உபநகரம்
மிதந்து வரும் காகிதங்கள்
வானம் தொட்டு நிற்கும்
வெண் நிறம் பூசிய
உப நகரங்களின் புறத்தில்,
குப்பை மேடுகளையும்
தென்னைகளையும்
மங்கிப் போனத் தன் ஈர உடம்பில்
சராசரி மக்கள் உருவகிக்கும்
அழகின் வக்கிரத்தை
எழுத்தாக்கி
ஒட்டவும் வலு இல்லாமல்
மந்தமாக மிதக்கின்றன
கடலில்;
கலியில்
தன்னுள்ளே அழுந்திக் கொண்டு
கொப்பளிக்கும் அலைகள் போல
உபநகரங்கள் கரைகள் கடந்து
திசையற்று விரிகின்றன
நாலாப் புறத்திலும்
உபநகரங்கள்
குப்பைகளை
ரப்பர் கால்களால் உராசி
காலை சூரியன் இதமாக சுட
ஜீவனற்ற ஏதோ ஒரு பாட்டுடன்
நடக்கும்
நடைப்பயண மாந்தரின்
அந்தப் புறங்கள்;
பொதிமாடுகளாக மனிசரை ஏற்றி வரும்
ஆட்டோ ரிக்ஷாக்கள்
ஒரு கிலோமீட்டர் தொலைவில்
சுங்கச் சாவடி
சாலையெங்கும்
நீண்ட வரிசைகளாக நிற்கும்
ஆமை டிரெயிலர்கள்
பின் புறம்
ஆள் அரவம் அற்று
வெயில் பட
அனாதியாய் நிற்கும்
ஒற்றைச் சிலுவை
நட்ட மலைகள்
அடுக்குமாடிகள்
பின்புறத்தில்
மௌனமாக
அர்த்தமற்று
விழுந்தெழுந்துக் கொண்டிருக்கும்
கடல்
இவை போக,
கடலை ஒட்டி செல்லும் சாலை
கவிதையாக
நீலக் கடற்கரை சாலை
என்னும் பெயருடன் நிற்கும்
உபநகரம்;
…………………………………………………………………………………………….
கடல் ஒட்டிய
கபே ஒன்றில்
மூங்கில் நிழல் தடவ
அமர்ந்திருந்த ஒருவன்
தன் முடி சுருட்டி
அசைப்போட்டான்
கலி காலத்தில்
சிலந்தியின் உமிழாக
சுழற்சியின் பின்னலாக
எச்சில் நகரங்கள் நீளும்
நகர்ந்து நகர்ந்து
இன்னமொரு நகரைத் தொடும்
எனத்
தன்னுள் எரிந்து கொண்டான்
இன்னொருவன்
பதினான்காவது தளத்தில்
பிரெஞ்சு ஜன்னல்களை திரையிட்டு
பொழுது விடிந்ததும் தெரியாது
அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தான்;
காகங்கள் மட்டும் சுறுசுறுப்பாக
அங்கங்கே
நினைத்தப் படி எச்சம் இட்டு
சிதறி இருந்த மூங்கில் இழைகளில்
கால்களைப் பொதித்து
குதூகலமாக காலையை
தன் சுற்றத்தாருடன் வரவேற்று
கரைந்துக் கொண்டிருந்தன
̀
கலியோ
எதிலும் தொடர்பிலாது
கரையில்
சம தளம் பார்த்து
யோகா மேட் விரித்து
ஒற்றைக் காலில் நின்று
சூரிய வந்தனத்திற்கு
கைக்குவித்தது!
– ஆர். கே. ஜீ
https://rkg.net.in/2019/01/15/கலியின்-அந்திம-காலம்-ஒற்/
https://rkg.net.in/2018/12/25/ஒற்றைக்-கால்-கலி-3/