கலியின் முகம்
அலைகள் கரை அடையும் முன்
கைகளை மடக்கிக் கொள்வது போல்
லஜ்ஜை ஹாஸ்யம்
ரௌத்திரம் கனிவு
உணர்ச்சிகள்
பாதை தொலைத்த வழிப்போக்கர்களாக
ஊர் முற்றத்தில்
சுதை ஆனையாய், மீசை சாமியாய் ஆங்காங்கே நிற்கின்றனர்
நுழையவும் முடியாமல்
ஊரைக் கடக்கவும் முடியாமல்.
கலி என் தந்தை
அவன் சாயலில் நான்.
“அந்த காலத்தில் அப்படி இல்லை
எல்லாம் கலியின் ஆட்டம்”
இச் சொற்களைக் கேட்டாலே
அளவிலா கோபமும், இயலாமையும், வெறுமையும்
என்னை அறியாமல் என்னுள் புகும்.
இவர்கள் இச்சொல்லின் வழி சேர்ப்பது நெல்லாடும் வயல்;
மாலை பொழுது
நெல்லின் ஈரம், மென் நாற்றம்
சதுப்பில் குருகுகள்
நாணத்துடன் வயலில் விழும் தென்னையின் நிழல்
வானத்தில் வழுக்கி மறையும் சூரியன்
இவை
நானாய் சேர்த்துக் கொள்வது.
எனக்கு அந்த காலம் என்றாலே
பசும் சித்திரம் தான்.
நான் கலியின் குழந்தை
ஆதலால்
ரௌத்திரம் சரியாய் பழகவில்லை
மீசை சாமியாக
அரை குறை கோபத்துடன்
எல்லையில் பல முறை நின்றிருக்கிறேன்.
என் முன் உள்ள காலம்
தக்கனின் யாகம் போல
வெறுக்கத் தக்க வகையில்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
தேவர்களின் உதவியுடன்.
வெகுண்டு
நானும் சிவனாகி
கண்களைக் கூராக்கி
அசுரப் பற்களை வாயின் இரு புறமும் வரைந்து கொண்டு
திமிரும் தோள்களுடன்
கையில் வாளும் வில்லும் கேடயமும் ஏந்தி
கலியின் கழுத்தில்
வாளை சுழற்றுவேன்
முண்டமாக்கி
அவன் முன் மீசை முறுக்கி நிற்பேன்
வீரபத்திரனாக!
உணர்ச்சிகள் அவை வேண்டிய வீடடைந்தன
முழுமையான ரௌத்திரம்
கலியில் பயின்றுள்ளேன்
கலியை வீழ்த்த!
என் முன்
சுதைகள் உயிர்த்தெழுகின்றன.
மீசை சாமி யானையில் ஏறி
குழந்தையின் குதூகலத்துடன் சிரிக்கிறான்!
– ஆர். கே. ஜீ.
https://rkg.net.in/2018/12/17/ஒற்றைக்-கால்-கலி-2/
https://rkg.net.in/2018/08/20/ஒற்றை-கால்-கலி-1/
குறிப்பு:
கலியுகத்தில் தர்மம் என்கிற பசு, ஒற்றைக் காலுடன் நிற்கும் என நம் தொன்மம் சொல்கிறது.
இதனையொட்டி ஒற்றைக் கால் கலி என்னும் கவிதை தொகுப்பு.
2 thoughts on “ஒற்றைக் கால் கலி – 3”