இருளின் உன்னதம்
இருளிலிருந்து ஒளி நோக்கி நகரவே தத்துவங்கள் நம்மிடையேப் பேசுகின்றன.
சாதாராணமாக வசீகரத் தோற்றம் கொண்ட ஒரு பொருளை “தேசுவா இருக்கு” என சொல்கிறோம். ஒளியின் தன்மை இத்தகையது. ஆற்றலின் அளவாய், உண்மையை நோக்கி நகர்த்தும் சாரதியாகவே ஒளி திகழ்கிறது .
எதிர்மறையாக, ஒளியின் சலன முகத்தை, கனவு விந்தையாக எழுப்பும் வெளிச்சப் பாய்ச்சலில் உணரலாம். நுண்மையாக, மனதின் வழி பல மாயா உலகங்களை சிருஷ்டி செய்யக் கூடியது ஒளி.
இவ்வாறு அக – புற உலகின் இருப்பை ஒளிகளே கோர்க்கின்றன.
உண்மையில், சிருஷ்டி போன்ற இயற்கையின் பேர் இயக்க செயல்களில் கூட ஒளி இரண்டாம் பட்சமாகவே தோன்றுகிறது. பேரிருள் பின் சப்தமும், அதன் பின் வெளியும், காற்றும், புனலும், பின்னே ஒளி எழுந்ததாகவே அறிகிறோம்.
தத்துவம் சொல்ல விரும்பாத, சூட்சமமாக வைத்த இருளின் நிழல் தான் ஒளி.
The Treasures of Satan என்ற Jean Delville ஓவியம், ஒளியின் வெள்ளத்தில் மாயையின் அத்தனை சலனங்களும் மிதப்பது போன்ற பிரமையை சித்தரிக்கின்றது.
திரண்ட மார்பகங்களில், தன் நிலை மறந்து லயிக்கும் அம்மனிதன், ஒளியை சாத்தானின் செல்வமாக ஏதோ ஒரு கணத்தில் உணரத்தான் செய்வான்.
அக்கணம், ஒளி வழி நிகழும் இவ்வுலகம் கடந்து, இருள் என்னும் சுகக் காட்டில் ஞானமற்று திரிவான்.
இருள் என்னும் சுகக் காட்டில்…
யாதும் நிகழ்வே
அனுவும் அண்டமும்
யாவும்
நானும் அதுவும் இதுவும்
முடிந்தவை நிகழும், நிகழ்பவை எதிர் நோக்கும்
கிறுக்கியவைக் கிறுக்கும் இக்கிறுக்கனின் உலகில்
தெளிந்த மாந்தர் அடைவரோ ஓர் ஞானம்
பிறப்பவன் காண இறப்பவன் பிறக்க
காட்சிகள் விரியும் போக்கற்ற பிரமாண்டமாய்
“உன் தர்மம் இங்கு விஸ்வரூபங்களைக் காண்பதே
மரத்தில் அமர்ந்தப் பட்சிப் போல், மௌனமாய்
சாத்திரம் பல உலகினில்
அதில் ஏதோ ஒன்றைக் கற்றுத் தேர்வாய்
ஞானம் அலுப்பெனில் அதைக் கர்மத்தில் கடவாய்
கர்மம் அலுப்பெனில் ஞானத்தில் கடவாய்”
ஞானம் ஒளி
அஞ்ஞானம் இருள்
விழிப்பு, உறக்கம்
துயிலில் விழிப்பு
சாத்திரம் சொன்னவன் நின்றான் இதனுள்
ஞானம் ஒளியெனில் இருளில் நான் நகர்வேன்
இத்தனையும் நிர்வாணிக்கும் அப்பேரொளி எதற்கு
பேரோளியில் ஈசலாய் பேரானந்தத்தில் மாயாது
இருளெனும் சுகக் காட்டில் ஞானமற்று நான் திரிவேன்
– ஆர். கே. ஜி.