனின் விலா எலும்புகளில்
ஒன்றொன்றாக
கால் பதித்து ஏறி
தன் இறக்கைக் கரங்களால்
அவனைத் தடவிக் கொடுத்தது
அன்பின் உக்கிரம்
தாள முடியாமல்
கூட்டத்தில்
எவனோ ஒருவன்
ஓலமிட்டழுதான்
– ஆர். கே. ஜி.