கதையின் நாயகன் நான். நாயகி … புவி என்னும் நில மங்கை. மடியில் வைத்து கொஞ்சும் வராகனாக என்னை நான் உணர்கிறேன். கால்களை என் தொடை மத்தியில் பரப்பி, அயர்ப்பின்றி ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறாள் என் நாயகி.
மனம் கொள்ளாத ஏகாந்தம்!
என்னை மீறி மனம் எதிர் விசையில் பாய்கிறது.
எவன் தலையிலாவது மிதித்து, எங்கும் பரவி அர்த்தமற்றுக் கிடக்கும் அண்ட கோடிகளை கனுக் காலில் அழுத்தி நிற்க வேண்டும். வையத்தை அளந்தவனாக, மூ உலகையும் கடந்து உயர வேட்கை. வெறி என்று சொன்னால் மிகையல்ல.
என் பெயர் வாமனன். பொடியன். ஆனால் வையம் அளந்தவன்.
என் முன் கங்கை ஓடிக் கொண்டிருக்கிறாள். பல நேரங்களில் நான் நிற்கும் இடத்திற்க்கும் கங்கைக்கும் ஆயிரம் மைல் இருக்கக்கூடும். எந்த நதியின் முன் நின்றாலும், கங்கை மட்டுமே காட்சித் தருவாள். நதிகளின் நாமத்தில் பொருள் ஒன்றும் இருப்பதாய் தெரியவில்லை எனக்கு. அசைவில் எல்லாம் ஒரே தினுசு தான்.
இன்று என் கால்கள் நிற்பது தட்சினேஸ்வரம். கல்கத்தாவின் புற நகர். பல காலங்கள் தட்சினேஸ்வர் காளியைக் காண வேண்டும் என்ற ஒன்றை மட்டுமே இலக்காக வைத்திருந்தேன். அத்தனை வசீகரமான, காளியின் உருவத்தை வேறெங்கும் கண்டதில்லை.
கோவில் மேட்டில் அமைந்திருந்தது. மாலை நேரம். ஒலிப்பெருக்கியின் வழி வங்காள மொழியில் ஏதோ பஜனை ஓடிக் கொண்டிருந்தது. கங்கையைக் கடந்த காற்று நிதானமாக எல்லோர் செவியிலும் சப்தத்தை பதறாமல் சேர்த்தது. மறுதிசை அடைந்தது. பெரும் சனக் கூட்டம் சேர்ந்த போதும், சூழல் அமைதியாகவே இருந்தது.
காட் படிகளில் சந்திக் கால சூரியனைப் பார்த்த படி அமர்ந்திருந்தேன். மனிதர்க்கும் நீருக்குமான உரையாடல் ஓர் மகத்தான விந்தைதான். அனைத்தையும் விட்டது போல் கங்கையில் முங்கி எழுந்தனர் மக்கள். நீர் சத்தியத்தின் சாட்சியாகத் தன் கைகளை தாரைப் பாத்திரமாக்கிக் கொடுத்தது.
இருப்பைப் பற்றிய குழப்பமும் ஆர்வமும் பலறைப் போல் என்னையும் துறத்தத் தொடங்கியது. வயது முப்பது. அதனால் இத்தகு சிந்தனைகள் இயல்பென்றே கருதிக் கொண்டேன். ஆங்காங்கே நறை வேறு வயதைக் கூடுதலாக எடுத்து காட்ட.
உடலைக் கூடாக்கி நிதானமாக உலகைப் பார்த்துவிட்டு பறந்து போகும் வேதப் பட்சியாக தான் முதலில் என்னை உருவகித்து கொண்டேன். இந்த நிலைப்பாட்டை ஏனோ உன்னதமாக்கி, என்னை நானே துறவு நிலையில் வியந்து கொண்டேன். இந்த நிலைப்பாடு சரிந்து, வாழ்வின் கணங்கள் ஒவ்வொன்றிலும் ஆழ்ந்து, வலியும் தோல்வியுடனும் கூடை விட்டுப் பறக்க விரும்பும் எதிர் மறைக்கு செல்ல சில காலங்களே ஆனது.
செவ்வண்ணம் பூசிய தட்சினேஸ்வர் கோபுரத்தின் கூம்புகளில் புறாக்கள் அமைதியாக அமர்ந்து இரவை எதிர் நோக்கிக் காத்திருந்தன. காலையில் பெய்த மழை எண்ணையின் வழுவழுப்பைத் தரைகளுக்குத் தந்தது. விளக்குகள் இருளில் மெல்ல நகைக்கத் தொடங்கின. சன வரிசை நீண்டுக் கொண்டே சென்றது.
கங்கை கண்ணை விட்டு மறையும் வரை உறைந்தவன் போல, காட் படிகளில் அமர்ந்திருந்தேன். இருள் முற்றிலும் வெளியைக் கவ்வ, துறையில் கட்டிய படகு ஒன்று, பெருத்த நதியின் மடியில் அசையாமல் காற்றை எதிர்த்துக் கொண்டிருந்தது.
சற்றும் பரிட்சயமற்ற கல்கத்தா நகரம் … தட்சினேஸ்வரம் … கங்கைக் கரை மாலை … இறுகக் கட்டியப் படகின் படிமம் இவை யாவும் என் நினைவின் தொகுப்பில் சேர்ந்துவிட்டன.
நிலங்களே கதைகள் எழுதப்படும் காகிதம். நடக்கும் கால்கள் பேனாக்கள். மனம் சர்வ காலம் வாசகனாக, நிலத்தில் எழுதப்படும் வாக்கியங்களைப் படித்து கொண்டே இருக்கிறது. நிலம் நிஜத்தின் பிரதி.
தட்சினேஸ்வரில் இருந்து புறப்பட முனைந்தேன். மெட்ரோ இரயிலின் பாலத்தின் கீழ் சன நெரிசலோடு நடக்கத் தொடங்கினேன்.
மொபைலில் செய்தி. ஹிரண்மயி.
“முக்கியமா ஒன்னு பேசனும். பேசலாமா??”
ஹிரண்மயியைக் காதலிக்கிறேன். அவளுக்கு என் மேல் அவ்வகை எண்ணங்கள் எதுவும் இல்லை. பன்னிரண்டு வருடங்களாக நிதானமாக இந்த உண்மையை முழுங்கிக் கொண்டிருக்கிறேன், கசப்புடன். அவள் எவனையோ மணம் செய்யப் போக, சடங்காக என்னை அழைக்கிறாள் என்று எண்ணிக் கொண்டேன்.
“விஷயத்த சொல்லு.”
மஞ்சள் நிற பீலா டாக்சியில் ஏறினேன். டிரைவர் ஒரு வழியாக பேரத்திற்கு தலை அசைத்தான். காரின் சன்னல்களை சாற்றி ஏ.சி.யைத் திருப்பினான். வாகன நெரிசல், கல்கத்தாவை வெறுக்க எளிமையாக
வழி செய்தது.
“நீ இன்னும் என்ன அப்படி தான் பார்க்கிகறியா? காதல்?”
“ஒன்னும் மாறல. அதே தான்.”
“அப்போ அடுத்து என்ன பண்ணலாம்னு சொல்லு…”
“வேறென்ன … வீட்ல பேசறேன். கல்யாணம் பண்ணிக்கலாம்.”
ஜம்பமாகப் பேசி முடித்தவுடன் தான் அவள் என்னை ஏற்றுக் கொண்டுவிட்டாள் என்பது விளங்கியது. புரிந்த கணம், மனம் ஆனந்தத்தில் தினறியது, மூச்சிறைக்கும் அளவிற்கு.
சன்னலைத் திறந்தேன். ஓட்டுனன் காதில் செவிப்பொறியுடன், எதிலும் தொடர்பிலாமல் புகையிலையைக் குதப்பிக் கொண்டிருந்தான்.
குதிப்பதற்கு இடமில்லை. அமைதியமாக தூரத்தில் மிணுங்கும் கட்டிட வெளிச்சங்களில் மனதை செலுத்தினேன்.
குதூகலமாக fuck fuck fuck என்று எனக்குள் கத்தினேன்.
கணக்கிலா நிலங்களை என் கால்கள் கடந்து விட்டன. நிலையில்லாமல் நடந்து கொண்டே இருப்பது தான் எத்தனைப் பெரிய தண்டனை என இக்கணம் உணர்கிறேன் .
சிறுக்கி ஒரு நிமிஷம் எல்லாத்தையும் நிறுத்திட்டால.
ஹிரண்மயி!
My baby
My பிராட்டி
My இலக்குமி!
Kisses from வையம் அளந்தான்.
Your வாமனன்.
– தொடரும்.
ஆர். கே. ஜி