சிவந்த காவிகள் மழித்த தலைகள்
ஓதி ஓதி அமர்த்திய புத்தன்
ஆட எழுகிறான்
புகைகளின் ஊடே
பனிக் கடல் சரிவில்
காற்றில் நாணவும் கூசி
அனாதியாய் நிற்கும் மரங்களில்
பட்சியாய் அமர்ந்த புத்தன்
ஆட எழுகிறான்
ஆடாது நிற்கும்
அமைதி சமாதிகளில் லயிக்காது
ஆடி ஆடி
தழலாய் அனலாய்
எறிந்து மாய
ஆட எழுகிறான்
புத்தன் இனி அளவாய் சிரிக்க மாட்டான்
தலை சாயான்
கண்கள் அரை மூடி
பதுமாசனத்திலும் அமரான்
இனி அவன்
பனி மலைகளைப் பார்த்தப் படி
இஸ்ரேலி ஹூகா மண்டிகளில்
ஒய்யாரமாய் புகைத்துக் கொண்டு
ஆத்மா இல்லை
புத்தனும் இல்லை
என போதிக்கக் கூடும்
துடைத்ததெடுத்த அவன் பிக்ஷ பாத்திரம்
புகையும் இசையுமே
இனி ரட்சைகளாய் ஏற்கும்
உறையும் தியான பிரமைகள் விட்டு
தன் நிலையில்
இயல்பாய்
ஆனந்தமாய்
ஆடுவான் புத்தன்!!
ஆர் கே ஜி
Kasol , 26 ஏப்ரல், 2019