கலியின் அந்திம காலம்
எல்லையிலா கரை மணல்
தூசிப் படலம் பனிப் போர்வையாய்
கடல் தன் கைகளில் செஞ்சுடர் ஏந்தி
ஊழிக் கூத்தாடிக் கொண்டிருந்தது
எதிலும் சம்மந்தமிலாது
கரையில் ஒரு கல்
இறுக்கமாய் உருண்டு திரண்டு
அருவங்கள்
காற்றை நாவாய் கொண்டு
தம்முள் பேசிக் கொண்டன
ஊழி தொறும்
கடல் தன் கைக் கொண்டு
இப்படி ஒரு கல்லை சேர்க்கும் என
ஆக்கம், அழிவு
எவ்விதப் பிரக்ஞையும் இல்லாமல்
கல் குழவிப் போல் கரையில் உறங்கியது
அருவங்கள் குதூகலித்தன
ஓர் அருவம்
அக்கல்லே கலியின் சாரம் என்றும
கலி நம்மோடு பேச நினைத்த அல்லது
சேர்க்க நினைத்த சொல் என்றும்
அதன் வழி கலியின் காட்சிகளைக்
காணக் கூடும் என ஊகித்தது
மற்றொன்று
இக் கல் சொல்வதே மகத்தான தர்மம்
காலங்களின் பிடியில் சிக்காத அச்சொல்லை
அட்சரம் அட்சரமாய்
மந்திரமாக்கி பழகுதல் வேண்டும்
என சுற்றத்துக்கு ஆணையிட்டது
மற்றொன்று
அச்சொல்லை விலக்குதலே பகுத்தறிவு என்றும்
காலம் கடந்து வரும் சொற்கள் தேவையில்லை எனவும்
திண்ணமாய் நம்பியது
நமட்டலும் செய்தது
அருவங்கள் கல்லினை
நாகங்கள் புணர்வது போல் புணர்ந்தன
அலட்டாமல் அமைதி காத்தக் கல்லை
அருவங்கள் அரைந்தன, முத்தமிட்டன
இனிக்கப் பேசியும், கடிந்தும்
அதன் சேதி கேட்கத் துடித்தன
கல் அசையாது பேசாது
கல்லாய் கிடந்தது
சலிப்பில் அருவங்கள் வான் ஏறின
பிரபஞ்ச சாட்சி
அசரிரீயாய் பேசத் தொடங்க
அருவங்கள் அமைதி காத்தன
கலியில் ஒருவன்
கொள்கைகளை நம்பி
அனாதையாய் உலாவினான் என்றும்
அந்திம காலங்களில்
அவன் அந்நாள் வரை உதிர்த்த சொல் யாவும்
தன் முன் கல்லாகிக் கொண்டிருக்க
கோபத்தில்,
அச்சொற்களை கடலில் எறிந்தான் என்றும்
பின் பித்தனாக ஓம் ஓம் என்று கோஷித்தான் என்றும்
இறுதியில் கரையில் நீர் இன்றி
தோல் மெலிந்து
எலும்பாகி மடிந்தான் என்றும்
அருவங்கள் வேண்டிய வாசகங்களை அளித்தது
காலம் காலமாய்
தனிமையின் உறைதலை
மௌனத்தை மட்டுமே
கற்களின் வழி நாம் அறிகிறோம்
பிரபஞ்ச சாட்சி முடிக்க
அருவங்கள் கை கூப்பி வணங்கின
காலம் செல்ல செல்ல
அக்கல் மண்ணில் புதையுண்டு
அடையாளமின்றி போனது
வானம் வெளுத்து
தூசிப் படலங்கள் படிய
நீலக் கடல் சிரித்தது
அக்கணம்,
சிருஷ்டியின் கீதத்தை
இரக்கமற்ற ஒருவன்
பாடத் தொடங்கினான்!
– ஆர். கே. ஜீ
https://rkg.net.in/2018/12/25/ஒற்றைக்-கால்-கலி-3/
One thought on “கலியின் அந்திம காலம் – ஒற்றைக்கால் கலி 4”